ஆடு கழுதை ஆன கதை!!!
"வாங்க தம்பி, உக்காருங்க, தம்பிக்கு எந்த ஊரு?" அன்பாய் கேட்ட அவரிடம் "தஞ்சாவூர் பக்கம்ங்க" நான் சொல்லி முடித்துக்கொண்டாலும், அந்த விசாரிப்புத் திலகம் விட்டபாடில்லை. "அப்டியா தம்பி?, நமக்கு தஞ்சாவூர் ல தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க,தஞ்சாவூர் ல எங்கே இருக்கீங்க?""தஞ்சாவூர் பக்கத்துல அதிராம்பட்டினம் என் சொந்த ஊருங்க!!" -நான் சொல்லி முடித்தது தான் தாமதம், "அடடே.. ஆட்டை கழுதை ஆக்குன ஊரூ..."-அவர் சொல்லி முடித்தார் ஒரு நிம்மதி பெருமூச்சுடன். இதுக்கு தான் இவ்வளவு விசாரனையா?-நான் நினைத்துகொண்டேன்.
"அது என்னங்க ஆட்டை கழுதை ஆக்குன ஊரூ?"- இதோ சொல்றேன்.
முன்னொரு நாள் ஒருத்தர் தன் ஆசை ஆசையாய் வளர்த்த ஆட்டை, வறுமை காரணமாக விற்க முடிவு செய்தார். அதைத் தன் தோளில் தூக்கி வைத்துகொண்டு சந்தை நோக்கி நடக்கலானார். வழியில் இவரைக் கண்ட ஒருவர் "அட ஏங்க கழுதையை இப்படி தூக்கிட்டு போறீங்க?-னு கேட்க, அவருக்கோ சந்தேகம். ஒருவேளை நாம் தவறுதலாக கழுதையைத் தான் தூக்கி வந்துவிட்டோமோ என எண்ணி, அதைத் தன் தோளிலிருந்து இறக்கி பார்த்து விட்டு, இல்லை, அது ஆடு தான் என உறுதி செய்துகொண்டு தன் நடையை தொடரலானார்.வழியில் இவரை பார்க்கின்ற பலரும் இவரை இப்படியே கேலி செய்ய, அதை கேலி என உணராத அவர், நாம் தான் தவறு செய்துவிட்டோம், இது ஆடு இல்லை, கழுதை தான் போலும் என எண்ணி சந்தையில் அதை விற்காது மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்ததாக, கேலியான ஒரு பொய் வரலாற்று சம்பவம் உண்டு. இந்த சம்பவத்தை கூட சரியாகத் தெரியாத பல வெளியூர்க் காரர்கள் அதிரம்பட்டினத்தைச் சேர்ந்த யாரையேனும் சந்திக்க நேர்ந்தால், சலாம் சொல்கிறார்களோ இல்லையோ, இந்த வாசகத்தைச் சொல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஆனால்...
இந்த பழமொழிக்கு உன்மையான ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கக்கூடும் என்பது எண்ணம்.
வெளியூரைச் சார்ந்தவர்கள், பிழைப்பு தேடி அதிராம்பட்டினம் வந்தால், அவர்களுக்கு வருமானம் தரக்கூடிய நல்ல உழைப்பும், அதன் மூலம் வயிற்றுப்பிழைப்பும் பெற்றிருக்கிறார்கள். வெளியூரைச் சார்ந்த பல படித்த நபர்கள், அதிரையின் கல்வி நிலையைங்களிலும், இன்ன பிற அதிரை சார் நிறுவங்களிலும் பணி புரிந்து வருகின்றனர்.
ஆகவே,
உழைப்பற்று ஆடு போல் இருந்த அவர்களை எல்லாம், உழைக்கின்ற கழுதைகளாக மாற்றியதால் அதிரைக்கு "ஆட்டை கழுதை ஆக்கிய அதிராம்பட்டினம்" என்று பேர்.-என்னை விசாரித்த அவரிடம் இந்த விளக்கம் சொல்லி எழுந்தபோது, பள்ளியின் பாங்கு சத்தம் செவிகளில் ஒலித்தது.
-----அருட்புதல்வன்

