அன்றைய ரமளான் - இனிய நினைவுகளுடன்.
அதிரை எக்ஸ்பிரசின் வாசக சகோதர, சகோதரிகளுக்கு முதற்கண் என் இனிய அஸ்ஸலாமு அலைக்கும்.
நேற்று பெய்த மழையில் முளைக்கும் காளான்கள் போல், ரமளான் மாதம் வந்து விட்டால் நமதூரில் ஆங்காங்கே முளைக்கும் வாடா, சம்சா கடைகள்.
பங்குச்சந்தை வர்த்தகம் போல் பரபரப்பாக நோன்பின் மாலை நேரங்களில் நடக்கும் சம்சா,வாடா வியாபாரம். அதனால் அதில் ஈடுபடும் ஏழை, எளிய மக்களின் வறுமை சற்று நீங்கும்.
நம்மூரில் ரமளான் மாதத்தில் நம் குடும்ப, சொந்த பந்த உறவுகளை வலுப்படுத்த (குறிப்பாக சம்மந்தி வீடு) ஒருவருக்கொருவர் ரமளான் பரிசாக் கொடுத்து மகிழும் நோன்பு கஞ்சி, வாடா மற்றும் சம்சா எப்படியெல்லாம் சொந்த, பந்த உறவுகளின் இணைப்புப் பாலமாக விளங்குகிறது என்பது ஒரு ஆச்சரியம் கலந்த உண்மை.
பிறை 17ம் நாள் "பதுருப்படை" அன்று நம் முஹல்லாவுக்குள் ரொட்டி, தேங்காய் வசூலிக்க வேற்று முஹல்லாவாசிகள் நுழைந்து விட்டால் ஏதோ எல்லை தாண்டி வந்த அண்டை நாட்டு ராணுவத்தினர் போல் அவர்களிடம் கடுமையாக அணுகும் முறையை நம்மில் யாரும் மறக்க முடியுமா?
ஜக்காத் கொடுக்கும் நேரங்களில் நம்மூரில் வசதி படைத்தவர்களின் வீடுகளின் வாசல்களில் ஏழை, எளியோரின் வரிசை நியாய விலைக்கடைகளில் (ரேசன்) அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் போல் நிற்கும்.
இரவு நேர விளையாட்டுக்களில் தேநீர் இடைவெளிக்காக வித்ரு தொழுகை சமயம் பள்ளிக்குச் சென்று தேநீர் அருந்தி விட்டு வந்ததை சம்மந்தப்பட்டவர்கள் மறக்க அல்லது மறுக்க முடியுமா?
தேவையில்லாமல் தெருச் சண்டைகளை விலைக்கு வாங்கி வருவதும், வீடுகளின் வாயில்களில் உள்ள கொய்யா,மாதுளை, மாங்காய் மற்றும் தேங்காய் போன்ற கனிவர்க்கங்களை விளையாட்டாய் அதன் பாவம் அறியாது பறித்து வருவதும் இந்நேரத்தில் தான்.
பெருநாள் நெருங்க, நெருங்க துணிக்கடைகளிலும், தையல் கடைகளிலும் கூட்டம் அலை மோதும். பெருத்த லாபமும் அவர்களுக்குப் போய்ச் சேரும்.
பெருநாள் இரவு நல்ல பல அமல்கள் செய்து இறைவனிடமிருந்து பள்ளிகளில் அமல்களின் மூலம் கூலி வாங்குவதற்குப் பதில் தையல்கடைக்காரர்களுக்கு கூலி கொடுப்பதில் தான் நேரங்கள் செலவிடப்பட்டன என்பதை யார் தான் மறுக்க முடியும்?
பெருநாள் அன்று உடல் மேனி மறைக்க சட்டை அணிந்தோமோ, இல்லையோ? ஆனால் சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் புது சலவை நோட்டு தெரிய "மார்ட்டின்" சட்டையை விரும்பி அணிந்ததெல்லாம் ஞாபகத்தில் வராமலா போய் விடும்?
சாதாரன நாட்களில் செல்லாத சொந்த, பந்த வீடுகளுக்கெல்லாம் செல்வோம். காரணம் இல்லாமலா? பாக்கெட்டை கனமாக்கத்தான். "பெருநாள் காசு".
பெருநாள் ஒரு நாளுக்கு முன்பாகவே கடைத்தெருவில் உள்ள "பரீதா" மற்றும் "வின்னர்" சைக்கிள் கடைகளில் எல்லா சைக்கிள்களும் நாள் வாடைகைக்காக எடுக்கப்பட்டிருக்கும் பெருநாள் முழுவதும் சுற்றித் திரிய.
பெருநாள் அன்று நம் பள்ளிகளில் பெருநாள் அழைப்பு விடுக்க "நகரா" அடிக்க நியாய விலைக் கடைகளில் வரிசையில் நின்றது போல் நின்றதெல்லாம் ஞாபகம் வந்து உள்ளத்தில் பரவச மூட்டிச் செல்கின்றன.
ஒரு காலத்தில் நாம் பொருளாதரத்தில் பின் தங்கி தான் இருந்தோம். ஆனால் வாழ்க்கையை மன நிம்மதியுடன், சந்தோசமாகத்தான் கழித்து வந்தோம்.
ஆனால் இன்று நம்மவர்களுக்கு அன்றாடம் வரும் புதிய, புதிய பிரச்சினைகளும், வயது வித்தியாசமில்லாமல், காரணமில்லாமல் வரும் புதிய, புதிய நோய்களும் நம் மன அமைதிக்கு வேட்டு வைத்து விடுகின்றன.
இவையாவும் இன்றைய (மேலேக் கூறப்பட்டவைகளை ரமளான் மாதத்தில் பார்க்க வாய்ப்புகள் குறைந்து போன) நம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த நான் எடுத்துக் கொண்ட சிறு முயற்சியே.
சிறு வயது முதல் இன்றுவரை செய்த எங்களின், பெற்றோர்களின், உற்றார், உறவினர்களின், நண்பர்களின், நம் ஊர்வாசிகளின் மற்றும் உலகை விட்டுச் சென்ற நம்மவர்களின் எல்லாப் பாவங்களையும், குற்றம், குறைகளையும் இப்புனித ரமளானின் பொருட்டால் யா அல்லாஹ்! மன்னித்து எல்லாவற்றிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக! ஆமின். யாரப்பல் ஆலமீன்.
நம் எல்லாப் பிரச்சினைகளையும் தொழுகை மூலம் இறைவனிடம் முறையிட்டு அதற்கான பலாபலன்களை அடைந்து கொள்வோமாக இன்ஷா அல்லாஹ்...
நீங்கள் எங்கிருந்தாலும் இறைவன் அருட்கொடையால் எல்லா வளங்களும் பெற்று நலமுடன், சந்தோஷமாக வாழ வேண்டும் என இப்புனித ரமளானில் இறைவனைப் பிரார்த்தித்தவனாக.
எம்.ஐ. நெய்னா முகம்மது.
சவுதியிலிருந்து.
