கொலைக்குற்றத்துக்காக ஜார்ஜ் புஷ்ஷை விசாரணை செய்வது எப்படி?
கிருஷ்ணராஜ், அதிக்கரட்டி.
சமீபத்தில் படித்த புத்தகம்?
அந்தப் புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை. ஆனால் புத்தகத்தைப் பற்றிய ஏராளமான பாராட்டு விமர்சனங்களை இணையத்தில் படித்தேன். பெயர் " ஹவ் டு ப்ராஸிகியூட் ஜார்ஜ் புஷ் ஃபார் மர்டர்?" ( கொலைக்குற்றத்துக்காக ஜார்ஜ் புஷ்ஷை விசாரணை செய்வது எப்படி? ) எழுதியவர் அமெரிக்காவின் புகழ் பெற்ற வழக் கறிஞர் வின்சென்ட் புலியோசி. அமெரிக்க சரித்திரத்திலேயே மிகக் கொடூரமான குற்றத்தைச் செய்தவர் புஷ் என்று எழுதும் அவர் ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி (ஈராக்கிடம் அழிவுசக்தி ஆயுதங்கள் இருக்கின்றன') வேண்டுமென்றே தன்னுடைய நாட்டை ஒரு நியாயமற்ற யுத்தத்தில் ஈடுபடுத்திய புஷ் மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் என்கிறார். ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட ஈராக் மக்களோடு, ராணுவத்தை அவசர அவசரமாக எந்தத் தயார் நிலையிலும் இல்லாத நிலையில் அனுப்பியதால் எண்ணற்ற அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டார்கள் என்கிறார் புலியோசி.
யுத்தத்தின் அழிவு பற்றிய எந்த மனசாட்சி உறுத்தலும் இன்றி பல கூட்டங்களில் பொறுப்பற்ற முறையில் பேசியவர் புஷ். யுத்த வேலை காரணமாக கோல்ப் ஆட முடியவில்லை என்றும், யுத்தத்தில் காயம் பட்டவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் தன்னுடைய நாய்க் குட்டியைப் பற்றிப் பெருமையுடன் பேசியதையும் உதாரணம் காட்டுகிறார் ஆசிரியர். புஷ்ஷை வழக்கு விசாரணை மூலம் பதவி இறக்கம் செய்வது மட்டுமின்றி மிகக்கடுமையான தண்டனைகளையும் கொடுக்க வேண்டும் என்கிறார். அமெரிக்க சட்ட விதிகளின் படி பதவியில் இருக்கும்போது புஷ்ஷுக்கு எந்த தண்டனையும் கொடுக்க முடியாது. என்றாலும், பதவியை இழந்தபின் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதற்கான சட்ட சாத்தியங்களை விவரித்திருக்கிறார்.. ஒரு தவறான யுத்தத்திற்கு தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களை பலி கொடுத்த அமெரிக்காவின் ஐம்பது மாநில அட்டர்னி ஜெனரல்களும் புஷ் மீது சட்டப்படி வழக்குத் தொடரலாம் என்றும் வழிகாட்டியிருக்கிறார். தட்டிக் கேட்க ஆளில்லாமல் தறிகெட்டு அலையும் அரசியல் தலைவர்களைத் தண்டிக்க இப்படியெல்லாம் வழிமுறைகள் யதார்த்தத்தில் சாத்தியம் என்றால், எவ்வளவு நன்றாக இருக்கும்.
ஹூம்!
தகவல்: அப்துல் ரஜாக், Chasecom

