நம் முன்னோர்களின் புத்திக்கூர்மை (சிரிக்க அல்ல; சிந்திக்க)
அது ஒரு வறட்சியான கோடைகால அழகிய ரமளான் மாதம். குளங்கள் எல்லாம் நீர் இன்றி வற்றி இருந்த சமயம். நமதூர் செக்கடிப் பள்ளி வெளி வராண்டாவில் தராவீஹ் தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அச்சமயம் தொழ வரும் பெரியவர்களில் சிலர் தராவீஹ் முழுவதும் தொழுத பின்னரோ அல்லது இடையிலோ சற்று களைப்பாற பள்ளி வராண்டாவிற்கு கீழே உள்ள படிக்கட்டு திண்ணையில் அமர்ந்து செல்வது வழக்கம்.
அதுபோல் ஒரு நாள் (தராவீஹ் தொழுகை முடியும் தருணம்) அத்திண்ணையில் சஹீத் அப்பாஸ் ஹாஜியார் அவர்களும், நம்மில் பலர் அன்பாக மாமா என்றழைக்கப்பட்ட மர்ஹூம் உவைஸ் (ஹாஜி சாகுல் ஹமீது மற்றும் யூசுஃப் அவர்களின் தகப்பனார்) அவர்களும் அமர்ந்திருந்தனர்.
தொழுகை நடந்து கொண்டிருந்த அச்சமயம் பள்ளிக்கு வந்த சிறுவர்களில் யாரோ ஒருவன் விளையாட்டாய் பள்ளி ஹவுதிலிருந்து ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து வந்து பள்ளியின் மேல் மூலையிலிருந்து கீழே அமர்ந்திருந்த அவ்விரு பெரியவர்களின் மீது ஊற்றி விட்டான். பிறகு யாரும் அறியாத படி விரைந்து சென்று தொழுகையின் வரிசையில் (நுழைந்து) சேர்ந்து கொண்டான். அச்சமயம் அவ்விரு பெரியவர்களும் தங்களின் சட்டையெல்லாம் நனைந்து கடும் சினங்கொண்டவர்களாக பள்ளிக்கு மேலே வந்து விட்டனர் தங்களின் மேல் தண்ணீர் ஊற்றியவனைப் பிடிப்பதற்காக. உடனே அப்பெரியவர்களில் ஒருவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டுக் கொள்கிறார் "முதலில் இங்குள்ள எல்லாச் சிறுவர்களையும் பிடியுங்கள். பிறகு அவர்கள் யாவரின் நெஞ்சையும் தொட்டுப் பாருங்கள் அதில் யாருக்கு திக்கு, திக்கு என்று அடிக்கிறதோ கண்டிப்பாக அவன் தன் நம்மேல் தண்ணீர் ஊற்றி இருக்க வேண்டும்" என்று யாரும் யோசிக்காத ஒரு உடனடி தீர்ப்பையும் சொன்னார்கள்.
இங்கு நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய விசயம் என்னவெனில் நம் முன்னோர்கள் உலகில் பெரும் குற்றங்களை கண்டுபிடிக்க பிரசித்திப் பெற்றதாக கூறப்படும் CIA, FBI, INTERPOL & SCOTLAND YARD போன்ற அமைப்புகளில் பணியாற்றியவர்கள் அல்லர்.இருப்பினும் அவர்களின் புத்திக் கூர்மையாலும், மதி நுட்பத்தாலும் தான் இன்னும் நம் மனதில் அவர்களுக்கென்ற தனி அந்தஸ்துடன் நீங்கா இடம் பெற்றுள்ளனர். அவர்களைப்போல் நம்மூரில் பல தெருக்களில் வாழ்ந்து மறைந்த எத்தனையோ ஆண்கள் மற்றும் பெண் உத்தமர்கள் யாவரின் கப்ருகளும் இப்புனித ரமளானின் பொருட்டு சொர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆகட்டுமாக! ஆமீன்...
கடைசியில் தான் தெரிந்து கொண்டேன் இப்படித்தான் உலகின் பல குற்றங்களுக்கு உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுகிறார்கள் என்று. இறுதியில் தண்ணீர் ஊற்றிய அச்சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு நியாயமான அடிகள் கொடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டானா? அல்லது மன்னித்து விடுவிக்கப்பட்டானா? என்ற மேலதிக விவரங்களுக்கு சகோ. தஸ்தகீர் அவர்களைத் தொடர்பு கொண்டால் தெரியும் என நினைக்கிறேன்.
என்றும் இனிக்கும் மலரும் நினைவுகளுடன்,
உங்களில் ஒருவன்,
எம்.ஐ. நெய்னா முகம்மது.
