மூட நம்பிக்கைகள் உலகில் மறையப்போவது எப்போது?
அன்பான எனதருமை நமதூர் வாசக சகோதர, சகோதரிகளே உங்கள் யாவருக்கும் முதற்கண் என் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
ஒரு நேரத்தில் நமதூர் மக்களிடையே பெரும்பாலும் இல்லத்தரசிகளிடம் நிலவி வந்த ஒரு மூட நம்பிக்கையைப் பற்றி இங்கு ஒரு சிறு கட்டுரை மூலம் விளக்க
விரும்புகிறேன்.
வெளிநாட்டு வாழ்வில் வருடங்கள் பல உருண்டோடி விட்டதால் அப்பழக்கம் இன்றும் நம்மக்களிடம் இருக்கிறதா என்பது தெரியவில்லை... இருப்பினும் சின்னஞ்சிறு பிராயத்தின் அனுபவத்திலிருந்து ஒன்றை இங்கு எழுத வருகிறேன்.
ஆங்கிலப்புத்தாண்டு பிறந்து விட்ட முதல் நாள் அன்று நம் பகுதிகளின் வீடுகளில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டால் அல்லது ஏதேனும் அசொளகரியம் ஏற்பட்டு விட்டால் அன்றைய தினம் சிகிச்சைக்காக
மருத்துவமனை செல்வதை விரும்பமாட்டார்கள். முடிந்தவரை மருத்துவமனை செல்வதை தவிர்த்து விடுவார்கள். காரணம் அன்று மருத்துவமனை சென்றால் அவ்வருடம் முழுவதும் மருத்துவமனை செல்ல நேரிடும் என்ற மூட நம்பிக்கையால்
தான் .
நம் அறியாமையினாலும், மார்க்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வமின்மையாலும் முஹர்ரம் என்றால் என்ன? என்று கேட்பவர்களாகவும் மாறாக ஆங்கிலப்புத்தாண்டை
வரவேற்க அறியாமலேயே சிகப்புக் கம்பளம் விரிப்பவர்களாகவும் தான் நம்மில் பெரும்பாலானோர் இருந்து வருகிறோம்.
வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள், நேரங்கள் மற்றும்
மணித்துளிகளெல்லாம் மனிதன் தன் வாழ்க்கை கட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல அவனாலேயே ஏற்படுத்தப்பட்டது தான் இவைகள் யாவும் என்பதை நாம் இங்கு சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
புத்தாண்டு தினம் ஒருவன் சூழ்நிலையால் அழ நேரிடும் பொழுது அவன் ஆண்டு முழுவதும் அழப்போவதில்லை. மாறாக ஒருவன் அத்தினம் சிரித்து மகிழ்வதால்
அவ்வாண்டு முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கப் போவதில்லை.
உலகில் நல்ல நேரம், கெட்ட நேரம் எதுவும் உண்டா? என சஹாபாப் பெருமக்கள் எம்பெருமானார் நபி (ஸல்...) அவர்களிடம் வினவியபோது.. அதற்குப் பெருமானார்
கூறியது என்னவெனில் "எவன் ஒருவன் ஃபஜர் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுகிறானோ அன்றைய முழு தினமும் அவனுக்கு நல்ல நாள் தான்" என்று இயம்பியதாக நாம் ஹதீஸில் பார்க்கின்றோம்.
நம் வாழ்வில் மூட நம்பிக்கைகளுக்கு அவிழ்க்க முடியா முடிச்சிட்டு நல்ல (மார்க்க) நம்பிக்கைகளை சுதந்திரமாக அவிழ்த்து விட முயல வேண்டும். உள்ளங்கை நெல்லிக்கனி போல் மார்க்கத்தை நம் கைகளில் வைத்துக்கொண்டு நாம்
சின்னஞ்சிறு விசயங்களுக்கெல்லாம் அந்நியர்களின் அதாவது
இறைநிராகரிப்போரின் உதவியை நாடுகிறோம். இனி வரும் காலங்களில் நம் யாவரையும் இத்தகைய பெரும் தவறுகள் செய்வதிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக...ஆமீன்..
குடும்பத்தில் பல கஷ்டங்கள் நிறைந்திருந்தாலும் புத்தாண்டு தினம் சாதாரன நாட்களைப் போல் அல்லாது நல்ல கறி சமைத்து சாப்பிடுவது, புத்தாடை அணிவது, மத்தாப்பு கொளுத்துவது இவைகளெல்லாம் மார்க்கத்தில் நிச்சயம் சொல்லப்படாத ஒன்று.
அதுபோல் பிறந்த நாள் அன்று அழுக்கை சட்டை அணிந்திருப்பவன் அன்றே சாகப்போவதுமில்லை. புத்தாடை அணிந்து ஆடம்பர பவனி வருகிறவன் நூற்றாண்டுகள்
பல இவ்வுலகில் வாழப்போவதுமில்லை...
கடலில் மூழ்குபவனுக்கெல்லாம் விலையுயர்ந்த முத்துக்கள்
கிடைப்பதில்லை..ஆனால் மூழ்காமல் ஒருவனுக்கும் முத்துக்கள் கிடைப்பதில்லை. இறைவன் நாடியவனுக்கே தன் ஹிதாயத் என்னும் நேர்வழியைக் காட்டுகின்றான்..
காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எல்லாம் உலக சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஆதிக்கம் செலுத்துபவனின் கட்டளைப்படியே நடக்கக் கூடியதாக இருக்கின்றது.
இதுபோல் ஆயிரம் மூட நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் நம் பகுதிகளில் நிறையவே நிரம்பி இருக்கின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அதை ஒவ்வொன்றாகவோ அல்லது ஒட்டு மொத்தமாகவோ நம் தளத்தில் கட்டுரையாக பதிய வேண்டுகிறேன்.
எனவே நாம் முடிந்தவரை உண்மையான முஸ்லிமாக வாழ முயற்சிப்போம். முடியாவிட்டாலும் முயற்சிப்போம்... நரக நெருப்பிற்கு இரையாக, விறகாக யார் தான் விரும்புவர்? அவைகளெல்லாம் மாயை/இல்லை என்பவர்களைத் தவிர.
இத்தளம் மெருகூட்டப்பட்டு இன்னும் பல தகவல்களுடன் நம்மக்களின் நல்லாதரவுடன் அகிலமெங்கும் வலம் வர வேண்டும் என இத்தருணத்தில் வல்ல இறைவனைப் பிரார்த்தித்தவனாக....
அபுஹசன் - சவுதியிலிருந்து.

