என் பசுமையான (சிறு வயது) ரமளான் மாத நினைவுகளிலிருந்து.
அதிரை எக்ஸ்பிரசின் அன்பான வாசக சகோதர, சகோதரிகளுக்கும் என் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் மற்றும் புனித ரமளான் வாழ்த்துக்களை நேரடியாக கூறமுடியாவிட்டாலும் உள்ளத்தில் உருவாகும் அந்த அன்பு கலந்த பரவசக் காற்றை இப்பாலைவன பூமியில் கரையச்செய்கின்றேன். என் இனிய (பழைய) வசந்தகால ரமளான் நினைவுகளிலிருந்து. நோன்பு 17ம் நாள் "பதுருப்படை" ரொட்டி, தேங்காய் மற்றும் திண்பண்டங்கள் சேகரிப்பிற்காக நம்மூரில் வீடுவீடாக படையெடுத்துச் சென்றதும்; அதில் வெற்றி வீரர்களாய் பொட்டி நிறைய திண்பண்டங்களை முஹல்லாப்பள்ளிக்கு கொண்டு வந்து சேர்த்ததும் நம் இனிய ஞாபகங்களிலிருந்து மறைந்து போகுமா? நோன்பு திறக்கும் சமயம், பள்ளிகளில் கஞ்சிக்குள் வாடா, சம்சாவை அமிழ்த்து வெகுநேரம் மீனுக்காக உற்று நோக்கி காத்திருக்கும் கொக்கு போல கஞ்சிக் கலையானையே பார்த்திருந்த/காத்திருந்த நினைவுகளை நம்மில் யார் தான் மறக்க முடியும்? நம் பள்ளிகளில் "நகரா" அடிக்க வாய்ப்புகள் கிடைத்து விட்டால் ஏதோ முழு வாழ்க்கையிலும் வெற்றி பெற்று விட்டதாக அப்படியொரு சந்தோசம்.... நோன்பு காலங்களில் பகல், இரவுக் காட்சிகளாக விளையாடி மகிழ்ந்த கண்டு விளையாட்டுகளும், தொட்டு விளையாட்டுக்களும், கிளித்தட்டு, கேரம் போர்டு விளையாட்டுக்களும் அடிக்கடி நினைவில் வந்து பரவச மூட்டிச் செல்கின்றன. நோன்பு திறக்கும் சமயம் வரை, நம்மூர்க்குளங்களில் கண் சிவக்க குளித்துக் கும்மாளமிடுவதால் காது, மூக்கு வழியே உடலில் தண்ணீர் சென்றால் நோன்பு முறிந்து விடும் என்பது கூட அறியாத பருவம் அது. சிறு வயதில் "தலை" நோன்பு பிடித்தால் மாலையிலே நம் உடலில் தங்க மாலைகள் அணிவிக்கப்பட்டு நம் உறவினர்களின் வீடுகளுக்கு பண வசூல் வேட்டைக்காக சென்றதெல்லாம் உங்களில் யாருக்கேனும் ஞாபகம் வருகிறதா? |
அன்று நம்முடன் விளையாடிக் களித்த நம் நண்பர்களில் எத்தனையோ பேர் இன்றில்லை (உலகில்) நம்முடன். அவர்கள் யாவரின் கப்ருகளும் இந்த புனித ரமளானின் பரக்கத் கொண்டு சொர்க்கத்தின் பூஞ்சோலையாக பிரகாசமளிக்கட்டுமாக. |
இவ்வுலகில் நம்மை பல சூழ்நிலைகள் அடித்தாலும், உதைத்தாலும், விரட்டி அடித்தாலும், வாட்டி வதக்கினாலும், வறுத்தெடுத்தாலும் நிச்சயமாக நாம் இறுதியில் நம்மைப் படைத்தவனிடமே மீளக் கூடியவர்களாக இருக்கிறோம். |
|
நாம் விடிகாலையிலிருந்து அந்தி மாலைப்பொழுதுவரை உண்ணாமல், பருகாமல், பல நல்ல காரியங்களையும் செய்து வருகிறோம். எனவே நம்மைப் படைத்த இறைவனே நமக்கு நேரடியாக கூலி வழங்குவதாக குர்'ஆனிலே வாக்களித்துள்ளான். |
இந்த புனித ரமளானின் வணக்க வழிபாடுகளில் கேட்கப்படும் உங்களின் பிரத்யேக துவாக்களில் இந்த அன்பு சகோதரனையும் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் உங்களின் உறவினன்னாக கேட்டுக் கொள்கிறேன். பாலைவன பூமியில் வாழ்ந்தாலும்; உள்ளச் சோலைவனத்தின் தென்றலாய் உலாவரும் உங்களின் அன்பு நினைவுகளுடன். எம்.ஐ. நெய்னா முகம்மது |
|
