உச்ச நீதிமன்றத்தின் மிக முக்கியமான தீர்ப்பு!
பொதுவாக விபத்துக்களில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திருக்கு தூக்கி செல்ல யாரும் முன்வருவதில்லை காரணம் நம் நாட்டில் உள்ள சட்டம் அப்படி, அதையும் மீறி உதவிக்காக யாராவது சென்றாலும் அவர்களிடம் போலிஸ் தரப்பிலிருந்து, பல கேள்விகள், விசாரனைகள் என்று அவர்களை போலிஸ் ஸ்டேசன் - கோர்ட்டு என அலகழித்துவிடுவார்கள். இதன் காரணமாகவே பல பேர் விபத்து நடந்த இடத்தில் வேடிக்கை பார்த்துவிட்டு அவரவர்கள் கலைந்து சென்று விடுவதை நகரங்களில் கண்கூடாக பார்க்கமுடிகிறது. இளகிய மனமுடையவர்களையும் கல் நெஞ்சுக்காரர்களாக மாற்றும் உயிர் குடிக்கும் இச்சட்டம் தேவைதானா?
வழக்கு எண் 919/2007 இந்த வழக்கு சம்மந்தமாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை 23/02/2007 அன்று வெளியிட்டது.
----------------------------------------------------------------
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தமிழாக்கம்.
விபத்து ஏற்பட்டு குறிப்பாக சாலை விபத்து ஏற்பட்டு காயமடைந்து வருபவர்களுக்கு மருத்துவமனை/மருந்தகம் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சைக்கு தேவையான பணம் மற்றும் போலிஸ் புகார்களை முதலுதவி சிகிச்சைக்கு பிறகே மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அவர்களை அரசு மருத்துவமனைக்கோ அல்லது பெரிய மருத்துவமனைக்கோ மாற்ற வேண்டும். விபத்து ஏற்படும் சமயத்தில் அருகில் இருப்பவர்கள் தைரியமாக விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய முன்வரலாம். காயமானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதுடன் அவர்களின் தொடர்பு((பொறுப்பு)) முடிவடைகிறது. பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து கிளம்பி செல்லலாம். முதலுதவி சிகிச்சை அளிப்பதும், போலிஸுக்கு தகவல் கொடுப்பதும் மருத்துவமனையின் பொறுப்பு.
----------------------------------------------------------------
முக்கியமான இது போன்ற தீர்ப்புகளை மக்களிடத்திலே சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல் துறை அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். காவல் துறை மக்களின் நண்பன் என்று பெயரளவு சொல்வதை விட இது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மக்களிடத்தில் உங்கள் மீதுள்ள அச்சம் நீங்கி நன் மதிப்பும் கிடைக்கும், மக்களின் உண்மையான நண்பன் என்ற சொல்லுக்கும் உயிர் கிடைக்கும்.
அதிரை பைத்துல்மால் போன்ற பொது நல சேவை நிறுவனங்கள் சட்ட ஆலோசனை குழு ஒன்றை ஏற்படுத்தி இது போன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் சேவை செய்தால் நிறுவனத்துக்கு பாதகமா? அல்லது சட்ட சிக்கல் போன்ற பிரச்சனைகள் வருமா என்று இந்த குழு வழக்கறிஞர்களோடு ஆலோசனை நடத்தி உறுதி செய்ய வேண்டும். அவசர ஊர்தி அவசர தேவைக்கு வரவில்லையென்றால் அது இருந்து எந்த பயனும் இல்லை.
-Abdul Barakath.
