சொன்னதை செய்தார்கள்,செய்ததை சொன்னார்கள் நபிகள் நாயகம் அவர்கள்!அறிஞர் அண்ணா பாகம் 4
மதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன்.யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும்.
இன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது? ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன? கருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது.அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது, எட்டாம்பக்கத்தில் மட்டும் கொஞ்சம் எழுத்துப் படாமலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? அச்சுப்பொறியிலே பழுதா, அல்லது பழுத்துக்கோர்த்தவர் தவறா என்று பார்த்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அச்சடிக்கையில் எல்லாப் பக்கமும் பட்டு, எட்டாம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் படவில்லை. அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனாலும் பழுது எங்கே இருக்கிறது? அதைக் கண்டு பிடித்தால் தான் சரியாக அச்சாகும்.இதற்கு யாரைக் கேட்பது? ஜோதிடரையா கேட்பது? ஜோதிடரைக் கேட்டால் உனக்கு அஷ்டமத்திலே சனி. அதனாலே எட்டாம் பக்கம் அச்சாகவில்லை என்பார். அச்சுத் தொழில் நுணுக்கம் தெரிந்தவரிடம் சொன்னால், அவர் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுப் பிறகு சொல்லுவார் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அச்சுப்பொறியிலோ, அச்சுக்கோத்ததிலோ பழுதில்லை, ஆனால் எட்டாம் பக்கம் அச்சாகும் இடத்தில் ஒரு நூலிழை எழுத்தின் உயரம் குறைந்திருக்கிறது. அதை உயர்த்தினால் சரியாக எழுதப்படும் என்று கூறி கையாலே எழுத்தைத் தடவிப் பார்க்கச் சொல்லுவார். தடவிப்பார்த்தால் அப்பொழுது நமக்கு உண்மை விளங்கும்.
அதைப் போல பழுது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும்.மார்க்கத் துறையிலுள்ள தூய கருத்துக்கள் சரியான வழியில் சரியான நோக்கத்தில் பரப்பப்பட வேண்டும்.கருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தபடி நடந்து காட்ட வேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம், உபதேசித்தபடி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக்கூடாது.
நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.
