பணவீக்கம் என்னும் மோசடி!
............................ரவிக்குமார் எம்.எல்.ஏ
ஒருவர் டீ கடைக்குப் போகிறார். அங்கிருக்கும் கேக் ஒன்றை எடுத்துச் சாப்பிடுகிறார். அதற்கு விலையாக ஐந்து கோடி ரூபாய் நோட்டை எடுத்துத் தருகிறார். கடைக்காரரும் முணுமுணுத்தபடியே வாங்கிக்கொண்டு, மீதி ஒன்றரை கோடி ரூபாய் சில்ல ரையைத் தருகிறார்!
ஐந்து கோடி ரூபாய் நோட்டா?! மண்டை குழம்பு கிறதா?
இது காமெடி சினிமாவிலோ, சயன்ஸ் ஃபிக்ஷன் எதிர்காலக் கதையிலோ வரும் சம்பவமல்ல. ஜிம்பாப்வே நாட்டில் நடக்கும் உண்மைச் சம்பவம். அங்கு பதினைந்து கிலோ உருளைக்கிழங்கின் விலை 26 கோடி டாலர். ஜிம்பாப்வே நாட்டுப் பணத்துக்கும் டாலர் என்றுதான் பெயர். ஆனால், அதன் மதிப்பு மிக மிக மிகக் குறைவு. ஜிம்பாப்வே பணத்தில் ஐந்து கோடி டாலர் என்றால் அமெரிக்காவின் ஒரு டாலருக்கு சமம்.
இப்போது இருக்கும் நிலையே நீடித்தால் அடுத்த தலைமுறையில், இந்தியாவிலும்கூட எல்லோரும் 'கோடீஸ்வரர்கள்' ஆகிவிடலாமோ என்னவோ..! அதுதான் பணவீக்கம் செய்யக்கூடிய ஜாலம்! பணவீக்கம் என்றால் பணத்துக்கு மதிப்பு குறைவது. விலைவாசி உயர்வது. அதன் விளைவு வறுமை... மிக மோசமான நிலைமையில் பட்டினிச்சாவு, உள்நாட்டுக் குழப்பம். இந்தியாவில் 13 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது பணவீக்கம் பதினோரு சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது. இதற்கு முன்பு இதுபோல பணவீக்கம் உயர்ந்த காலத்தில், இன்று பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் அவர்கள்தான் நிதியமைச்சராக இருந்தார். அவருக்கும் பணவீக்கத்துக்கும் அப்படியரு உறவு! அவரைத்தான் நாம் எல்லோரும் தலைசிறந்த பொருளாதார மேதையென்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அவரோடு, இன்னொரு 'பொருளாதார மேதையான' நிதியமைச்சர் ப.சிதம்பரமும் ஜோடி சேர்ந்திருக்கிறார். பிறகென்ன? கேட்கவா வேண்டும்!
உலகில் பணவீக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள முதல் பத்து நாடுகளின் பட்டியலைப் பார்த்தால் அவை யாவும் உள்நாட்டு யுத்தங்களால், ராணுவ கொடுங்கோன்மையால் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். ஜிம்பாப்வே, ஈராக், மியான்மர், உஸ்பெகிஸ்தான், காங்கோ, ஆப்கானிஸ்தான், செர்பியா - இப்படிப் போகிறது அந்தப் பட்டியல். அந்த நாடுகளில் ஜனநாயக ஆட்சி கிடையாது. அமைதி கிடையாது. அங்கு மக்கள் இன்னும் உயிர் பிழைத்திருப்பதேகூட அடுத்தடுத்து கொல்லப்படுவதற்குத்தான் என்ற நிலைமை. இதெல்லாம் இல்லாமலே ஜனநாயக இந்தியா இப்போது அந்த நாடுகளோடு பணவீக்கத்தில் போட்டி போடத் துவங்கியி ருக்கிறது. இப்படியே போனால், அந்த நாடுகளைப் போலவே இந்தியாவும் உள்நாட்டு குழப்பத்தால் சீரழிந்து போகுமோ என்பதுதான் பயமே! பணவீக்கம் ஈராக்கில் 53 சதவிகிதம், ஆப்கனில் 17 சதவிகிதம், செர்பியாவிலோ 15.5 சதவிகிதம். அவற்றோடு இந்தியாவை ஒப்பிடுவது சரியா? நம்முடைய பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பலாம். உண்மையில், நமக்குத் தரப்படுகிற பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் பொய்யானது, மோசடியானது. சரியாகக் கணக்கிட்டால் இப்போது இந்தியாவிலுள்ள பணவீக்கத்தின் அளவு சுமார் 25 சதவிகிதம் வரை இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் இந்தியா, பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் இருக்கிறது என்பதே உண்மை.
இப்போது கூறப்படும் பணவீக்க விகிதம் தவறானது என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று சிலர் கேட்கலாம். நம்முடைய நாட்டில் பணவீக்கத்தை அளவிடுவதற்கு 'மொத்த விலை குறியீட்டு எண்'ணைத்தான் (Whole sale price index - WPI) நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த முறை கிடையாது. அவர்களெல்லாம் 'நுகர்வு விலை குறியீட்டு எண்'ணைத்தான் (Consumar Price Index - CPI) அடிப்படையாக வைத்திருக்கிறார்கள். நம்முடைய நாட்டில் அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கு மட்டும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு பொருளின் உண்மையான விலை என்பது நாம் வாங்கும்போது எவ்வளவு கொடுத்து அதை வாங்குகிறோமோ அதுதான். அந்த விலைதான் விற்பனை விலை அல்லது நுகர்வு விலை ஆகும். அரிசியையே எடுத்துக் கொண்டால், மண்டியில் டன் ஒன்றுக்கு இத்தனை ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதைவைத்து ஒரு கிலோ அரிசியின் விலையை நாம் கணக்கிட முடியாது. கடையில் நாம் வாங்கும்போது எவ்வளவு கொடுத்து வாங்குகிறோமோ அதுதான் அரிசியின் உண்மையான விலை. ஆனால், நம்முடைய அரசாங்கமோ மொத்த விலையைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளுகிறது; விற்பனை செய்யப்படும் விலையை அல்ல. மொத்த விலைக்கும் சில்லரை விலைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும் என்பது நமக்குத் தெரியும். அரசாங்கம் விலைவாசியை இந்த லட்சணத்தில்தான் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது.
1998-99ல் நம்முடைய அரசாங்கமே ஒரு பட்டியலை வெளியிட்டது. 'மொத்த விலை குறியீட்டு எண்' அடிப்படையிலும், 'நுகர்வு விலை குறியீட்டு எண்' அடிப்படையிலும் பணவீக்கத்தை மதிப்பிட்டுப் பார்த்ததில், மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக வைத்து கணக்கிடும் பணவீக்கத்தைப்போல, நுகர்வு விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக வைத்து கணிக்கப்படும் பணவீக்கம் இருமடங்கு இருந்தது தெரியவந்தது. ஆக, தற்போது இந்திய அரசு வெளியிட்டுள்ள பணவீக்க விகிதமான 11.05 சதவிகிதம் என்பது நுகர்வு விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக்கொண்டு கணக்கிடப்பட்டால், நம்முடைய பணவீக்கம் மிக அதிகமாகவே இருக்கும். சரி, இந்த மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான விவரமாவது சரியாகத் தரப்படுகிறதா? அதிலும் ஏகப்பட்ட மோசடிகள். இந்த மொத்த விலை குறியீட்டு எண் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படுகிறது. இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி பார்த்தால், கடந்த ஆறு மாதங்களில் கோழிக்கறியின் விலையில் ஒரு மாற்றமும் இல்லை. உருளைக்கிழங்கின் விலை ஜனவரியில் இருந்ததைவிட நாற்பது பாயின்ட்கள் குறைந்திருக்கிறதாம். முட்டை, மைதா போன்றவற்றின் விலையும் குறைந்துவிட்டதாம். மார்க்கெட்டில் போய் இந்தப் பொருட்களை வாங்குகிறவர்களுக்கு அரசாங்கம் சொல்வது உண்மையா என்பது உள்ளங்கைப் புண்ணாக பளிச்சென்று புரியும்!
பணவீக்கத்தைக் கண்டறிவதற்கான மொத்தவிலை குறியீட்டு எண்ணை அளப்பதற்கு 435 பொருட்களின் விலையைக் கணக்கிலெடுத்துக் கொள்கிறார்கள். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல பொருட்கள் இப்போது மக்களின் பயன்பாட்டில் இல்லாதவை. நம்முடைய பொருளாதாரத்தின் மீது செல்வாக்கு செலுத்துகிற தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இப்போதுள்ள பட்டியல் 1993-94-ம் ஆண்டை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப் பட்டதாகும். மறைந்த முரசொலி மாறன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தபோது எஸ்.ஆர்.ஹஷீம் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தயாரித்து அளித்த பட்டியல் அது. அதன்பிறகு இந்தப் பட்டியல் திருத்தப்படவில்லை. 1993-94-ம் ஆண்டை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப்பட்டியல், வெகுவேகமாக மாறிவரும் இன்றைய பொருளாதாரச் சூழலில் பொருத்தமில்லாததாக மாறிவிட்டது என்பதே உண்மை.
பணவீக்க விகிதத்தைத் தீர்மானிப்பதற்கான இந்த மொத்த விலை விவரங்களை எப்படி சேகரிக்கிறார்கள் என்பது இன்னுமொரு தமாஷ். அதற்கென்று தனியே எந்தவொரு அமைப்பும் கிடையாது. முக்கியமான உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் போன்றவற்றின் விலை விவரம் அரசு அலுவலகங்கள் மூலமாகத் திரட்டப்படுகிறது. மற்ற பொருட்களின் விலைகளை 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்', வர்த்தக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் மூலமாகத் திரட்டுகிறார்கள். முதலாளிகளிடம் விலையைக் கேட்டால் உண்மை நிலவரம் வெளிப்படுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எஸ்.ஆர்.ஹஷீம் தலைமையிலான குழு மறைந்த முரசொலி மாறனிடம் பரிந்துரைகள் சிலவற்றையும் அளித்திருந்தது. வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில் இப்போதுள்ளதுபோல் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மொத்தவிலை குறியீட்டுப் பட்டியலைத் தயாரிப்பது சரியாக இருக்காது. எனவே, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; விலைகள் பற்றிய புள்ளி விவரங்களைத் திரட்டுவதற்கு சுயேச்சையான அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்; பணவீக்கத்தைக் கண்காணிப்பதற்கு நிரந்தரமான நிலைக்குழு (Standing Committee) ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று எஸ்.ஆர்.ஹஷீம் குழு கூறியிருந்தது. இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, பணவீக்கத்தை மதிப்பிடுவதற்கு இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறை சரியல்ல என்றும் அந்தக்குழு கூறியிருந்தது. ஒரு பொருளின் விலையை அது நுகர்வோரால் வாங்கப்படும் இறுதி நிலையில் வைத்துத்தான் கணக்கிடவேண்டுமே தவிர, இடைப்பட்ட நிலையில் கணக்கிடக் கூடாது என்றும் அந்தக் குழு உறுதியாகக் கூறியிருந்தது. தெளிவாகக் கூறினால், இப்போது பின்பற்றப்பட்டுவரும் மொத்த விலை குறியீட்டு எண்ணின் அடிப்படையிலான நடை முறையைக் கைவிட்டு, உலகின் ஏனைய நாடு களில் உள்ளதுபோல நுகர்வு விலையை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கத்தை மதிப்பிடவேண்டும் என்பதே அதற்கு அர்த்தம். ஆனால், இந்த பரிந்துரைகளை இதுவரை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
இப்போதுள்ள பணவீக்கம் மழைக் காலத்துக்குப்பிறகு குறைந்துவிடும் என்று நிதியமைச்சர் கூறி வருகிறார். அது அப்பட்டமான பொய்யே தவிர வேறல்ல. நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டால் வருணபகவானை நோக்கிக் கையைக் காட்டுவது ஒரு நிதி அமைச்சருக்கு அழகல்ல. பிரதமரோ விலைவாசிப் பிரச்னை பற்றி கவலைப்படாமல் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார். அது தன்னுடைய கௌரவப் பிரச்னையென்று பிரதமர் கருதுவதாக செய்திகள் வருகின்றன. பணவீக்கம் இந்த அளவு மோசமாகி வருவதோ, விலைவாசி ஏறுவதோ, அதனால் மக்கள் அவதிப்படுவதோ அவருக்கு கௌரவப் பிரச்னையாக இல்லை. அமெரிக்க எஜமானர்களுக்கு சாதகமாக இருப்பதுதான் கௌரவப் பிரச்னை. இப்படி யரு பிரதமரைப் பெறுவதற்கு நாமெல்லாம் என்ன 'தவம்' செய்தோமோ?!
இப்போதைய பணவீக்கத்துக்கு எண்ணெய் விலை மட்டுமே காரணமல்ல. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே இதற்கு முதன்மையான காரணம். பொதுத்தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இப்படி தாறுமாறாக விலைவாசி ஏறிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், மீண்டும் மக்கள் தமக்கு வாக்களிப்பார்களா என்ற கவலை பிரதமருக்கு இருக்காது. ஏனென்றால் அவர் எந்த மக்களிடமும் கும்பிடு போட்டு ஓட்டு வாங்கி பதவிக்கு வரவில்லை. எனவே, அவருக்கு மக்களின் கஷ்டம் புரியாது. ஆனால், காங்கிரஸில் உள்ள அர்ஜுன்சிங் போன்ற மூத்த அமைச்சர்கள் அப்படி இருக்க முடியாது. அவர்களாவது பிரதமருக்கும், சோனியா அம்மையாருக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும்.
''நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்'' என்ற குறளின் பொருள் மன்மோகன் சிங்குக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதை உணர்ந்த நம்முடைய முதல்வராவது அவருக்கு எடுத்துச்சொல்லக் கூடாதா?
- நன்றி: ஜூனியர் விகடன்
