சீன பயணம் ஓர் அனுபவம்
சென்னை பூங்கா நகர் வணிக அங்காடிகள் பகுதியை சைனா பஜார் என்றழைத்ததுண்டு. வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு பர்மா பஜார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் விமரிசையாக சுதந்திர தின விழாக்களை கொண்டாடிவிட்டு பணி நிமித்தமாக சீனா வந்திறங்கியதிலிருந்து ஆச்சரியம் பூச்சொறிந்துக் கொண்டு தானிருக்கிறது.
சீன தேசம் எவ்வளவு முன்னேறிவிட்டது. மேகத்தில் தலை துவட்டிக் கொள்ளும் வானுயர்ந்த ஏராளமாக கட்டிடங்கள், வணிக வளாகங்கள், பூங்கா மற்றும் இளைப்பாற பல இடங்கள், சொகுசுப் பேருந்துகள், மிகச் சவுகரியமான மலிவான பாதாள ரயில்கள், ஆடவரும் பெண்டிரும் பஸ் டிரைவர், நடத்துனர்கள், ரயில்வே துப்புரவு, டிக்கட் பரிசோதகர் என்று எல்லாத்துறைகளிலும் சுறுசுறுப்பாக பணிபுரிகிறார்கள். சீன மக்கள் உடை விஷயத்தில் கூட பளிச். மின்வெட்டு, தண்ணீர் தட்டுபாடு இல்லாத நகரங்கள். நாம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளில் இதுபோன்ற பாரதத்தைக் காணப் போகிறோம்?
ரயிலில் ஆறு படுக்கை(பெர்த்)க்கு ஒரு வெண்ணீர் ஃபிளாஸ்க்கில் கேட்காமலேயே தரப்படுகின்றது. வேண்டியவர்கள் கிரீன் டீ உறிஞ்சிக்கொள்ளலாம் அல்லது நூடுல்ஸ் இட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். ரயிலில் பணிப்பெண்கள் தள்ளுவண்டியில் நொறுக்குத் தீனி விற்கின்றனர். கழிவறைகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகிறகின்றன. நம் ஊர் என்றால் பணிப்பெண்ணுக்கு பாதுகாப்பாக(?) நான்கு ஜொள்ளர் அல்லது மன்மதன்கள் இருந்து கொண்டேயிருப்பர்.ஷாங்காய் என்ற வர்த்தக நகரமானாலும் சரி, பெய்ஜிங் ஆனாலும் சரி, ஊக்ஸி என்ற தொழிற்சாலை நகரமானாலும் சரி மக்கள் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியான பண்பாடு. ஆங்கிலம் கிலோ என்ன விலை? என்பதுபோன்று அதிகமானோருக்கு தெறியவில்லை. ஒன், டூ, த்ரி கூட அவர்கள் மொழியிலே கூற நம் விழிகள் பிதுங்கிவிடும். இங்கே மக்காவில் ஹஜ் பயணிகள் ஷாப்பிங் செய்யும் போது மொழி தெறியாத கடைக்காரர் கால்குலேட்டரில் அடித்து காண்பிப்பது போலத்தான் அங்கும்.
அவர்கள் கூறும் விலைக்கு பாதி விலையில் (அடிமாட்டு விலைக்கு) கேட்டால்.. கடைக்காரர்கள் வாயகன்று சிரித்துவிட்டு நம் கன்னத்தை செல்லமாக தட்டிக் கொடுத்து கட்டுபடியாகாததைச் சொல்லுகின்றனர். நம்மூரில் "வந்துட்டான்ய்யா சாவு கிராக்கி..!" என்பது போல அழகிய அர்ச்சனைகள் கிடைக்கும்.
நம் நாட்டில் உள்ளதுபோல எல்லாப்பிரச்சினைகளும் சீனர்களுக்கும் உண்டு. மக்கள் தொகை நம்மைவிட அதிகம். வேலையில்லா திண்டாட்டம் அங்கும் உண்டு. சுற்றுப்புறச்சூழல், மாசு, 800க்கு மேற்பட்ட மொழி, மத, இன வேற்றுமைகள் எல்லாவற்றையும் முண்டியடித்துக்கொண்டு சீனா முன்னேறி வந்திருக்கும்போது இந்தியா மட்டும்…. நெஞ்சு கனக்கிறது.
பயணத்தை முடித்துக் கொண்டு ஜித்தா திரும்புகையில் ஏர் இந்தியாவின் டிரான்ஸிட் பயணியாக டில்லி விமான நிலையத்தில் விமானத்தின் ஜன்னல் வழியாக தாய்நாட்டைப் பார்த்தபோது, தன் தாயை வறுமையுடன் பரிதாபாமாக பார்ப்பது போன்று நெஞ்சு பரிதவிக்கிறது.
With Regards.
M. Rafia Ahamed.
Jeddah –

