பகுத்தறிவே இது நியாயமா? (கற்றதும் பெற்றதும்)
இரண்டாம் வகுப்புப் படிக்கும் மகனின் குளிர்கால விடுமுறையில் வீட்டுப் பாடங்களில் தமிழ்குறிப்பேட்டில் டைனோசர் படத்தை ஒட்டிவரச் சொல்லி இருந்ததால் டைனோசார் படம் தேடியபோது மனதில் பட்டது.ஜுராசிக்பார்க் திரைப்படம் வெளியாகும் முன்புவரை பெரும்பாலோர் டைனோசர் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
கிங்காங், காட்ஜில்லா வரிசையில் வெளியான படங்களில் டைனோசர் போன்ற பிரம்மாண்ட ராட்சத ஜந்துக்களைக் கண்டு பிரமித்திருக்கிறேன். ஜப்பானியர்களின் நம்பிக்கையின்படி, உலகில் அநியாயங்கள் மிகைக்கும் போது காட்ஜில்லா கடலிலிருந்து வெளிப்பட்டு பிரளயத்தை ஏற்படுத்தும் என்று வாசித்த நினைவு.
ஜுராசிக் பார்க் படத்தில் ஆறு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரைக் கடித்த ஒரு கொசுவின் உடல், மரப்பசையால் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு, பின்னர் கொசுவின் உடலிலிருந்து டைனோசரின் DNAவை பிரித்தெடுத்து முட்டையுடன் இணைத்து, டைனோசர் உருவாக்க முடியும் என்ற நாவலின் அடிப்படையில் உருவான திரைப்படமே ஜுராசிக் பார்க்.
ஆறு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசரைப் பார்த்த எவருமில்லை.அறிவியல் கூற்றுக்களின்படி மனிதஇனம் சஞ்சரிக்கும் முன் டைனோசர் போன்ற பிரம்மாண்ட உயிரினங்கள் பூமியில் உலாவி வந்தன, விண்கற்கள் பூமியைத் தாக்கியதால் அவை அழிந்து போயிருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
யாருமே அறிந்திராத ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதைப் போன்ற இன்னொன்றுடன் ஒப்பிட்டுச் சொல்வது வழக்கம். யானை உடல், முதலைப் பற்களுடன் கற்பனையாகச் சொல்லப்பட்ட டைனோசர் உருவம் நம்மனங்களில் பதிய வைக்கப்பட்டது இப்படியே. கற்பனையும் அறிவியலும் இணைந்து சொல்லப்பட்ட டைனோசர் பற்றி நம்பும் பகுத்தறிவு, கண்முன் தெரியும் மனிதப்படைப்பைக் குறித்துச் சொல்லப்படும்போது நகைக்கிறது.
சோதனைக்குழாய் ஆய்வின் அடுத்த கட்டமான குளோனிங் படைப்புகளைப் பார்த்துவிட்டு, படைப்பாளனுக்குப் போட்டியாக நாங்களும் இருக்கிறோம். செல்களைப் பிரித்தெடுத்து தேவைக்கேற்ப குறைபாடற்ற படைப்புகளை எங்களால் கடவுளைவிடச் சிறப்பாகப் படைக்க முடியும் என்று மார்தட்டும் விஞ்ஞானிகளால் உயிருள்ள செல்களை ஏன் படைக்க முடியவில்லை?
மண்னோடு மக்கிப்போன கொசுவிலிருந்து டைனோசர் செல்லைப் பிரித்து மீண்டும் டைனோசர் படைக்க முடியும் என்று நம்பப்படும்போது, மண்ணின் மூலச்சத்திலிருந்து மனிதனைப் படைத்ததாகச் சொல்லப்படும் கூற்றையும் நம்பலாம்தானே!
பொழுதுபோக்குக்காக ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் சொன்னதை காசுகொடுத்துப் பார்த்து நம்பும்போது,படிப்பினை பெறுவதற்காக அல்லாஹ் சொன்னதை நம்பத்தயங்கலாமா?
தொடரும்....
<<<அபூஅஸீலா-துபாய்>>>