பொன்மாலைப் பொழுது
நம் சமுதாய சொந்தங்கள் அனைவருக்கும் எமது தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் !
சமீப காலங்களாக நம் சகோதரர்கள் அவ்வளவாக எழுதுவதில்லை. வாசிப்பு பழக்கமும் குறைந்து விட்டதோ ..என்ற அச்சமும் ,பேச்சு மற்றும் எழுத்துத் திறன் நம் மக்களிடையே வளர்க்க வேண்டும் என்ற ஆதங்கமும் கைகோர்த்துக் கொள்ள இந்தச் சிறிய முயற்சி! அதாவது ..நாம் ஒரு சிறிய சப்ஜெக்ட் / சம்பவத்தை எடுத்துக் கொள்வோம்.
அதை நம் சகோதரர்கள் மத்தியில் கொண்டு செல்வோம். மக்கள் அலசட்டும்! எழுதட்டும்!! இதோ நகைச்சுவையோடு கூடிய நமக்கே நேர்ந்த ஒரு சம்பவம். கருத்துக்களை மார்க்கம் பாதிப்பு இல்லாமல், மூர்க்கப் பார்வையின்றி, சிரித்து சிந்திக்குமாறு எழுதுக !எதிர்பார்கிறோம்!
அன்றொரு வியாழனின் இனிய மொன்மாலைப் பொழுது, மறுநாள் விடுமுறையாதலால், Holiday ஐ Holy day-யாக வரவேற்றுக் குதூகலத்துடன் தேனீரை ருசித்துக் கொண்டே தொலைக்காட்சியை ரசித்தவாறு கல்யாணம் பண்ணிய பிரம்மச்சாரிகள் (Bachlors) அறையில் அமர்ந்திருந்தோம். தொலைக்காட்சி சிறுவர்கள் நிகழ்ச்சியில் ஒரு ஒல்லிப்பிச்சான் மாணவன் வீரபாண்டி கட்டபொம்மனாக சூளுரைத்துச் சென்றான். அடுத்து ஏதோ ஒரு வித்யாலயா மாணவிகளின் பரத நாட்டியம் - தா.. தை.. தத்.. தா..
அந்நேரத்தில் A.R.ரஹ்மானின் சமீபத்திய மெட்டொன்றை கர்ணக்கடூரத்தில் சீட்டியடித்து பாடிக்கொண்டு, சகோதரன் அலிபாபா அதிரடியாக பிரவேசம் செய்யவே, தொலைக்காட்சிப் பக்கம் பார்த்தவன், "ச்சே யாங் காக்கா இந்த சாமி பாட்டையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கியளுவோ!.. சேனலை மாத்துங்க!" -ன்னான். மாற்றினோம்.
ஆடைப் பஞ்சத்தில் இரண்டரை டஜன் பெண்மனிகள் "மே.. மாதம்… 98-ல்.. மேஜர் ஆனேனே.." என்ற தத்துவப்(?!) பாடலை பாடி பேஜார் பண்ணிக்கொண்டிருக்க, "ஆங்.. இது ஓகே!" என்று அனைவரும் ஏகோபித்த குரலில் ஏற்றனர்.ஆக கலைக்கும் பிறமதக் கடவுளுக்கும் வித்தியாசம் தெரியாததாலா? அல்லது மற்ற மத ஆச்சாரம்தான் கூடாதது, தவிர ஆபாசம் தேவலாம் என்ற மனப்போக்கா?
இதைப் படிக்கும் வாசகரான உங்கள் கருத்து என்ன?
By
ரஃபியா
