என்ன நடக்குது காஷ்மீரில்...? பாகம் -1
காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ‘பூலோக சொர்க்கம்’ என்று இன்னொரு பெய ருண்டு. சுற்றிலும் வெள்ளிப் பனிமலை கள், நகரின் பெரும் பகுதியை விழுங்கி நிற்கும் ‘டால்’ ஏரியில் மிதக்கும் படகு வீடுகள், எங்கும் குடை பரப்பி நிற்கும் சினார் மரங்கள், கிரிக்கெட் மட்டைகள் செய்யப் பயன்படும் வில்லோ மரக் காடுகள், பள்ளத்தாக்கினூடே ஊடறுத் துப் பாயும் ஜீலம் மற்றும் லிட்டர் நதிகள், சாலையின் இரு புறங்களிலும் அழகாக வெட்டி வளர்க்கப்பட்ட குங்குமப்பூ பாத்தி கள், கூரிய நாசியும், நெடிய உருவமும் கொண்ட ஆண்கள், ரோஜா மலர்களை ஒத்த கள்ளம் கபடமற்ற அழகிய பெண் கள்... இதுதான் காஷ்மீர். அப்படித்தான் நாம் புத்தகங்கள் வாயிலாக அறிந்துள் ளோம்.
நேரில் பார்த்த போதுதான் இந்தப் பூலோக சொர்க்கம் இன்று பூலோக நரக மாக ஆக்கப்பட்டுள்ளதை அறிய முடிந் தது. ஒவ்வொரு பத்தடிக்கும் இரண்டு இராணுவ வீரர்கள், கையில் ஏ.கே.47, எஸ்.எல்.ஆர்., என நமக்குப் பெயர் தெரியாத இன்னும் என்னென்னவோ ஆயுதங்களை வைத்துக் கொண்டு நிற்கும் காட்சிகள். இவை தவிர பங்கர் களுக்குள்ளிலிருந்து எட்டிப் பார்க்கும் துப்பாக்கி முனைகள், விர்ரிட்டுப் பறக்கும் வாகனங்களினூடாக வெளியே துருத்திக் கொண்டிருக்கும் பைனட் கள்... நூறு துப்பாக்கி முனைகட்டு நடுவே நடப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றன. சில நாட்களுக்கு முன்னர் இராணுவத் தாக்கு தலுக்குள்ளான ஒரு கிராமத்திற்கு நாங் கள் அழைத்துச் செல்லப்பட்டோம். ஷியா பாத் என்பது அந்தக் கிராமத்தின் பெயர். ஸ்ரீநகரிலிருந்து ஆனந்த்நாக் போகும் வழியில் த்ரால் என்னும் சிறு நகரில் இடப்புறமாகத் திரும்பிப் போனால் உள்ளே உள்ள ஒரு கிராமம் அது. ஆப்பிள் தோட் டங்களினூடாக எங்களின் இரு வாகனங் களும் மெதுவாகச் சென்று கொண்டிருந்த போது மூன்று இராணுவ முகாம்களைக் கடக்க வேண்டியிருந்தது. இது எல் லைக் காவல்படை (க்ஷளுகு) முகாம்; இது சி.ஆர்.பி.எப். முகாம், இது ராணுவ முகாம் என ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டிச் சொல்லிக் கொண்டே எங்கள் டாடா சுமோவை ஒட்டிக் கொண்டிருந்தார் அந்த ஓட்டுநர்.
எங்கள் குழுவில் ஒரு ஆவணப் படத் தயாரிப்பாளரும் இருந்தார். மேற்கு வங்கத்துக்காரர் சிதாங்ஷு என்பது அவர் பெயர். யாரு டனும் பேசமாட் டார். தானுண்டு தன் காமிரா உண்டு என காணும் ஒவ் வொன்றையும் படம் எடுத்துத் தள்ளுவார் அவர். டிஜிட்டல் காமிரா தானே ஃபிலிம் வீணாகும் என்ற கவலையும் இல்லை. அவருடைய காமிரா லென்ஸ் எங்கள் வண்டியின் ஜன் னல்வழியா முகாமை நோக்கித் திரும்பியபோது, பதறிப் போனார் ஓட்டுனர். “என்ன காரியம் செய்தீர்கள்? அதோ நிற்கும் `சென்ட்ரி`களில் யாருடைய கண்ணிலா வது பட்டால் யார் என்ன என்று விசாரிக் காமல் படபடவென சுட்டுப் பொசுக்கி விடுவார்கள்’’ எனச் சொன்ன போதுதான் எங்களுக்கு உறைத்தது.
ஷாபாத் ஒரு மலை அடிவாரக் கிராமம். சாலைகள் கூடக் கிடையாது. சுமார் 2 கி.மீ. தொலைவில் வண்டியை நிறுத்தி விட்டு குறிப்பு நோட்டையும், காமிராவை யும் மட்டும் எடுத்துக் கொண்டு, குளிரில் நடுங்கிக் கொண்டே நடந்துதான் போனோம். கோதுமையை அறுத்து போரடித் துக் கொண்டிருந்தார்கள். அசல் காஷ்மீரத்துக் கிராமம். தொள தொளவென அங்கிகள் அணிந்திருந்த சிறுவர்கள் எங்களை வேடிக்கைப் பார்த் தார்கள். மண் சுவர்கள், மரத்தாலான மாடிகள். ஜன்னல்கள் வழியே எட்டிப் பார்த்த பெண்களை தயக்கத்துடன் புகைப்படம் எடுத்த போது, அவர்கள் தயங்கவில்லை. ஸ்ரீநகர் பார்கவுன் சில் செயலாளரான வழக்குரைஞர் ஷஹீன் என்பவர்தான் எங்களுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்று கொண் டிருந்தார்.
நடுக் கிராமத்தில் நெருக்கமான வீடுகளுக்கு மத்தியில் ஒரு புல்டோசர் உழுது கொண்டிருந்தது. இங்கென்ன விவசாயம் நடக்கிறது என்று பார்த்தால் இடிந்து மன்னோடு மன்னாகிக் கிடந்த இரு வீடுகளை புல்டோசர் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவைக் கண்டவுடன் ஊர் மக்கள் ஆண்களும், பெண்களும் சிறுவர்களுமாக சூழ்ந்து கொண்டனர். இடிந்த வீடுகளில் ஒன்றின் உரிமையா ளர் குலாம் ஹாஸன்பட்டை இராணுவம் கைது செய்து கொண்டு போயிருந்தது. அவரது சகோதரர் முகமது பட் எங்க ளிடம் பேசினார். அன்று அக்டோபர் 7ம் தேதி. செப்டம்பர் 29ந் தேதியன்று சுமார் 1000 பேரடங்கிய ஆயுதம் தாங்கிய ஒரு பெரும் படை அந்த கிராமத்திற்குள் புகுந்துள்ளது. அதற்கும் முந்தைய இரண்டு வாரத்தில் பலமுறை தீவிரவாதி களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் பலமுறை அக்கிராமம் சுற்றி வளைக்கப் பட்டு (ஊடிசனநநேன) சல்லடைத் தேடல் நடந்துள்ளது. இம்முறை இன்னும் பெரிய படை. வந்தவுடன் அருகிலுள்ள வீடுகள் எல்லாவற்றையும் காலி செய்யச் சொல்லி உத்தரவிடப்பட்டது. எல்லோரும் ஓடியிருக் கிறார்கள். நகை, பணம், கோதுமை, கோழி, ஆடுகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள். சற்று நேரத்தில் மிகப்பெரிய வெடிச் சத்தம்.
அடுத்த நாள் படை வீரர்கள் இடி பாடுகளுக்கிடையிலிருந்து ஒரே ஒரு உடலை மட்டும் கண்டெடுத்துக் கொண்டு குலாம்ஹாசனையும் கைது செய்து கொண்டு வெளியேறிய பின் மக்கள் திரும்பி வந்து பார்த்த போதுதான் இரண்டு வீடுகள் தரைமட்டமாகிக் கிடந்ததைக் காண முடிந்தது. அருகிலி ருந்த வீடுகள் எல்லாம் வெடி அதிர்ச்சி யில் விரிசல் விட்டிருந்தன. நாங்கள் சென்றபோது உடைந்த சுவர்களை அவர்கள் செப்பனிட முயற்சித்துக் கொண்டிருந்தனர். இழுத்துச் சென்ற உடல் ஜெய்ஷே முஹம்மத் அமைப்பின் டிவிஷனல் கமாண்டர் என அவர்களுக் குச் சொல்லப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து அருகிலுள்ள நூர்புராவில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் வீட்டிலுள்ள நகை, விலையுயர்ந்த பொருட்கள், ஏன் சேமித்து வைத்திருந்த கோதுமை மூட்டைகளும் கூட இராணுவத் தாரால் கொள்ளை அடித்துச் செல்லப் பட்டு விட்டன என சுற்றியிருந்த வீட்டுப் பெண்கள் புலம்பினர்.
காஷ்மீரில் இதெல்லாம் சகஜம். திடீரென ஒரு வீட்டிற்குள் புகுந்த ஒரு முப்பது பேருக்குத் தேநீர் தயாரியுங்கள் என ஒரு இராணுவ கமாண்டர் சொன்னால், உடனடியாக அவர்கள் அதைச் செய்துதர வேண்டும். காஷ்மீரி கள் விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர்கள். யாருக்கும் எப்போதும் அவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும்வரை காஷ்மீரிகள் தேநீரும் உணவும் கொடுக்கத் தயாராக இருப்பார் கள். நாங்கள் இருந்த சில தினங்களிலும் கூட அந்த விருந்தோம்பலை அனுபவித் தோம். ஆனால் இப்படித் திமிராக உள்ளே நுழைந்து, தங்களின் ரத்த சொந்தங் களை அன்றாடம் கொன்று குவிக்கும் இந்திய இராணுவப் படையினர் உள்ளே நுழைந்து ‘சாயா’ வேண்டுமென்றால் அம் மக்களின் மனநிலை எப்படி இருக் கும்? இருந்தாலும் அவர்கள் அதைச் செய்துதான் தரவேண்டும். வேறு அவர் களுக்கு ‘சாய்ஸ்’ கிடையாது. தேநீர் விநியோகிக்கும் போது அழகான பெண் கள் யாரும் தட்டுப்பட்டால் சிறிது நேரம் கழித்து அவர்களில் சிலர் திரும்பி வரக் கூடும். இம்முறை வேறு காரணங் களுக்காக. இப்படி ஏராளமாக நடந் திருக்கிறது. பெரியவர் சையத் அலிஷா கீலானி அவர்கள் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ஆதாரங்களுடன் இத்தகைய சம்பவங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் திரும்பிய போது இருட்டி விட்டது. இருட்டில் வண்டி ஓட்டுவது காஷ்மீரில் இரட்டைச் சிரமம். எதிரில் ஒரு இராணுவ வீரனையோ, பங்கரையோ, வாகனத்தையோ, முகாமையோ, செக் போஸ்டையோ பார்த்தீர்களானால் உடனே வண்டியின் முன் வெளிச்சத்தை (ழநயன டுiபாவ) நிறுத்திவிட்டு, உள்ளே உள்ள விளக்கைப் போட வேண்டும். அவர்களைக் கடந்தவுடன் மீண்டும் உள் விளக்கை அணைத்துவிட்டு வெளி விளக்கைப் போட வேண்டும். அதற்குள் அடுத்த இராணுவ வீரன் எதிர்பட்டு விடுவான். “இது எங்க ளுக்குப் பழக்கமாகி விட்டது’’ என்றார் ஓட்டுநர். அவர் பெயர் காஸிம் பட்.
“இன்று பரவாயில்லை சார். நாம் வந்து விட்டோம். சில நேரங்களில் முகாம்களுக்கு எதிராக உள்ள செக்போஸ்ட்களில் சாலையை அடைத்துவிட்டுப் போய்விடுவார் கள். மறுபடி அடுத்த நாள் காலை வரை அந்தக் கிராமத்துக்குள் யாரும் வரவும் முடியாது, வெளியே போகவும் முடியாது’’ என்றார் காஸிம். ஆம். அப்படியாகும் போது அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டமாக அம் மக்கள் கருதிக் கொள்ள வேண்டியதுதான்.
நாங்கள் ‘த்ராலை’ அடைந்த போது இரவு 7 மணி இருக்கும். ஊரே அடங்கி யிருந்தது. அங்கொன்றும் இங்கொன்று மாகத் தெரிந்த இராணுவ ஜீப்கள், வீரர்களின் நடமாட்டம் தவிர கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. காஷ்மீரில் இரவு ஏழு மணிக்கெல்லாம் ஊரடங்கி விடுகிறது. மறுபடி காலை 8 மணிக்குப் பிறகுதான் தெருவில் நடமாட்டம் தென் படுகிறது. இராணுவ ஜீப்கள் வந்து சாலை களில் போடப்பட்ட தடைகளை நீக்கிய வுடன்தான் போக்குவரத்து ஏற்படும். இரவில் திடீரென யாருக்காவது உடல் நலமில்லாமல் போனால் கூட வெளியே செல்வது சற்றுச் சிரமந்தான். ஊரடங்குச் சட்டம் இல்லாவிட்டாலும் அதுவே நிலைமை.
அமர்நாத் பிரச்சினைக்குப் பின் காஷ்மீர் நிலைமைகளை நேரில் கண்டறி யவும், அக்டோபர் 6ந்தேதி ‘காஷ்மீர் கூட்டுச் செயல்பாட்டுக் குழு’ (முயளாஅசை ஊடி-டிசனiயேவiடிn ஊடிஅஅவைவநந) அறிவித்தி ருந்த லால் சவுக் பேரணியை நேரில் காணவும் ஏற்பாடு செய்திருந்த அகில இந்திய உண்மை அறியும் குழுவில் தமிழ்நாட்டிலிருந்து நானும் சுகுமாரனும் பங்கு பெற்றிருந்தோம். பேராசிரியர் அமித் பட்டாச்சார்யா, எஸ்.ஏ.ஆர்.கீலானி, ரோனா வில்சன் இன்னும் நான்கு வங்கத்து நண்பர்கள், கேரளத்திலிருந்து ‘மாத்யமம்’ இதழாசிரியர் வி.எம்.இப்றாகிம் என பத்து பேர் கொண்ட குழு எங்க ளுடையது. அக்.3ம் தேதி இரவு எட்டு மணிக்கு டெல்லியிலிருந்து ஜம்மு வழி யாக ஸ்ரீநகருக்கு சாலை வழியில் செல்கிற குழுவில் நானிருந்தேன். எங்க ளில் நால்வர் விமானம் மூலம் டெல்லி யிலிருந்து ஸ்ரீநகர் புறப்பட இருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமா கச் செல்லும் அந்த ஆம்னி பஸ் எங்க ளை அடுத்த நாள் மதியம் 12 மணி சுமாருக்கு ஜம்முவில் விட்டது. உடனடி யாக ஒரு டாடா சுமோவை அமர்த்திக் கொண்டு ஸ்ரீநகர் புறப்பட்டோம். எங்கள் ஆறு பேருக்கும் அந்தக் காஷ்மீரி ஓட்டு நர் கேட்டது வெறும் 1500 ரூபாய்தான். இறங்கும் போதுதான் அவர் காரணத் தைச் சொன்னார். ஒருவேளை லால் சவுக் பேரணியை ஒட்டி ஊரடங்கு உத்தரவிடப்பட்டால் இரண்டு நாளோ, மூன்று நாளோ ஜம்முவிலேயே தங்க நேரிடும். எனவே கிடைத்த காசுக்குப் புறப்பட்டு விட்டதாகச் சொன்னார் அவர்.
மலைப் பாதைகளினூடாக காஷ்மீரின் அழகை ரசித்துக் கொண்டே நாங்கள் சென்றபோது எங்களுக்கு முதல் அதிர்ச்சி செய்திகிடைத்தது. விமானத்தில் சென்ற வர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் எங்கே எனத் துருவித் துருவி விசாரிக் கின்றனர் என்பதே அச் செய்தி.
அ. மார்க்ஸ்
