சாதியை வேரறுத்த மார்க்கம் இஸ்லாம்!அறிஞர் அண்ணா பாகம் 5
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.
நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், 1957 ஆம் ஆண்டில் சாதி ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை 'மகான்' என்று கொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.
மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, 'மதம்' எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
