இஸ்லாம் ஒரு மதமல்ல,மார்க்கம்.அறிஞர் அண்ணா பாகம் 6
கடவுள் தத்துவத்தை யார் யார் பயன்படுத்துகிறார்கள், எப்பொழுது பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். எதையும் கண்டு மருளவோ, மயங்கவோ அச்சப்படவோ கூடாது.யார் என்ன சொன்னாலும், எவர் எப்படி ஆராய்ந்தாலும் அத்தனையையும் தாண்டி ஒரு மார்க்கம் இருக்குமானால் அது தான் நிலைத்து நிற்க முடியும்.சாமான்யர்களின் பேச்சுக்கே ஒரு மதம் நிற்காது என்றால் என்ன அர்த்தம்? நல்ல பொன் என்றால் அது எத்தனை முறை உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக் குறையாது நிற்கும்.
அதைப் போல இஸ்லாமிய மார்க்கம் யாரால் எப்படி எப்படி ஆராயப்பட்டாலும் நிற்கிறது.எனவே எங்களை இந்த விழாவுக்குத் துணிவுடன் அழைத்துப் பேசச் செய்கிறார்கள். வேண்டுமானால் நவாராத்திரி விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டுப் பார்க்கட்டுமே! அதற்குத் தைரியம் இருக்கவேண்டும். இதை நீ யார் நிறுத்துப்பார்க்க என்று கூறக்கூடாது. யார் நிறுத்தாலும் எடை சரியாக இருந்தால் தான் அது சரியானதாக இருக்க முடியும்,சிறந்த மார்க்கம்.
இஸ்லாத்தின் உரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதைவிட இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன.
இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. ஒரு சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகக் கருதி நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன்.இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில் அதில் நல்ல கொள்கைள் இருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது" என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.ஏன் நான் இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது. ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படி இருக்கக் கூடும்? என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து ஆண்டவன் இப்படியிருக்கக்கூடும் என்று சிந்தனை முடிவடைவதில்லை. எனவேதான், பழந்தமிழர் மக்கள் "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்". "பார்த்தவர் சொன்னதில்லை. சொன்னவர் பார்த்ததில்லை" என்று கூறியிருக்கிறார்கள்.
கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணை வைத்தால் ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும். அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும்? யாருக்குத் தெரியும்! அதனால்தான் ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்ற போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான மாற்சரியங்கள் தோன்றின.
