இதுதான்யா இங்கிலீசு!
ஆங்கில மொழி, அடுத்த ஆண்டில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டுகிறது. ஆம்...10 லட்சம் வார்த்தைகளைக் கொண்ட மொழி என்ற புகழை எட்டப்போகிறது. ஒவ்வொரு 98 நிமிடத்திற்கு ஒரு முறை, ஆங்கிலத்தில் புதிய வார்த்தை உதயமாகிறது. தற்போது ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கை 9 லட்சத்து 99 ஆயிரத்து 844 என்ற அளவில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், விரைவில் 10 லட்சம் வார்த்தைகளை எட்டி விடும். குறிப்பாக 2009, ஏப்ரல் 29ம் தேதிக்குள் 10 லட்சம் வார்த்தைகளை தொட்டு விடும்.
இதுபற்றி உலக மொழி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் பால்பேயாக் கூறியதாவது:உலகில், பல நாடுகளில் பரவலாகப் பேசப்படும் மொழி ஆங்கிலம். ஏனெனில், இந்த மொழி, ஏராளமான வார்த்தைகளை உட்கிரகித்து கொள்ளும் தன்மை கொண்டது. மக்களின் பேச்சு வழக்கில் உள்ள சொற்களையும் தன்மயமாக்கும் தன்மை கொண்டது ஆங்கிலம். பாலிவுட், ஹோலிவுட் போன்ற வார்த்தைகள் எல்லாம் இப்படித்தான் ஆங்கில மொழியில் இடம் பெற்றன. ஒவ்வொரு 98 நிமிடத்திற்கு ஒரு முறை புதிதாக ஒரு ஆங்கில வார்த்தை உருவாகிக் கொண்டிருப்பதால், 10 லட்சம் என்ற வார்த்தை என்ற இலக்கை 2009 ஏப்ரல் 29ல் நிச்சயம் அடைய முடியும். இருந்தாலும், அனைத்து வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு பகுதி வார்த்தைகளே பயன்படுத்தப்படுகின்றன.ஒருவர் சராசரியாக 14 ஆயிரம் வார்த்தைகளை பயன்படுத்துகிறார். ஆங்கிலத்தில், பெரிய அளவில் புலமை பெற்றவர்கள் வேண்டுமானால், 70 ஆயிரம் வார்த்தைகளை பயன்படுத்த முடியும்.இவ்வாறு பால்பேயாக் கூறினார்.
