மனம்விட்டு...(மெகா பெண்மணிகள்!)
சென்ற ரமழானில் முஸ்லிம்கள் மீதான தினமல(ர்) நாளிதழ் விஷமத்தனத்தை தோலுரித்துக் காட்டிய அதிரை எக்ஸ்ப்ரஸும் அமீரக இணைய நிறுவனமான எதிசாலாத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதால் தற்போதெல்லாம் அதிகம் அதிரை நடப்புகளை உடனுக்குடன் துபாயிலிருந்து கொண்டு அறிய முடிவதில்லை.தள முகவரியை மாற்றி அதிரை-எக்ஸ்ப்ரஸ் அமீரக அதிரைவாசிகளுக்கு கிடைக்க எக்ஸ்ப்ரஸ் டீம் ஆவண செய்ய வேண்டுகிறேன்.
அப்புறம், அதிரை எக்ஸ்ப்ரஸ் வெறும் அரட்டை எக்ஸ்ப்ரஸாக இல்லாமல் அவ்வப்போது பயனுள்ள உள்ளூர் மற்றும் பொதுவான செய்திகளை பதி(கிர்)ந்து வருவது மகிழ்வளிக்கிறது. எழுத்தாற்றாலும் கருத்துச் சிந்தனையும் மிக்க பலர் அதிரை எக்ஸ்ப்ரஸில் சமீப நாட்களில் எழுதி வருவது மேலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. (அடச்சக்கென்னாடான்னா:)
சகோதரர்கள் நெய்னா,கவிஞர் தஸ்தகீர்(?!;)),ஜாஹிர் ஹுசைன் போன்றோர் அதிரை எக்ஸ்ப்ரஸை நன்கு பயன்படுத்தி வருவது கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. (நமக்குத்தான் பொசுப்பு (புசிப்பு?) இல்லை ;)
சரி, மனம்விட்டுச் சொல்ல (எழுத) வந்த விசயம் என்னவெனில், கேபிள்டிவி, மெகா தொலைக்காட்சிகளால் நமதூர் மட்டுமின்றி பெரும்பாலான ஊர்களில் பெண்கள் முக்கால்வாசி ஓய்வு நேரங்களைச் செலவிடுகின்றனர். வருந்தத்தக்க விசயம் என்பது ஒருபக்கம் என்றாலும், இதனைக் கண்டிக்கும் நம்மவர்கள் மாற்று ஏற்பாடு செய்யால் இருப்பதே, இதிலிருந்து இல்லத்தரசிகளை மீட்க முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம் என்பது என் கனிப்பு.
பின்தூங்கி முன்னெழுந்து, பெட்காபி, பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்தல், காலைப்பசியார ஏற்பாடு, குடிதண்ணீர் பிடித்தல், மாப்பிள்ளைக்கு வெள்ளை வேட்டி,யை சரியான அளவில் உஜாலா போட்டு கழுவிக் காயவைத்தல், பகல் பசியாற மீன் கழுவி, காய்கறி நறுக்கி, பப்படம், முறுக்கு வத்தல் பொரித்து, மாலை லுஹர் தொழுகையை அஸர் தொழுகைக்கு முன்னதாகத் தொழுது, முஸல்லாவில் சிறிது உறங்கியபோது பால்காரர் மணியோசைகேட்டு பதறி எழுந்து பால் வாங்கிக் காய்ச்சி வைத்து, பூனை குடித்து விடாமல் அடுப்படியைப் பூட்டி வைத்து தேனீரோடு கையிருப்பிலுள்ள பூவடை / பணியானையும் பரிமாறி,ஸ்கூல் விட்டு வந்த பிள்ளைகளை டியூசனுக்குத் தயார் படுத்தி ஒருவழியாக மஃரிப்புடன் இஷாவையும் தொழுது,ஹோம் ஒர்க் செய்து பாயில் தூங்கிப் பட்டா பட்டினை கிடக்கும் பிள்ளைகளுக்கு சாப்பாட்டையும் ஊட்டி, கணவனுக்கும் கடப்பாசியுடன் பசியார செய்துவரும் தாய்மார்கள் நமதூரில் இருக்கிறார்கள் என்பது ஆறுதலான விசயம்.
நான் சொல்ல வருவது என்னவென்றால் இப்படியாக பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் பணிவிடைசெய்து தேய்ந்து துரும்பாய்ப்போன தாய்மார்கள் மனம் அழுத்தத்திற்கு ஆளாகி அவ்வப்போது தன்னைச் சார்ந்தவர்களுடன் கடுகடுப்பாக நடக்கிறார்கள்.என்ன பொம்பளை!இப்படி எதற்ககெடுத்தாலும் எரிந்து விழுகிறாளே என்று சும்மா கடிந்து கொள்ளாமல், உடல், பொருள்,ஆவி கொடுத்து மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும் ஆயுட்கால பணிவிடையாளர்கள் கொஞ்சம் மனம் அமைதிபெற சில ஏற்பாடுகளைச் செய்யலாம்.
நமதூரில் நடக்கும் கந்தூரிகள் மார்க்க விரோதம் என்று ஒப்புக் கொள்ளும் பெண்களேகூட அப்பச்சட்டி,இடியப்பத் தட்டு வாங்குவதற்கு கந்தூரி இரவுக் கடைகளை நாடுகின்றார்கள். கந்தூரியை ஒழிக்க வேண்டும் என்று சாட்டிலைட் சானல்களில் பயான் செய்தும், குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் செய்யவும் அழைக்கும் இயக்கத்தினர் இதுபோல் பெண்களுக்காக ஏதேனும் பள்ளிக்கூடத்தை விடுமுறை நாட்களில் வாடகைக்கு எடுத்து மாதந்தோறும் அல்லது சீஸனுக்கு ஒருமுறை பொருட்காட்சி நடத்தலாம்! இரண்டுபார் அருணா சோப்பு வாங்கினால் ஒரு அழகிய பூப்போட்ட கண்ணாடிக் கிளாசைக் கரகாட்டம் நடத்தாமல் விற்கலாமே!
உள்ளூர் ஷாப்பிங் மூலம் கந்தூரிக்குச் செல்வது, பட்டுக்கோட்டைக்கு கொளுசு வாங்கச் செல்வது போன்றவை தவிர்க்கப் படுவதோடு மொத்தக் கொள்முதல்செய்து நுகர்வோர் இடம்வந்தே சந்தையிடுவதால் கனிசமான இலாபமும் கிடைக்கும். தனி நபர்கள் செய்யா விட்டாலும் சமூக ஆர்வமுள்ள வியாபாரிகள் கூட்டாகச் சேர்ந்து செய்யலாம். நமதூர் வியாபாரிகள் இவ்விசயத்தில் கவனம் செலுத்தத் தவறியதால் வெளியூர் வியாபரிகள் வந்து கடைவைப்பதோடு, கன்னியர் மனதையும் கெடுப்பது (இது சம்பந்தமாக அதிரை எக்ஸ்ப்ரஸில் முன்பு ஒரு கட்டுரைகூட வெளியானது!)தவிர்க்கப்படும்!
முஸ்லிம் முன்னேற்றத் தவ்ஹீது+அரசியல் ஜமாத் வெள்ளிக்காரர்கள் இதில் கவனம் செலுத்தலாம் என்பதே இப்பதிவில் மனம்விட்டு நான் சொல்ல விரும்பியது!மாற்று /சார்புக் கருத்துக்களை பின்னூட்டவும்.
<<<அபூஅஸீலா-துபாய்>>>