அமெரிக்க சுதந்திரப் போருக்கு உதவிய திப்பு சுல்தான்!தீரர் திப்பு சுல்தான் அவர்களின் வாழ்கை வரலாறு பாகம் 5
பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு "மைசூர் அரசின் சார்பாக' உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு ""உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்'' என்று செய்தியும் அனுப்புகிறார்.
ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், "பென்சன் ராஜாக்கள்' என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.
காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.
"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்'' என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
தகவல் உதவி அபு ஜுலைஹா
