சமையலறை என்றதுமே ..............!
சமையலறை என்றதுமே அதனை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வுதான் இல்லத் தலைவிகளுக்கு முதலில் வரும். அதே போல குடும்ப ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, காய்கறிகளையும் உணவுப் பொருட்களையும் பார்த்துப் பார்த்து வாங்குவதும் குடும்பத் தலைவிகளின் வழக்கம்.
ஆனால், இதே கவனம் சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் விஷயத்திலும் தேவை என்பது தெரியுமா? சரியான பாத்திரங்களை பயன்படுத்தாவிட்டால் (அ) பாத்திரங்களை சரியான முறையில் கையாளாவிட்டால், உணவிலும் நச்சுத்தன்மை சேர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது தெரியுமா?
இதனை தவிர்க்க, பாத்திரங்களை பராமரிப் பது எப்படி எனப் பார்ப்போம்.
பாத்திரங்கள் என்றதுமே பெரும்பாலும் கண்ணில் படுவது அலுமினியப் பாத்திரங்களாகத்தான் இருக்கும். மற்ற எந்த உலோகத்தையும்விட விலை குறைவானது என்பதால் அலுமினியம் சமையலறையில் கோலோச்சுகிறது. பயன் படுத்துவதற்கும் எளிமையானது. அலுமினியப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உணவிலும் கொஞ்சம் அலுமினியம் கலந்து உடலில் சேர்ந்துவிடுகிறது. அல் சைமர் நோய் போன்ற நோய்களுக்கு அலுமினியச் சத்தின் சேர்க்கை ஒரு காரணமாக கருதப்படுகிறது.
ஆனால் அலுமினியத்தை நினைத்து ரொம்பவே கவலைப்பட வேண்டியதில்லை என்கின்றனர். காரணம், அலுமினியம் எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. பூமியில், காற்று மண்டலத்தில் என எல்லா இடத்திலும் அலுமினியம் ஏதாவது ஒரு வடிவில் உள்ளது. சுவாசிக்கும் போதும் அலுமினியத்தை சேர்த்தே சுவாசிக்கிறோம். இருப்பினும் அலுமினியப் பாத்திரத்தை பயன்படுத்தும்போது, அலுமினியம் சேர்வதால் எற்படக்கூடிய பாதிப்பில் இருந்து பாதுகாக்க. கால்ஷியம், துத்தநாகம், மாங்கனீஸ் போன்ற சத்துக்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் கீரைகள் மற்றும் அமிலத்தண்மை கொண்ட பொருட்களை அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பது நல்லது. இவைதான் அலுமினியத்தை அதிக அளவில் ஈர்த்துக் கொள்பவை!
இரும்பு, பல காலமாக சமையலுக்கு பாத்திரமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் உலோகம்தான். இப்போது இரும்புப் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுவது குறைந்து வந்தாலும், சமைப்பதற்கு இவை சிறந்தவை. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது கொஞ்சம் இரும்புச் சத்து உணவில் கலந்து உடலில் சேர்ந்துவிடுகிறது. இரும்புச் சத்து, கால்ஷியம் சத்தையும் தேடித்தரும் ஆற்றல் கொண்டது. அதோடு, இரும்புப் பாத்திரத் தில் சமைக்கும்போது வெப்பம் சீராக பரவுவதோடு, நீண்ட நேரம் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்வதும் சாத்தியம். எனவே, இரும்பு வாணலி போன்றவற்றை தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் ஒன்று இரும்புப் பாத்திரம் சமைப்பதற்கு உகந்த அளவிற்கு பொருட்களை வைத்திருக்க ஏற்றதல்ல. எனவே, சமைத்து முடித்தவுடன் உணவுப் பொருட்களை வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடுவது நல்லது.
தற்போது பீங்கான் பாத்திரங்கள் பிரபலமாகி வருகின்றன. பீங்கானும் காலங்காலமாக பயன்பாட்டில் இருப்பது தான். பீங்கான் சமைப்பதற்கு ஏற்றது என்றாலும், பீங்கான் பாத்திரம் உயர் தரத்திலானதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காரணம், மலிவு விலை பீங்கான்கள், அவற்றை தயாரிக்கத் தேவைப்படும் உயர்ந்தபட்ச கொதி நிலையில் உருவாக்கப்படுவதில்லை. இத்தகைய மலிவு விலை பீங்கான்களை, அலங்காரப் பொருட்களாக பயன்படுத்தப்படுவதில் தப்பில்லை. ஆனால் மலிவு விலை பீங்கானில் சமைத்தால் உணவில் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இருக்கிறது.
பித்தளைப் பாத்திரங்களை பயன்படுத்தும் வழக்கம் குறைந்து வந்தாலும், சமையலுக்கு பித்தளையை விட ஏற்ற உலோகம் இல்லை என்று சொல்லாம். பித்தளைப் பாத்திரத்தில் பல அனுகூலங்கள் இருக்கின்றன. பித்தளை பாத்திரத்தில் விரைவாகவும், சமமாகவும் வெப்பம் பரவுவதால், சமைப்பது சுலபம். மேலும் உணவின் சுவையும் குறையாமல் இருக்கும். பித்தளைப் பாத்திரங்களை கழுவி சுத்தமாக்குவதும் சுலபமானது. ஆனால், பித்தளைப் பாத்திரங்களைக் கழுவி, நன்றாக காய வைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் நச்சுத்தன்மை கொண்ட காப்பர் சல்பேட் உருவாகிவிடும். அதே போல அமிலத்தன்மை கொண்ட பொருட்களும் பித்தளையோடு ரசாயனச் சேர்க்கையில் ஈடுபடும். பித்தளைப் பாத்திரத்தில் சமைக்கும் போது, குறைவான வெப்பத்தில் சமைப்பதும் மரக்கரண்டிகளை உபயோகிப்பதும் நல்லது.
அதே போல எனாமல் பூசப்பட்ட பாத்திரங்களும் பாதுகாப்பானவை. எனாமல் பாத்திரங்களையும் தரமானதாக வாங்கி பயன்படுத்த வேண்டும். மலிவு விலை எனாமல் பாத்திரங்கள் என்றாலும் கேடியம் நச்சு சேரும் அபாயம் உள்ளது.
எனாமல் பாத்திரங்களை சமைத்து முடித்தவுடன் சுத்தம் செய்து விடுவது நல்லது. பின்னர் ஈரம் முழுவதையும் துடைத்துவிட வேண்டும்.
நவீன சமையலறையில் நான்ஸ்டிக் பாத்திரங்களுக்கு முக்கிய இடம் கிடைத்திருக்கிறது. நான் ஸ்டிக் தவா போன்றவை பயன்படுத்த எளிதானதாக கருதப்படுகின்றன. ஆனால் மலிவு விலை நான்ஸ்டிக் சாதனங்கள் மீது, பர்புளோரூக்டானிக். அமில முலாம் பூசப்படுவது வழக்கமாக இருக்கிறது. நான்ஸ்டிக் பாத்திரம், காலியாக இருக்கும்போது சூடாக நேர்ந்தால், இந்த அமிலத்தை வெளியேற்றுகிறது. உஷ்ணம் மிகவும் அதிகமானால் நச்சுத்தன்மை கொண்ட வாயுவும் வெளியாகலாம். இந்த நச்சுப்புகையை சுவாசித்தால் தற்காலிக காய்ச்சலும் ஏற்படும். அது மட்டும் அல்லாமல், ஒரு சிலருக்கு இந்தப் பாத்திரங்கள் அலர்ஜியையும் உண்டாக்கலாம். நான்ஸ்டிக் பாத்திரங்களை உபயோகிக்கும் போது அதிகமான உஷ்ண நிலையில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். மேலே உள்ள பூச்சு பாதிப்படையத் தொடங்கிய பின் பயன்படுத்துவதை கைவிட்டுவிட வேண்டும்.
அடுப்புகளுக்கு பதில் மைக்ரோவேவ் அடுப்புகள் புழக்கத்திற்கு வரத் தொடங்கியிருக்கும் காலம் என்பதால், சமையலறையில் கண்ணாடிப் பாத்திரங்களும் நுழைந்திருக்கின்றன. பொதுவாக கண்ணாடிப் பாத்திரங்கள் பயன்படுத்த ஏற்றவை. கண்ணாடிப் பாத்திரங்களுக்கு என்று எளிய பரிசோதனையும் இருக்கிறது. ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து கண்ணாடிப் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கண்ணாடி மீது கிண்ணம் படாத வகையில் மைக்ரோவேவ் அடுப்பில் ஒரு நிமிடம் வைக்க வேண்டும்.
ஒரு நிமிடம் கழித்து வெளியே எடுக்கும்போது தண்ணீர் மட்டும் தான் சூடாகி இருக்க வேண்டும். கிண்ணம் சூடாகாமல் இருந்தால் கண்ணாடிப் பாத்திரம் நன்றாக இருப்பதாக பொருள். இல்லை என்றால், அதில் அதிக ஈயம் கலந்திருப்பதாக கொள்ளலாம். பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதில்லை என்றாலும், வண்ண கண்ணாடிப் பாத்திரங்களை தவிர்ப்பது நல்லது. கண்ணாடிப் பாத்திரங்களிலும் தரமானதை பார்த்து வாங்கினால் கவலை இல்லை.
இவற்றைத் தவிர இருக்கவே இருக்கின்றன எவர்சில்வர் பாத்திரங்கள். எவர்சில்வர் பாத்திரங்களின் அடிப்பகுதி தடிமனாக இருந்து சமைக்கும் பொருட்கள் தீய்ந்து போகாமல் இருக்கும். இந்தப் பாத்திரங்களை கழுவும்போது அதிக கீறல்கள் விழாமல் இருக்க வேண்டும். கீறல்கள் விழும்போது அதில் உள்ள நிக்கல் மற்றும் குரோமியம் உணவிலும் கலக்கலாம்.
- இரா.நரசிம்மன்.
courtesy:kumudam health
