அதிரையில் ஒரு ஐ ஏ எஸ் -2
அறிவு என்பது பார்த்து கேட்டு படிக்கும் அனுபவங்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் ஞானமோ முயற்ச்சியும் ஆராய்ச்சியும் உடையவர்களுக்கே கிடைக்கிறது. எந்த ஒரு துறை முன்னோடியும் அதற்குமுன் அந்த அறிவை பெற்றவரில்லை. தாமஸ் ஆல்வா எடிசன் எண்ணை விளக்கை வைத்துக் கொண்டுதான் மின் விளக்கை கண்டுபிடித்தார்.
முழுமையான ஞானம் இறைவனின் புரத்திலிருக்கிறது. அவனே அதன் மறைவான வாசல்களை திறந்து விடுகிறான். இறைவனே மனிதனுக்கு கற்றுக் கொடுத்தான். ஞானத்தை தேடிக் கொள்பவர்கள் இறைவனுக்கு பிரியமானவர்களாயிருக்கிறார்கள்.
நாம் விரும்பும் எந்த ஒரு நன்மையையும் அடைய முதலில் அதைப்பற்றி கனவு காண வேண்டும். பிறகு அதற்காக உழைக்க வேண்டும். நமது இலட்சியத்தை நிர்ணயித்து விட்ட பின் நமது சொல் செயல் எண்ணம் யாவுமே நமது இலட்சியத்தோடு இணைந்திருக்க வேண்ட்டும்.
இரண்டடி எடுத்து வைத்தாலும் இலட்சியத்தை நோக்கியே நடக்க வேண்டும்.
நல்லது. இப்போது ஐ பி எஸ் ஐ ஏ எஸ்ஸை நமது இலட்சியமாக நிர்ணயித்துக் கொண்ட பின் அந்தத் தேர்வில் எப்படி நடத்தப்படுகிறது என்பதை பார்ப்போமா..
ஐ பி எஸ் ஐ ஏ எஸ் தேர்வுக்குள் நுழைய முதலில் யூ பி எஸ் சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வை வெல்ல வேண்டும். இது ஒரு பொதுத்தகுதித்தேர்வு(நுழைவுத்தேர்வு). இதில் வெல்வதற்கு முதலில் இந்த தேர்வு எப்படி நடத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் சில கேள்விகளுக்கு விடை காண்போமா..
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
மிக சுலபம். இதற்கான விண்ணப்பமும் தகவல் புத்தகமும் நாட்டின் அணைத்து தபால் நிலையங்களிலும் கிடைக்கும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை:
Secretary,
Union Public Service Commission,
Dholpur House,
New Delhi - 110011.
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாமா? அதற்க்கு தகுதி ஏதாவது வேண்டுமா?
கீழ்க்காணும் தகதிகள் பெற்ற எவரும் விண்ணப்பிக்கலாம்:
கல்வித்தகுதி:
இந்தியப்பல்கலைக்கழகம் ஏதாவதொன்றில் பட்டப்படிப்ப அல்லது அதற்கு நிகரான படிப்பு. (பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்)
இதர தகுதிகள்:
இந்தியக் குடியுரிமை. (இன்னும் சில அண்டைநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)
ஆகஸ்ட் முதல் தேதியில் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேலும் முப்பது வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் உள்ள யாவரும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு எப்போது நடத்தப்படுகிறது?
தேர்வு அறிவிப்பு (துறைகள் மற்றும் பாடத்திட்டம்) எம்ப்ளாய்மென்ட் நியூஸ், ரோஸ்கர் சமாச்சார், கெஜட் ஆஃப் இன்டியா மற்றும் சில முக்கிய நாளிதழ்களில் டிஸம்பர் மாதத்தில் வெளியாகும். இந்த அறிவிப்பை ஒரு நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முதற் கட்ட தேர்வுகள் மே- ஜுன் மாதங்களிலும் முக்கியத்தேர்வு அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும் நடக்கும். (முதற்கட்ட முக்கிய தேர்வுகள் என்றால் என்ன என்பதை பிறகு பார்க்கலாம்)
ஒரே முயற்சியில் தேறுவது கடினம் என்றால் எத்தனை முறை விண்ணப்பிக்கலாம்?
பொதுவாக ஒவ்வொருவரும் நான்கு முறை முயற்சிக்கலாம்.
தேர்வு எங்கெங்கு நடத்தப்படுகிறது?
சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது.
அடுத்து தேர்வு முறை பற்றி பார்க்கலாம்.
இது ஒரு கடினமான கட்டம். ஓராண்டு காலம் நீடிக்கும் தேர்வு. எனவே முதலில் தேர்வு முறையை புரிந்து கொள்வது நலம்.
மே ஜுனில் நடக்கும் முதற்கட்ட தேர்வு இரண்டு பேப்பர்களை கொண்டது.
பொதுஅறிவு (150 மதிப்பெண்கள்)
விருப்பப் பாடங்கள் (300 மதிப்பெண்கள்)
இது நுழைவுத்தேர்வு போன்றது. ஏராளமான விண்ப்பதாரர்களிலிருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் தகுதித்தேர்வு மட்டுமே. இதன் மதிப்பெண்கள் அடுத்த கட்ட முக்கியத்தேர்வு மதிப்பெண்களோடு சேர்த்துக் கொள்ளப்படாது.
பொது அறிவு மற்றும் விருப்பப் பாடங்கள் என்றால்..
பொது அறிவு தேர்வில் கீழ்காணும் விஷயங்கள் குறித்த கேள்விகள் இடம்பெறும்:
இந்திய அமைப்பு மற்றும் பொருளாதாரம்.இந்திய வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாறு.இந்திய மற்றும் உலக புவியியல்உள்நாட்டு வெளிநாட்டு தற்போதைய நிகழ்வுகள்.தினசரி பொது அறிவியல்புத்தி சாதுர்யம் மற்றுமம் புள்ளிவிபரம்.
இது தவிர..
திட்டம், பட்ஜெட், நலத்திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள் ஆட்சிப் பொறுப்பு கிராம நிர்வாக அமைப்பு, தேர்தல் முறை, இயற்கை வளம், பண்பாடு, வளர்ச்சி விகிதம், கழகங்கள் கமிஷன்கள் முதலியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
பாடத்திட்டம் அதிகமாகவும் சிக்கலாகவும் இருந்தாலும் சுலபமாக தயார் செய்து கொள்ளலாம்.
விருப்பப்பாடத்தில்..
விவசாயம், கால்நடை வளர்ப்பு, தாவரவியல், வேதியியல், சிவில்,மெக்கானிகல், எலக்ட்ரிகல் இஞ்சினியரிங், வணிகவியல், பொருளியல், புவியியல், வரலாறு, சட்டம், கணிதம், மருத்துவம், தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல், மனோதத்துவம், பொது மேலாண்மை, சமூகவியல், புள்ளியியல், விலங்கியல்.
உள்ளிட்ட துறைகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
ஐ ஏ எஸ் தேர்வை சந்திக்க நீங்கள் ஒரு பட்டதாரியாக இருப்பது அவசியம். விண்ணப்பிக்கும் எவரும் தாங்கள் பட்டம் பெற்ற துறையில்தான் ஐ ஏ எஸ் படிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நீங்கள் விரும்பும் எந்தத்துறையையும் உங்கள் விருப்பப் பாடமாக எடுக்கலாம்.
இந்த முதல் கட்ட தேர்வை வெற்றிகரமாக எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்க வேண்டும். முடிவுகள் ஜுலை-ஆகஸ்ட் மாதங்களில் தெரிந்துவிடும். இதில் தேறியவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவீர்கள்.
அடுத்த கட்ட மெயின் எக்ஸாம் ஒன்பது தாள்களை கொண்டது.
1. இந்திய மொழி தகுதித் தேர்வு (கட்டுரை) – 300 மதிப்பெண்கள்
2. ஆங்கிலப் புலமைத் தேர்வு – 300 மதிப்பெண்கள்
3. பொது கட்டுரை தேர்வு (200 மதிப்பெண்கள்)
4. இரண்டு பொது தேர்வுகள் (600 மதிப்பெண்கள்)5. நான்கு விருப்பப் பாடங்கள் (1200 மதிப்பெண்கள்)
இந்த முதல் மற்றும் அடுத்த கட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை http://www.civilserviceindia.com/ என்ற இணையதளத்தில் காணலாம்.
இவ்விரண்டு தேர்வுகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு நேர்காணலுக்கு செல்ல வேண்டும். இந்த இன்டர்வியூவில் உங்கள் ஆளுமை மற்றும் அறிவுக்கூர்மை ஆகியவை சோதிக்கப்படும். பொதுவாக இன்டர்வியூக்களில் அந்தந்த வேலைகளுக்கு நீங்கள் தகுதியானவர்தானா என்று சோதிப்பார்கள். ஆனால் ஐ ஏ எஸ் தேர்வின் இன்டர்வியூவில் அந்தப்பனி உங்களுக்கு ஏற்றதா என்று சோதிக்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்வுகள் உங்கள் விசாலமான அறிவை ஏற்கெனவே நிரூபித்து விட்டதால் இந்த இன்டர்வியூவை சந்திக்கும் மனதிடம் உங்களுக்கு ஏற்கெனவே வந்திருக்கும். எனவே மிகுந்த தன்னம்பிக்கையுடன் இதை நீங்கள் எதிர் கொள்வீர்கள்.
உங்கள் ஆளுமை மற்றும் அறிவால் உங்களை நேர்காண்பவரை கவர்ந்துவிட்டால் நீங்களும் ஒரு வெற்றியாளரே.
கடும் உழைப்பும் விடாமுயற்சியும் மனோதிடமும் கொண்டு சவால்களை சந்திக்கும் இந்த ஓராண்டு கால படிப்பும் தேர்வும் ஒரு வெற்றிகரமான முடிவுக்கு வருகிறது.
அதன் பிறகு உங்கள் இலட்சியப்படி ஐ ஏ எஸ்ஸையோ ஐ பி எஸ்ஸையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
இனி..
இந்தத் தேர்வுகளுக்காக எப்படி நம்மை தயாரித்துக் கொள்வது என்பது பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
ஆக்கம்:அபூஸமீஹா
