கம்யூனிசத்தின் மூலமாக இந்தியாவைப் பொறுத்தவரை சாதி ஒழியும் என்பது சாத்தியமில்லை........!
கொடிக்கால் செல்லப்பாவாக இருந்த நீங்கள், எந்த ஆண்டு கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்வாக மாறினீர்கள்?
1986ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மாறினேன். 8,9 வயது இருக்கும்போது எங்கள் பகுதியில் தலித், அதற்கு அடுத்தபடியாக நாடார்கள்தான் அதிகமாக இருந்தார்கள். “உயர்சாதி” என்று சொல்லப்படுகிறவர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அறவே எங்கள் பகுதியில் இல்லை. நாடார்களும் தலித்துகளும் பல சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நாடார்களே, தலித்துகள் தங்களுக்குக் கீழ் இருக்க வேண்டும்; தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று அவமானப்படுத்தினார்கள். நாடார்கள் தலித்துகளிடத்தில் நடந்து கொண்ட முறையும் செயல்பாடுகளும் எனக்குள் காயத்தை ஏற்படுத்தியது. இந்தத் தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை யாவது நம்மை மனிதர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. கன்னியாகுமரியில் நடைபெற்ற கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 1954ஆம் ஆண்டு கலந்து கொண்டு, சிறை சென்று வெளியில் வந்தோம். சிறைக்குச் சென்று வந்ததால் சமுதாயத்தில் என்னைப் பற்றி ஒரு பார்வை வருகிறது. இது, மிகமுக்கியமான கட்டம். ஏனென்றால், சிறு வயதில் எனக்குப் படிக்கின்ற வாய்ப்பு இல்லை. பொது அறிவு எனக்கு அதிகமாக ஏற்படக்கூடிய நிலை வரும்போது எங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்களின் பார்வை மாறுகிறது. எந்தச் சமுதாயம் எங்களை அவமானப் படுத்தியதோ, என்னை ஒதுக்கி வைத்ததோ, அந்தச் சமுதாயத்தினுடைய அடுத்த தலைமுறை என்னை மதிக்கப் புறப்பட்டது.
நீங்கள் மதம் மாறுவதற்கான சமூகக் காரணங்களைச் சொல்கிறீர்கள். சமூகக் காரணங்களால் நீங்கள் மதம் மாறினீர்களா? அல்லது உங்களுக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட அனுபவங்களால் மதம் மாறினீர்களா?
சமூகத்தில் நானும் ஒரு அங்கம் தானே! சமூகம் பாதிக்கப்படும் போது அதில் நானும் ஒரு ஆள்தானே! அதை நான் பிரித்துப் பார்க்கவில்லை. பல சம்பவங்களை என்னால் சொல்ல முடியும். ஒரு ஆளை சந்திக்கும்போது, ஒரு வீட்டிற்குப் போகும்போது, என்னை நடத்திய நடைமுறைகள், எனக்கு ஒரு காயத்தை ஏற்படுத்தியது. அந்தக் காயம் நிரந்தரமாகவே உள்ள காயம். சமூகக் காரணங்களால்தான் நான் மதம் மாறினேன். நான் “கன்வின்ஸ்” ஆனதால் மதம் மாறினேன். என்னுடைய மனைவி கிறித்துவப் பெண். கம்யூனிஸ்ட் இயக்கத்திலேயே அந்தக் குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்ததனாலே, என்னுடைய மனைவி நாத்திகவாதி. அவர் சர்ச்சுக்கு போவது கிடையாது; சடங்கு சம்பிர தாயங்களில் பங்கெடுத்தது கிடையாது. அப்போது நான் இப்படி ஒரு முடிவு எடுத்த பிறகு, அதை என் மனைவியிடம் சொல்லும்போது, என்னைத் திட்டினாங்க. இருந்திருந்து ஒரு மதவாதியாக மாறிட்டீங்களே! பகுத்தறிவு ஊட்டினவங்க காலம் முழுவதும் அதற்காகவே பாடுபட்டவங்க, சமூகத்தில் என்னென்னவோ செய்தீங்க. இருந்திருந்து மதவாதியாக மாறிட்டீங்களே என்று வருத்தப்பட்டார்.
அதற்கு உங்களுடைய பதில் என்ன?
அதற்குப் பிறகுதான் அவருக்கு சில நூல்களை எல்லாம் கொடுத்தேன். நான் என் மனைவியிடம் சொன்னேன்: நாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்றால், அந்த இயக்கம் ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் என்று நம்பினோம். அந்த நம்பிக்கையில்தான் நீயும் நானும் இரவு பகலாகப் பாடுபட்டோம், உழைத்தோம், கஷ்டப்பட்டோம். பலநாள் ஜெயிலுக்குப் போனோம். எல்லாம் நடந்தது. இதில் ஏதாவது ஒரு மாற்றம் உனக்கு வந்திருப் பதாகத் தெரிகிறதான்னு கேட்டேன். யோசித்த பிறகு, ஆமாம் நம்முடைய தோழர்கள் எல்லாம் தோழமையோடுதான் இருக்காங்க. ஆனால், அவங்க வீட்டில் அப்படியில்லை. நம்ம வீட்டுக்கு வருகிற கட்சித் தோழர்கள் அக்கா-தங்கச்சி என்கிற உறவோடு, அந்த பந்தத்தோடு நம்மிடம் அன்பு செலுத்தறாங்க. அதெல்லாம் சரிதான். ஆனால் அவங்க அப்பாவோ, அம்மாவோ, தம்பியோ, தங்கச்சியோ நம்மள அப்படிப் பார்த்ததில்லையே! இதில் ஒரு உண்மை என்னவென்றால், இதை மாத்தணுங்கிறது தானே எனக்கும் உனக்கும் நோக்கம். ஆமாம். அதற்கு ஒரே வழி என்னன்னு சொன்னா - மதமாற்றம்தான்.
நம்முடைய எல்லாவிதமான முன்னேற்றத்திற்கும் இங்கு தடையாக இருப்பது ஜாதிதான். இந்த ஜாதியை ஒழிக்கணும், இந்த ஜாதி மாறணும். இது எங்கு போனாலும் இருந்திட்டு இருக்கில்ல. இது மாறுவதற்கு ஏதாவது வழி உண்டா? அது கம்யூனிஸ்ட் மூலம் முடியும் என்று நம்பினோம். நம்பிக் கொண்டிருந்தோம். நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். உனக்கு நம்பிக்கை உள்ளதா? என்று கேட்டேன். ஜாதி ஒழியாது. ஜாதி ஒழியவில்லை என்று சொன்னால், மக்களுக்கு அந்தஸ்து எப்படி கிடைக்கும்? அப்ப கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லையே. அது நம்ப இஸ்லாத்து மூலமாக கிடைக்குமா என்று ஒரு கேள்வியை என் மனைவி கேட்டார். அது கிடைக்கும். எப்படி கிடைக்கும் என்று சொன்னால், கம்யூனிசத்தின் மூலமாக இந்தியாவைப் பொறுத்தவரை சாதி ஒழியும் என்பது சாத்தியமில்லை. அந்தத் தத்துவம் சரியா, தப்பான்னு நான் அங்கு போகவில்லை. இந்தியச் சூழ்நிலையில் எல்லா விதமான மாற்றத்திற்கும் தடையாக இருப்பது ஜாதி அமைப்பு முறை. இந்த ஜாதிகள் ஒழியாமல், இங்கு வர்க்கப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. அப்படியிருக்கும்போது, நம் எண்ணங்கள் நிறைவேறாத ஒரு இயக்கத்திலே, ஒரு கொள்கையிலே ஏன் விடாப்பிடியாக நாம் இருக்கணும்? இதுதான் நான் அவருக்குச் சொன்ன பதில்.
கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்!!
நன்றி: தலித் முரசு (அக். - நவம்பர் 2005)…!
