குண்டு வைத்து கொலை செய்வது எப்படி ?
ஒரு பாட்டில் ரம்முக்காக சோரம் போன அதிகாரிகளைக் கொண்ட பெருமை நம் ராணுவத்துக்கு உண்டு. இப்போது ஒருபடி மேலே போய்விட்டார்கள். குண்டு வைத்து கொத்துக் கொத்தாய்க் கொலை செய்வது எப்படி என்று தீவிரவாதிகளுக்குப் பயிற்சி தருகிறார்கள். நல்ல முன்னேற்றம்தான்!
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. மோட்டார் பைக்கில் வைத்த குண்டு வெடித்து 6 பேர் இறந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நவராத்திரியை ஒட்டி நடந்த குண்டுவெடிப்பு என்பதால் வழக்கம்போல் இஸ்லாமிய தீவிரவாதிகள் மேல்தான் பழிபோடப்பட்டது. ஆனால் உண்மையில் குண்டுவைத்தவர் இந்து பெண் சாமியார் என்று அறியவந்தபோது பலர் அதிர்ந்தனர்.
தீவிரவாத எதிர்ப்புப் படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில்தான் இந்தத் திடுக்கிடும் தகவல் அம்பலமானது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அபினவ் பாரத் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா தாக்கூர்தான் இக் குண்டுவெடிப்புக்கு மூல காரணம். அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். போலீசுக்கு முதலில் சாமியார் ஒத்துழைக்க மறுத்தார். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
மாலேகான் குண்டுவெடிப்பில் பெண் சாமியாருக்கு இருந்த தொடர்பு பற்றி செய்தி வெளியான சில நாள்கள் வரை சங் பரிவாரங்கள் எந்த மூச்சையும் விடவில்லை. பின் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினர். ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றார் பா.ஜ. செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத். பா.ஜ. தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் ஆவேசத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார். "குண்டுவெடிப்பு விசாரணை என்ற பெயரில் பிரக்யா தாக்கூரை மும்பை போலீசார் துன்புறுத்தி வருகின்றனர். அவரிடம் மூன்று, நான்கு முறை உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசுக்கும் போலீசுக்கும் முக்கிய பங்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பில் நேரடித் தொடர்புள்ளவர் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஒருவரிடம் விசாரணை நடத்துவதையே ராஜ்நாத் தவறு என்கிறார். ஆனால் முஸ்லிம் என்பதாலேயே, குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பற்றவர்கள்கூட விசாரிக்கப்படாமலேயே கைதிகளாகப் பல ஆண்டுகள் சிறையில் வாடுவதை அவர் மறந்துவிட்டார்.
மாலேகான் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ராம்ஜியுடன் பெண் சாமியார் பேசிய தொலைபேசி உரையாடல் சாட்சியம் அரசு தரப்பில் நாசிக் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் சாமியார்தான் காரணம் என்பதை அந்த உரையாடல் தெளிவாக உணர்த்துகிறது. கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட உரையாடல் சாட்சியம் இதுதான்:
பிரக்யா: அநேகமாக இன்று மாலைக்குள் என்னை போலீசார் கைது செய்துவிடுவார்கள்.
ராம்ஜி: எப்படிச் சொல்கிறீர்கள்?
பிரக்யா: குண்டுவெடிப்பில் என் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியிருப்பதை போலீசார் கண்டுபிடித்துவிட்டார்கள். அதுசரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏன் அதிகம் பேர் சாகவில்லை? கூட்டமான பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லையா?
ராம்ஜி: இடம் கிடைக்கவில்லை. கடைசியாக கிடைத்த இடத்தில் பார்க் செய்தேன். அங்கே அவ்வளவாகக் கூட்டம் இல்லை.
இப்படிப் போகிறது உரையாடல்.
ஆனாலும் ஜோடிப்பு வழக்கு என்று திரும்பத்திரும்பச் சொல்கின்றனர் பரிவார்கள். இப்போது வி.எச்.பி.க்கும் இதில் பங்கிருப்பது தெரியவந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த வி.எச்.பி. பிரமுகர்கள் 3 பேருக்கு இதில் தொடர்பிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எந்த மதத்திலும் தீவிரவாதிகள் உருவாவதைக்கூட ஏற்றுக்கொண்டுவிடலாம். ஆனால் நாட்டின் ராணுவ அதிகாரிக்கும் இதில் பங்கிருக்கிறது என்பதுதான் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் உறையச் செய்திருக்கிறது. ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி வகித்து வரும், புனேவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் புரோகித் என்பவர் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பணம், ஆர்டிஎக்ஸ், துப்பாக்கிகள் சப்ளையுடன் சதித் திட்டமும் தீட்டிக் கொடுத்ததாக இவர் கைதாகியுள்ளார். தீவிரவாதத் தொடர்பு சம்பந்தமாக ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த விவகாரத்தில் மேலும் பல ராணுவ அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த ராணுவத்தின் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
''தீவிரவாதக் குற்றத்துக்காக ராணுவ அதிகாரி ஒருவர் கைதாகி இருப்பது ராணுவத்தின் கவுரவத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தடம் புரளும் அதிகாரிகளைக் கண்காணிக்க ராணுவத்திடம் செயல்திட்டங்கள் உள்ளன. அவற்றை இனித் தீவிரமாகப் பயன்படுத்துவோம்'' என்று துணைத் தளபதி தில்லான் கூறியுள்ளார். இது காலம்கடந்த ஞானமாகத்தான் தெரிகிறது. தீவிரவாத-ராணுவத் தொடர்பு எந்த அளவு படர்ந்திருக்கும் என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாத நிலைதான் உள்ளது.
ராணுவ அதிகாரியைக் கைது செய்ததற்கும் பா.ஜ. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குஜராத் முதல்வர் நரேந்திரமோடிதான் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். ''மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அப்பாவி ராணுவ அதிகாரிகளை மும்பை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் தாய்நாட்டின் பாதுகாப்புக்காக அல்லும்பகலும் அயராது உழைக்கும் ராணுவத்தினரின் மனஉறுதியை சீர்குலைத்துவிடும்'' என்று சொல்லியிருக்கிறார்.
குண்டுவைத்தது முஸ்லீம் இயக்கமாக இருந்தால் அவர்கள் தீவிரவாதிகள். இந்து இயக்கமாக இருந்தால் அவர்கள் அப்பாவிகள் என்பதுதான் மோடி சொல்லும் தத்துவம். பெரும்பான்மை ஊடகங்களும், அமைப்புகளும் இப்படித்தான் நினைக்கின்றன. இந்த விவகாரத்தில் காட்டப்படும் கனத்த கள்ள மவுனமும் அதைத்தான் உணர்த்துகிறது.
