அதிரை எக்ஸ்ப்ரஸ் - புத்தாண்டுத் திட்டங்கள்
அதிரை எக்ஸ்ப்ரஸில் நமதூர் மக்கள் பலரும் எழுத வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தியும், அவ்வாறு எழுதப்பட்ட தனிப்பதிவுகளை நமது தளத்தில் பட்டியிலிட்டு ஊக்கப்படுத்தி வருகிறோம் என்பதை அனைவரும் நன்கறிவோம். சமீப நாட்களாக இத்தளத்திற்கு அனுப்பப்பட்ட பதிவுகள் பிரசுரிக்கப் படவில்லை என்று சில பங்களிப்பாளர்கள் முறையிட்டிருந்தனர். அவர்களின் பதிவுகளைப் புறக்கணிக்கும் நோக்கம் சிஞ்சிற்றும் இல்லை. வரும் ஆக்கங்களைப் பிரசுரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களின் பணிச்சுமையே, தாமதமான வெளியீட்டிற்குக் காரணம்.
சகோதரர் ஜாஹிர் ஹுசைன் மற்றும் பங்களிப்பாளராக இருக்க விரும்பும் எவரும் தயங்காமல் தங்கள் சுயவிபரங்களையும் ப்ளாக்கர் அக்கவுண்ட்/ ஈமெயில் விபரத்தை அதிரை எக்ஸ்ப்ரஸ் அட் ஜிமெயில் என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பினால் எக்ஸ்ப்ரஸ் தளத்தில் நேரடியாகவே பதிக்கும் வசதியை வழங்குகிறோம்.
மேலும், அனுமதி காத்திருக்கும் பதிவுகளைப் பார்வையிட்டு உடனடியாக அனுமதிக்கும் அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்க விரும்புகிறோம். விரும்பும் சகோதரர்களும் உடனடியாக தங்கள் விபரத்தை மேற்சொன்ன முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதன்மூலம் பிரசுரமாவதிலுள்ள தாமதங்கள் தவிர்க்கப் படும்.
அப்புறம், நமதூர் மக்கள் அனைவரும் இத்தளத்தில் தெருப்பாகுபாடின்றி உரிமையுடன் பயன்படுத்த வேண்டும் என்பதும் நமது நோக்கங்களில் ஒன்றாகும். அதனடிப்படையில் பிரிவினையைத் தூண்டாத தெருவாரியாகப் பதிவர்களையும் நியமிக்க விரும்புகிறோம். உதாரணமாக சகோ.அபூஅஸீலா ஆஸ்பத்திரி தெரு மற்றும் சுற்றுவட்டாரச் செய்திகளையும் அது சார்ந்த/ சாரத பொதுவான கட்டுரைகளையும் வழங்கலாம். அதேபோல், மேலத்தெரு, கடற்கரைத் தெரு, புதுமனைத்தெரு, நடுத்தெரு,மக்தூம்பள்ளி தெரு, CMPலேன் என பகுதிவாரியாக பதிவர்களை நியமித்து அந்தந்த தெருச்செய்திகளையும் பதியும்படி செய்ய உத்தேசித்துள்ளோம்.
இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்வதெனில் வாரம் ஒரு தெருவீதம் முன்னுரிமை கொடுத்து அந்தந்த பகுதி குறித்தவற்றை செய்தியாகவோ கட்டுரையாகவோ பதியச் செய்து ஆவணப்படுத்தலாம். உதாரணமாக கீழத்தெரு தியாகி. S.S.இப்றாஹிம் அவர்கள் குறித்தத் தகவலை மற்ற தெருவாசிகளைவிட கீழத்தெருவாசிகள் அதிகம் அறிந்திருப்பர்.
இவ்வாறாக வாரம் ஒரு தெருவாரியாக பதிவுகளைத் தொகுத்து ஆண்டு இறுதியில் அதிரை குறித்த நிகழ்வுகளைக் கொண்ட ஆண்டுமலர் போன்று வெளியிடலாம். தற்காலத்தில் முஸ்லிம்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஆவணப்படுத்தத் தவறினால் பிற்கால சந்ததியினரிடம் மறைக்கப்படும் அல்லது தவறான தகவல் கொடுக்கப்படும் சாத்தியமுண்டு என்பதை நினைவில் கொள்ளவும்.
நமதூர்வாசிகள் உலக நாடுகள் பலவற்றிலும் பரவியுள்ளனர். அங்கிருந்து தாங்கள் பணியாற்றும் நகரச் செய்திகளையும் நடப்புகளையும் வழங்கலாம். இதற்கும் நாடுகள், நகரங்கள் வாரியாக பங்களிப்பாளர்கள் வரவேற்கப் படுகிறார்கள். உதாரணமாக, சகோ. அபூ ஹசன் சவூதி செய்தியாளராகப் பொறுப்பேற்கலாம்.
இவையே அதிரை எக்ஸ்ப்ரஸில் புத்தாண்டுமுதல் நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்விசயங்கள் குறித்து சகோதரர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
வாசகர்கள் அனைவருக்கும் முகரம், ஜனவரி மற்றும் தைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இப்படிக்கு
எக்ஸ்ப்ரஸ் டீம்
