video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

இஸ்லாமியர்களெல்லாம் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால்.....

இஸ்லாமியர்களெல்லாம் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகளெல்லாம் இஸ்லாமியர்கள் தான் என்று இத்தனை காலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யும் உரத்த குரல் எழுப்பி வந்தன.

நடைபெற்ற நாசவேலைகளுக்கெல்லாம் அவர்கள்தான் அச்சாணி என்ற வாதம் நமது சிந்தனைக்கு வேலை கொடுத்தது.

சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவிற்கு சற்று முன்னர் டெல்லியில் முகூர்த்தக்கால் நடுவார்கள். `என்கவுன்ட்டர்' என்ற நேரடி மோதலில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற சேதி வரும். அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று காஷ்மீர் கடந்து வந்தவர்கள் என்ற தகவலும் சொல்வார்கள். அதுதான் முகூர்த்தக்கால். வாஜ்பாய் அரசு அமைந்தபோது அரங்கேறிய இந்த நேரடி மோதல் நாடகங்கள் தொடருகின்றன.

அதற்காக நாம் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புக்களைக் குறைவாக மதிப்பிடவில்லை. அந்த அமைப்புகள் செயல்படுகின்றன, அந்த அமைப்புகளின் பயிற்சித் தளம் பாகிஸ்தானாகவும், ஆப்கனிஸ்தானாகவும் இருக்கின்றன. அதன் செயல்பாடுகளை அறிவதிலும் அடக்குவதிலும் நமது ராணுவமும் உளவுத் துறைகளும் அரும் பெரும் சேவைகள் செய்கின்றன. அதே சமயத்தில் தீவிரவாதிகளெல்லாம் இஸ்லாமியர்கள்தான் என்ற பி.ஜே.பி.யின் வாதத்தை அதன் அமைப்புகளே சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கின்றன. தண்ணீரில் பிறந்த உப்பு தண்ணீரில் கரைவதுதானே இயல்பு?

சத்வி பிரக்யாசிங் தாகூர் என்ற நாமகரணம் கொண்ட ஓர் அம்மணி. அவர் இப்போதெல்லாம் காவி உடைதான் அணிகிறார். இந்துத்வா சாமியாரிணி. அவரையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நால்வரையும் மராட்டிய பயங்கரவாத எதிர்ப்புக் காவல்படை கைது செய்திருக்கிறது. அந்த அம்மணியின் பாழடைந்த மனக் குகை வெடிகுண்டுகளின் சேமிப்புக் கிடங்கு என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த சாமியார் அம்மணியின் நரம்பு மண்டலங்களே பயங்கரவாத நாற்றங்கால்கள் என்றும் சொல்கிறார்கள்.

கடந்த செப்டம்பர் முதல் வாரம் மராட்டிய நகரமான மலேகானிலும் குஜராத் மொடாசாவிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்தன. வழக்கம் போல் அதற்கும் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள்தான் காரணம் என்று சொன்னார்கள். உண்மையில் அந்த நகரங்களை நெருப்பில் நீராட்டியது காவி அம்மணியும் அவரோடு சேர்ந்த சங் பரிவாரங்களும்தான். குண்டு வெடிப்புக்கள் இஸ்லாமிய குடியிருப்புக்களில் நடந்தன.

இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர், வெடிகுண்டுகள் செய்வது எப்படி - வெடிக்கச் செய்வது எப்படி என்று இவர்களுக்கும் இன்னபிற சங்பரிவாரங்களுக்கும் பயிற்சி அளித்தவர் என்று புகார் எழுந்தது. விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

இப்போது நாம் தெரிந்து கொள்வது என்ன? பயங்கரவாதம் - தீவிரவாதம் என்பதெல்லாம் ஒரு மதத்தின் பிறப்புரிமை அல்ல. அதற்கு மதமே கிடையாது என்பதுதான். இத்தனை ஆண்டுகளாக தீவிரவாதம் என்றால் இஸ்லாம் - இஸ்லாமியர்களின் ரகசிய ஆயுதம் என்று சொல்லி வந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகள் இப்போது என்ன சொல்கின்றன?

தீவிரவாதி என்று ஓர் இஸ்லாமியப் பெண் கைது செய்யப்பட்டதில்லை. ஆனால், தீவிரவாதி என்றும் வெடிகுண்டு விளையாட்டில் மேதை என்றும் சங் பரிவார் அம்மணி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் காலப் புயலாம். ஆகவே அவரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் சிவசேனா பால்தாக்கரே.

அந்த அம்மணி கல்லூரிப் பருவத்தில் பி.ஜே.பி. மாணவர் அணியின் முன்னணிச் செயலாளராகச் செயல்பட்டவர். அம்மணி ஒரு தீவிரவாதி என்பதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மையங்களில் நடந்த குண்டுவெடிப்புக்களுக்கும் அவர்தான் சூத்திரதாரி என்றும் தகவல் வெளியானது. பி.ஜே.பி. பதற்றம் கொண்டது. அவசர அவசரமாக `அம்மணி யாரோ தெரியாது' என்று அறிக்கை வெளியிட்டது.

அம்மணியின் பாதார விந்தங்களில் இன்றைய பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங் அமர்ந்திருக்கும் அரிய புகைப்படங்கள் வெளியாகின. தனிப்பட்ட முறையில் யாரோ வெடிகுண்டு விளையாட்டு விளையாடியதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று இப்போது தப்பிக்கப் பார்க்கிறார்கள். அதே சமயத்தில், அந்த அம்மணியையும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களையும் ஜாமீனில் எடுக்க முனைகிறார்கள்.

டெல்லியில் நடந்த ஒரு குண்டு வெடிப்பு தொடர்பாக இரு இஸ்லாமிய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அப்பாவிகள் என்று ஜமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், அவர்களை ஜாமீனில் எடுக்க முயன்றார். `ஐயோ! இது என்ன அநியாயம்? பயங்கரவாதத்திற்குத் துணைவேந்தரே ஆதரவா' என்று பி.ஜே.பி. கண்டனக் கணைகளை ஏவியது. ஆனால் இன்றைக்கு பயங்கரவாத அம்மணியையும் அவரது ஆஸ்.எஸ்.எஸ். சீடர்களையும் காக்க சட்ட வல்லுனர்களின் உதவியை நாடுகிறது.

எந்த வடிவில் எந்த மதத்தின் பின்னணியில் பயங்கரவாதம் தலை தூக்கினாலும் அதனை மனித சமுதாயம் கண்டிக்க வேண்டும். அப்பாவி மக்களின் உயிரோடும் உடைமைகளோடும் விளையாடும் பயங்கரவாதிகள் மனிதநேயத்திற்கு மரண சாசனம் எழுதுபவர்கள்.

ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதம் என்றால் நெருப்பு மழைபொழியும். இந்துத்வா பயங்கரவாதம் என்றால் மலர்மாரி பொழியும் என்று சங்பரிவாரங்கள் வாதாட வருகின்றன.

கடந்த பல ஆண்டுகளாகவே மராட்டிய மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில், மசூதிகளில் குண்டுகள் வெடித்திருக்கினறன. இந்தக் கோரத் திருவிளையாடல்களுக்கும் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கும் உறுதியாகத் தொடர்பிருக்க வழியில்லை. எனவே, உண்மையான சமூக விரோதிகளைக் கண்டுபிடியுங்கள் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அறிவுறுத்தின. ஆனால், அந்த எலிகளைப் பிடிக்க மராட்டிய அரசுப் பூனை மறுத்துவிட்டது. என்றாலும் அந்த இருட்டறை சுந்தரிகள் மீது எப்படியோ வெளிச்சம் பாய்ந்துவிட்டது. எனவே, கைது செய்திருக்கிறார்கள். இனி சட்டம் சரியாகச் செயல்படவேண்டும்.

மராட்டிய மலேகானிலும் குஜராத் மொடாசாவிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இஸ்லாமிய குடியிருப்புக்களில் குண்டுகள் வெடித்தன. இதிலிருந்து என்ன தெரிகிறது? வெடிகுண்டு விளையாட்டுக்களை இந்தியா முழுமையும் நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார பயங்கரவாத அமைப்புகள் தயாராகிவிட்டன என்று அர்த்தம்.

வளர்க்கப்படும் வகுப்புவாத உணர்வுகள்- செயல்கள் அபாய எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கே பயங்கரவாதம் கோரமுகத்தோடு எழுகின்றது. அதற்கு நியாயம் கற்பிப்பவர்களும் ஆதரவு தருபவர்களும் பயங்கரவாதிகளைவிட மோசமானவர்கள்தான். அவர்கள் தேச விரோதிகள். இந்த வாதம் இருதரப்பினருக்கும் பொருந்தும்.

SOLAI

Posted by இப்னு அப்துல் ரஜாக் on 11/16/2008 07:27:00 AM. Filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for இஸ்லாமியர்களெல்லாம் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால்.....

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery