ரமலான்!பசுமை நிறத்தில் ஒளிரும் எம்பயர் ஸ்டேட் பில்டிங்
அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டடமான எம்பயர் ஸ்டேட் பில்டிங், புனித ரமலான் தினத்தையொட்டி இன்றும், நாளையும் பசுமை நிறத்தில் ஒளிரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டடம் என்ற பெயர் நியூயார்க் இரட்டை கோபுரத்திற்கு இருந்தது. ஆனால் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அந்தக் கட்டடம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து எம்பயர் ஸ்டேட் கட்டடம், மீண்டும் அமெரிக்காவின் உயரமான கட்டடம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.இந் நிலையில், நாளை உலகெங்கும் ரமலான் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி முஸ்லீம் சமுதாயத்தினரை கெளரவிக்கும் வகையில், எம்பயர் ஸ்டேட் கட்டடம் பசுமை நிறத்தில் ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் எம்பயர் ஸ்டேட் கட்டடம் பசுமை நிறத்தில் ஒளிரும்.ரமலானுக்காக எம்பயர் கலர் மாறுவது இது இரண்டாவது ஆண்டாகும்.
மேலும், பல்வேறு நாடுகளின் முக்கிய நிகழ்ச்சிகள், அமெரிக்காவின் முக்கிய தினங்கள், உலகளவிலான முக்கிய நிகழ்வுகளின்போது எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உயர் கோபுர விளக்குகள் அதற்கேற்ற நிறத்தை வெளிப்படுத்துவது வழக்கம்.கடந்த ஆகஸ்ட் மாதம் மன்ஹாட்டனில், இந்தியா தின பரேட் நடந்தபோது, இந்தியாவின் தேசியக் கொடியைக் குறிக்கும் வகையில் மூவண்ணம் ஒளிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம் 1454 அடி உயரமுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம் அலுவலக வளாகம் ஆகும். நூற்றுக்கணக்கான அலுவலகங்கள் இதில் உள்ளன. உலகின் மிகப் பெரிய அலுவலக வளாகம் என்ற பெயரும் இதற்கு உண்டு.
