அதிரையில் ஒரு ஐ ஏ எஸ்
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கக்கூடிய ஒரு சில ஊர்களில் அதிரையும் ஒன்று. பொருளாதார நல்வாழ்வுக்கோ பொழுதுபோக்கிற்கோ ஏற்றதாக அமையக்கூடிய எந்த ஒரு ஊருக்கும் சிறப்பும் முக்கியத்துவமும் எப்படியோ வந்து சேர்ந்து விடுகிறது. சிறப்புடைய ஊர்களில் வாழ்வதையே பெருமையாக கூறிக்கொள்ளும் மக்கள் வாழக்கூடிய இந்நாட்டில்தான் சிறப்புக்குறிய மக்கள் வாழ்வதை ஊருக்கே பெருமையாகவும் கூறிக்கொள்கின்றனர். பல நூற்றாண்டு பாரம்பரியமிக்க அதிரைகென்று ஏதாவது சிறப்புள்ளதா? அதிரையில் வாழ்வதில் ஏதும் பெருமையிருக்கிறதா? அல்லது பெருமைக்குரிய மக்கள் யாராவது அதிரையில் வாழ்ந்தனரா? வாழ்கின்றனரா? கடந்த காலத்தை பின்நோக்கிப் பார்க்கும்போது எம் கே எம் நிறுவனத்தின் கல்வி அறக்கட்டளை மட்டுமே அதிரைக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் தெரிகிறது. இவ்வறக்கட்டளையின் சமகாலத்தில் துவங்கப்பட்ட பல கல்விச்சாலைகள் இன்று பல்கலைக்கழக அந்தஸ்தில் உயர்ந்துள்ளன. ஆனால் அதிரையிலோ இன்னும் கல்லூரியே முழு வளர்ச்சியடையாத நிலையிலிருக்கிறது. இது ஒருபுறமிருக்க இக்கல்வி நிறுவனத்தில் பயின்ற உள்ளூர்வாசிகள் யாராவது நாடறிந்த பெரிய பதவிகளை வகித்துள்ளார்களா? பெரும்பதவிகளை விடுங்கள் குறைந்த பட்சம் எத்தனைபேர் அரசுத்துறைகளில் அதிகாரிகளாகப் பணியாற்றுகின்றனர். அதையும் விடுங்கள் அரசு ஊழியர்கள்தான் எத்தனை பேர்? எண்ணிப்பார்த்தால் வருத்தமே மிஞ்சுகிறது. பாரம்பரியமிக்க இவ்வூரில் அத்தகுதிகள் யாருக்கும் இல்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது. ஆனால் அரசுப்பதவிகளை யாரும் பெரிதென நினைப்பதில்லை.
முன்பு வளைகுடா நாடுகளிலும் இன்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் புழங்கும் செல்வத்தை தேடி ஓடும் நம் மக்கள் இந்தியாவில் செழிக்கும் செல்வத்தை அறிவதில்லை. நூறு கோடி மக்களில் முதியோர் பெண்கள் குழந்தைகள் என்று முக்கால் கோடியை கழித்தாலும் மீதி கால் கோடிப்பேர் இங்குதானே சம்பாதிக்கின்றனர். அத்தனை பேருமா வெளிநாட்டுக்கு ஓடுகின்றனர். உள்நாட்டிலேயே அவர்கள் உழைத்து தொழில் செய்து உலக வரிசை செல்வந்தர்கள் ஆகவில்லையா? ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இந்நாட்டில் ஒரு அடையாளமும் அங்கீகாரமும் இருக்கின்றது. அதைக்கொண்டு அச்சமுதாயங்கள் நாட்டின் வளத்தில் தங்கள் பங்கை அனுபவிக்கின்றனர். அதற்க்கு வாய்ப்பளிக்கவும் வழிகாட்டவும் அரசு நிர்வாகத்தில் அச்சமுதாயத்திலிருந்து அறிவும் திறமையுமுள்ளவர்கள் பங்காற்றுகின்றனர். அடையாளமோ அங்கீகாரமோ இல்லாத ஒரு சமுதாயம் உண்டென்றால் அது தமிழக முஸ்லிம் சமுதாயம்தான். வாழ்வாதாராங்கள் குறைந்த முஸ்லிம் ஊர்களில் அன்றாட உணவுக்கே அல்லாடுபவர்களை விட்டுவிடுவோம், குடும்பத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தி பணம் தேடிச்சென்ற தற்கால முதல் தலைமுறையையும் விட்டுவிடுவோம், ஆனால் இரண்டு மூன்று தலைமுறைக்கு சொத்திருக்கும் குடும்பத்தினர் கூட வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க என்ன அவசியம் வந்தது? தன்நிறைவடைந்த குடும்பங்களில் கூட உயர் கல்வியும் உயர்பதவியும் அடையவேண்டும் என்ற ஆசை இல்லையே. கடந்த இருபத்தைந்தாண்டுகளில் அதிரை எத்தனையோ மடங்கு முன்னேறியிருக்கிறது.
மக்கள் கூடி அரட்டையடிக்கும் செக்கடி மேடு கமால் கடை கார்னர் தற்போது வண்டிப்பேட்டை போன்ற பகுதிகளில் எங்காவது என்றாவது உயர்கல்வி உயர்பதவி என்ற வார்த்தை புழங்கியிருக்கிறதா? அமெரிக்காவுக்கு எவ்வளவு ஆஸ்திரேலியாவுக்கு எவ்வளவு என்ற கணக்குகள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. எந்த ஒரு விஷயமும் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட வேண்டும். அதை யாராவது முதலில் செய்ய வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் அதை பின்பற்ற நினைக்கிறார்கள். முன்பு மன்னடியில் ஒருவர் லுங்கி கடை வைத்தால் ஆறுமாதம் கழித்து பார்த்தால் ஒரு நூறு பேராவது லுங்கி வியாபாரத்தில் நுழைந்திருப்பார்கள். இப்படியே டிராவல்ஸ் எண்ணெய் கடை என்று சொல்லிக் கொண்டே போகலாம். அது போன்ற ஒரு தூண்டுதலை ஏற்படுத்தவே இந்தக் கட்டுரை.
நமது தாய் தந்தையரைப் போலல்லாமல் நம் சமுதாயத்தின் மூத்த தலைமுறை இளைஞர்களாவது தமது தம்பி தங்கை மகன் மகள் ஆகியோரை ஐ ஏ எஸ், ஐ பி எஸ் போன்ற பெருமைக்குறிய மனிதர்களாக்கி அதிரைக்கு பெருமை சேர்க்க முன் வர வேண்டும். ஐ ஏ எஸ் என்றால் என்ன? ஐ பி எஸ் என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்ன? ஐ ஏ எஸ் - இந்தியன் அடமினிஸ்ட்ரேஷன் சர்வீஸ் (இந்திய மேலாண்மை பணி) ஐ பி எஸ் - இந்தியன் போலீஸ் சர்வீஸ் - (இந்திய காவல்துறை பணி) இந்த பதவிகளை வகிப்பதன் மூலம் நீங்கள் அரசாங்கத்தில் ஒரு அங்கம் ஆவீர்கள். சாதாரண பொதுமக்கள் அரசு நிர்வாக முறைகள் தெரியாமல் விளங்காமல் வெளியிலிருந்து அங்கலாய்கிகின்றனர். ஆனால் நீங்கள் அரசு நிர்வாகத்தின் உள்ளே நுழைகிறீர்கள். நடைமுறைகள் திட்டங்கள் சலுகைகள் உட்பட எல்லாவற்றையும் அறிந்து அலச முடியும். இன்னும் சொல்லப்போனால் ஆட்சியும் அதிகாரமும் கொண்டு 'YOU CAN CHANGE THE SYSTEM..!' (பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் பதவிக்கு முட்டி மோதும் நம் மக்கள் அதைத்தான்டி ஏன் யோசிப்பதில்லை?) எத்தனை அரசு நலத்திட்டங்கள் நம் மக்களை சென்றடைந்துள்ளன. அரசின் உதவி தேவையில்லாத அளவுக்கா நம் மக்கள் தன்னிறைவடைந்து விட்டனர். வங்கிக்கடன் கல்விக்கடன் விவசாய மானியம் பெற்றவர்கள் நம்மில் எத்தனைபேர்? இதை பற்றிய அறிவாவது நமக்கு இருக்கிறதா? நம்முள் ஒருவராவது அரசு இயந்திரத்தின் ஒரு அங்கமாக இருந்தால் இந்த சலுகைகளின் பலன்கள் நம்மை வந்து சேராதா? ஐ பி எஸ் பதவியும் காவல் துறையில் மதிப்பு மிக்க தகுதியாகும். இத்துறையில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள பதவிகளில் பெரும்பாலும் ஐ பி எஸ்களே அமர்த்தப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான இஞ்சினியர்களும் டாக்டர்களும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளும் நிறைந்த அதிரையில் ஒரே ஒரு போலீஸ் அதிகாரியாவது இருக்கின்றாரா? அட கைசேதமே..! போலீஸாரின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் அடக்குமுறைக்கும் அதிரை மக்கள் எத்தனை முறை ஆளாகியிருக்கிறோம்? சந்தேக கேஸ் தொடங்கி கலவர கேஸ் முதல் தீவிரவாதம் வரை எத்தனை குற்றச்சாட்டுகள்? ஏன்? எதற்கு? எப்படி? என்று ஏதாவது தெரியுமா? (இது தொடர்புடைய துறையான சட்டத்துறையிலும் நமது சார்பாக எந்தப்பங்களிப்பம் இல்லாமல் போனது துரதிஷ்டமே!) சரி இனியும் புலம்பிக் கொண்டிருக்காமல் விஷயத்திற்கு வருவோம்.
ஐ பி எஸ் ஐ ஏ எஸ் பணிகள் ஆட்சியதிகாரம் என்ற வட்டத்துக்கு வெளியிலிருந்து பார்க்கையில் ஒரு சுவாரசியமான வேலையுமாகும். வேலை செய்து சம்பாதித்து பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களுக்கு இது எவ்விதத்திலும் உகந்ததல்ல. மாறாக சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு மிகச்சரியான தேர்வு இத்துறையே! அரசு வழங்கும் ஊதியம், உபரியான வசதிகள் மற்றும் சலுகைகளைக் கொண்டு கண்ணியம் கவுரவம் மற்றும் கம்பீரமாக வாழ முடியும். ஐ பி எஸ் ஐ ஏ எஸ் ஆவது அத்தனை சுலபமல்ல. ஓராண்டுகாலம் நீளும் மிகக்கடும் போட்டியும் சவால்களும் நிறைந்த தேர்வை சந்திக்க வேண்டும். ஒரே முயற்சியில் இத்தேர்வை வென்றவர்கள் மிகக்குறைவு. தேர்வில் வென்றாலும் அதிக மதிப்பெண் பெறுபவர்களே இப்பதவிகளை வகிக்க முடியும். தேர்வு விபரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை இதன் தொடர்ச்சியில் பார்க்கலாம்.
ஆக்கம்: அபூஸமீஹா