பராஅத் இரவும் பித்அத்களும்
ஷஃபான் மாதம் 15ஆம் இரவு நம்மவர்களால் மிக கோலாகலமாக கண்ணியப்படுத்தப்பட்டு இரவாக கொண்டாடப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த இரவை கொண்டாடுவதில் தமிழக மக்களோடு ஆலிம்களும் ஆர்வமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நாளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் காலங்காலமாக நன்மை என்ற பெயரில் சில சடங்குகளையும் நடத்தி வருகின்றனர்.
முன்னோர்கள்களில் சிலர் இதனை உருவாக்கினர் என்பதைத் தவிர குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இவற்றுக்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட ஆராயவில்லை. அதற்காக முயற்சிகளை மேற்கொள்வதுமில்லை. படித்தவர்களின் நிலைமையே இதுவானால் படிக்காதவர்கள் எப்படி உண்மையை உணரமுடியும்?
மூன்று யாசீன்
இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப்பின் மூன்று 'யாசீன்' ஓதி துன்பம் துயரங்கள் நீங்கவும் நீண்ட ஆயுளைப் பெறவும் நிலையான செல்வத்தைப் பெறவும் துஆச்செய்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்த இரவில்தான் 'தக்தீர்' எனும் விதியை நிர்ணயிக்கப்படுகிறது என்ற நம்பிக்கையிலேயே மூன்று யாசீன் ஓதி துஆசெய்யும் வழக்கம் இருந்து வருகின்றது.
ஷஃபான்15ஆம் இரவில் குறிப்பிட்ட சில அமல்களைச் செய்வதற்கு ஆதாரமுண்டா என்றால் திருமறைக் குர்ஆனிலோ, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திலோ, அருமை ஷஹாபாக்களின் செயல்களிலோ, தாபீயீன்கள், நான்கு இமாம்கள் வழிமுறைகளிலோ இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. இப்படிச் செய்வது நன்மையானது என்றால், நம்மைவிட நன்மை செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட சஹாபாக்கள் இதனைச் செய்திருப்பார்கள். பிற்காலத்தில் தோன்றிய சிலர்தான் இதனை உருவாக்கினர். இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் இந்த இரவில் 100 ரக்அத்துக்கள் தொழவேண்டும் என்று கூறியிருப்பதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது.
நன்மைகள் தானே
தொழுவது யாசீன் ஓதுவது துஆ செய்வது போன்றவை நன்மைகள்தானே, அவைகளைச் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று சொல்வது எப்படி? என்று, நம்மில் பெரும்பான்மையினர் பலரும் நினைக்கலாம். சற்று நிதானமாக படித்து சிந்தித்து சரியாக விளங்கிக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர் கூறுகிறார்கள்
"எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அலி (ரழி) அபூதாவூது, நஸயீ)
வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி) ஜாபிர் (ரழி) புகாரீ, முஸ்லிம், நஸயீ)
ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் இன்றைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது மார்க்கமாக இருந்திருப்பின் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்திருப்பார்கள். அவ்வாறு அவர்களால் காட்டித்தரப்படாத ஒரு வழிமுறையை முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமுமின்றி விஷேச இரவு என்று கருதிக்கொண்டு செய்துவருவது அவர்களின் தூதுத்துவம் முழுமைஅடையவில்லை என்று சொன்னது போல் ஆகிவிடும் என்ற அபாயத்தை உணரவேண்டும். எனவே இது போன்ற போலி வணக்கங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் தூதரை எல்லா நிலைகளிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம்.
இந்த பராஅத் இரவு சம்பந்தமாக சில ஹதீஸ்கள் இருப்பதாக சிலர் விளக்கமளிக்கின்றனர். அந்த ஹதீஸ்கள் சரியா என்பதை சற்று பார்ப்போம்.
ஹதீஸ்களில் அறிவிப்பின் நிலை
(1)ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில் "அல்லாஹ் பராஅத் இரவில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடுகளுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று நபி அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்.
திர்மிதியில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸை அறிவிக்கின்ற திர்மிதீ இமாம் அவர்கள், இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று கூறியதாக திர்மிதி இமாம் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் யஹ்யா இப்னு கஸீர் என்பவர் உர்வா என்பவரிடம் இந்த ஹதீஸை செவியுற்றதாக சொல்கிறார். ஆனால் உண்மையில் யஹ்யா என்பவர் உர்வாவிடம் கேட்டதில்லை என்று இமாம் புகாரி அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் ஹஜ்ஜாஜ் என்பவர் யஹ்யா இப்னு கஸீரிடம் கேட்டதாக சொல்கிறார். ஹஜ்ஜாஜ் என்பவர் யஹ்யா இப்னு கஸீரிடம் செவியுற்றதில்லை என்று இமாம் புகாரி (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்கள். எனவே திர்மிதியில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் பலவீனமானது என்பதை இமாம் திர்மிதி அவர்களே புகாரி இமாம் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
(2)இப்னுமாஜாவில் "ஷஃபானில் 15ஆம் இரவில் பகல் பொழுதில் நோன்பு வையுங்கள். இரவில் நின்று வணங்குங்கள் என்று நபி அவர்கள் கூறியதாக அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இப்னுமாஜாவில் இடம்பெற்றுள்ள ஹதீஸும் சரியானது அல்ல. இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள இப்னு அபீசபுரா என்பவர் இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்களும், இமாம் இப்னுஅதி அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். ஏனைய ஹதீஸ் கலா வல்லுனர்கள் இதனை பலவீனமாக்கியுள்ளனர் என்று இப்னுமாஜாவின் ஓரக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(3)ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு, ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு, ஜும்ஆவின் இரவு, இரு பெருநாட்களின் இரவு என்று நபி அவர்கள் கூறினார்கள்.
இதை நபி அவர்கள் அருளியதாக அபூ உமாமா (ரலி) அவர்களின் மூலம் அபூ ஸயீத் பின்தார் என்பவாின் வாயிலாக இப்னு அஸாகீர் அவர்கள் தமது தரீகுத் திமஷ்க் எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிப்பாளர் தொடாில் இடம் பெற்றுள்ள அபூ ஸஈத் பின்தார் என்பவரும் இப்றாஹீம் பின் அபீ யஹ்யா என்பவரும் பொய்யர்கள் என ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்வறிவிப்பு முஸ்னத் பிர்தெளஸ், பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது. இதன் அனைத்துத் தொடாிலும் கோளாறுகள் காணப்படுவதாக ஹதீஸ்கலை அறிஞரான ஷாபிஈ மத்ஹபின் இமாம்களில் ஒருவரான ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் விமர்சித்துள்ளார்கள். ஆகவே, இவ்வறிவிப்பு மறுக்கப்படக் கூடியதாகும்.
ஷஃபான் மாதத்தின் 15ஆம் நாள் இரவு வந்தால் அவ்விரவில் நீங்கள் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் (அல்ஹதீஸ்).
இப்னு அபீ பஸ்ரா என்பவர் இதன் அறிவிப்பாளர் வாிசையில் இடம் பெறுவதால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இமாம்களான அஹ்மத் (ரஹ்), இப்னு முஈன் (ரஹ்) ஆகியோர் இந்த இப்னு அபீ பஸ்ரா என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் எனக் கூறியுள்ளார்கள். மேலும் பராஅத் இரவுத் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ் பாத்திலானது என இமாம் ஹாபிழ் அல் இராக்கீ(ரஹ்) தமது அல்மெளழுஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள். ரஜப் மாதத்தில் மிஃராஜுக்கென உருவாக்கப்பட்ட தொழுகையும், ஷஃபானின் பராஅத் தொழுகையும் இரு பித்அத்களாகும் என இமாம் நவவி (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.
நிச்சயமாக நாம் அ(ல் குர்ஆன் வேதத்)தை பாக்கிய மிக்க இரவில் அருளினோம் (44:02) என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்திலுள்ள 'லைலத்துல் முபாரகா" என்பது ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவான பராஅத் இரவு தான் எனச் சிலர் கூறுகின்றனர். அவர்களின் இந்த கூற்றுக்கு ஆதாரம் ஏதுமில்லை.
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (97:01) என்று அல்லாஹ் கூறுகிறான். அதுபோலவே ரமளான் மாதம் எத்தகையதெனில் அதில்தான் அல்குர்ஆன் அருளப்பட்டது (2:185) என்றும் கூறுகிறான். மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்து குர்ஆன் லைலத்துல் கத்ாில் தான் அருளப்பட்டது என்றும் அது ரமளானில்தான் இருக்கிறது என்றும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அப்படியானால் 'லைலத்துன் முபாரகா' என்பது லைலத்துல் கத்ர் (மகத்தான இரவு) என்பதன் இன்னொரு பெயர்தான் என்பது புலனாகிறது.
அதிகமான நோன்பு நோற்ற மாதம்
நான் நபி அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். (அபுதாவூத், நஸஈ, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா)
ஷவ்வால் ஆறு நோன்வுகள் நோற்பவன் அந்த வருடம் முழவதும் நோன்பு நோற்றவனைப் போலாவான். (முஸ்லிம்)
வியாழன், திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் காட்டப்பட வேண்டுமென நபியவர்கள் விரும்பினார்கள். (திர்மிதி)
ஆஷுரா நோன்பு நோற்பவனுக்கு கடந்த வருடம், எதிர்வரும் வருடம் (என இரண்டு வருடங்களில்) பாவங்கள் மன்னிக்கப்படும். (முஸ்லிம்)
இத்தகைய உத்தரவாதங்கள் கூறப்பட்ட நோன்புகளை முஸ்லிம்களின் அதிகமானோர் அலட்சியம் செய்கின்றார்கள். ஆனால் சரியான சான்றுகளும் உத்தரவாதமும் கூறப்படாத பராஅத் நோன்பை நோற்க ஆர்வம் கொள்கின்றார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய விசயமுமாகும். எனவே, ஷஃபானின் 15ஆம் நாளுக்கு தனிப்பட்ட சிறப்புகள் எதுவும் இல்லை என விளங்கி, நாம் ஷஃபானில் கூடுதலாக நோன்புகள் நோற்று இறையன்பைப் பெறுவோமாக!