அய்டாவின் (AYDA) அப்ஹா சுற்றுலா
ஸுபஹானல்லதி சஹ்ஹர்ரலனா..... ஹாதா.... வமாகுன்னா.... பிரயாண துஆ, சவூதி அரேபியாவின் விமானத்தில் அமர்ந்து புறப்படுகையில் ஒலி பெருக்கியில் கேட்கும்போது உண்மையாகவே இறையாண்மையை பறை சாற்றும் ஒரு கம்பீரக்குரல், அதே துஆவுடன் சகோ ரஃபீக் அபூபக்கர் மொழிய கோரசாக நாங்கள் அனைவரும் முழங்க ஜித்தாவிலிருந்து ஆடவர், பெண்டிர் மற்றும் சிறார்கள் உட்பட சுமார் 30 பேர்களை மூன்று ஊர்தியில் நிரப்பிக்கொண்டு 'அய்டாவின் அப்ஹா சுற்றுலா' துவங்கியது.
30.09.2008 நோன்புப்பெருநாளின் மறுநாள் ஆனதால் காலையிலேயே மக்கள் வேண்டுகோளின்படி நாஸ்தா நச்சரிப்பு சான்ட்விச் பசி-யாற்றி பயணத்தை தொடங்கினோம். அப்ஹாவும் ஒரு அழகிய மலையரசி! தாயிப் நகரைப்போலவே ஒரு கோடை வாசஸ்தலம் ஏமன் தேசத்தை நோக்கி ஜிசானுக்கு போகும் வழியில் அல்லீத் என்னும் சிற்றூரை தொட்டு எங்களின் வண்டிகள் விரைந்தன. வழிநெடுக நல்ல வெப்பம் கூடுதலாக இருந்ததால் ஒருவருக்கு சட்டை 'கதராகி' விட்டது. மற்றொருவருக்கு முழுப்பேண்ட் முக்கால் பேண்டாகி(பர்முடாஸ்) விட்டது. இன்னொருவருக்கோ பேண்ட் கைலியாக மாறிவிட்டது. (இதாம்ப்பா..... ராஹத்தாயிருக்குது....!)என்றார். லுஹர் & அசர் கசராக தொழுதுவிட்டு மதிய சாப்பாட்டு வேலையை முடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். அழகிய மலைகளும் இறைவனின் படைப்பின் அதிசயங்களும் தெரியத் தொடங்கின. மெல்ல மெல்ல குளிர்காற்று எங்களை வருடத்தொடங்க ஆடைக்குறைப்பு செய்தவர்கள் வாடைக்காற்றுக்கு வருந்த சாலைகள் பாம்புபோல வளைந்து வளைந்து மலையேறத்தொடங்கின.
ஜித்தாவிலிருந்து சுமார் 800 கி.மீ தொலைவிலிருக்கும் அபஹாவும் கமிஸ்முஷைதும் ட்வின்ஸ் சிட்டி போலாகும். நம் நாட்டு ஹவ்ரா-கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் -செக்கந்தராபாத் போன்ற இரட்டை நகரம் எனத்தோன்றுகிறது. கிழக்கே கங்கை கலக்கின்றது தெற்கே சாகர் பிரிக்கின்றது. இங்கே அபஹாவையும் கமீஸ்ஸையும் விமானத்தலம்தான் இணைக்கின்றது அய்டா பொருளாளர் ப.. சிதம்பரத்தனமாக செயல்பட்டு அஜீஸ்பண்ணி நயம்பட நடந்தார். ஆனால் மலைப்பாதைகளில் சிலவற்றை(?!) பார்த்ததும் "காக்கா...... காக்கா.... காக்........கா வண்டியை நிறுத்......துங்….கோ!" சொரிந்துகொள்ள என்னவென்று பார்த்தால் மதில்மீது ஏறிக்கொண்டும், மரத்தில் தாவிக்கொண்டும் நின்றவைகளுக்கு மக்கள் கேக், முறுக்கு விநியோகம் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். என்னயிருந்தாலும் பாசம்..... ஆங்கிலச்சொல்படி Nativity இருக்குமல்லவா?! அங்கு ஊருக்கே குளிர் சாதன வசதி இறைவனால் இலவசமாக வழங்கப்பட்டிருந்ததை நம் கண் குளிர காணமுடிந்தது. சுபஹானல்லாஹ்....
நம் நாட்டில் மலைகளின் ராணி நீலகிரி (ஊட்டி) என்பார்கள். அப்படியானால் சவுதியின் மலைப்பிரதேசம் அப்ஹா மலைராணியின் சாச்சி மகள் போலும். (எல்லாம் தாயபுள்ளமா...) வானரங்கள் தன் சேஷ்ட்டையால் நம்மை வருகவென வரவேற்றதையும் கண்டோம். (பாவம் அதை விட கில்லாடி மனித ரகங்கள் (அஜ்வா நெய்னா, அஜீஸ்) நம் குழுவில் இருப்பது அதற்கு தெரியாது போலும்.) ஷம்ஸ் ஹார்-சூரியன் உக்கிரம்தான் ஆனால் 30000 அடி கண் கூசியதுதான். அதுவும் அப்ஹாவின் தாஜ் கிரீடம் அல்ஸுதாதான். அங்கேயே இரவு தங்கினோம் ஒரு மலையிலிருந்து சுற்றிச்செல்வதற்கு இன்னொரு மலையை குடைந்து பாதை மிக அற்புதமாக அமைத்துள்ளனர். இதுபோன்று 11 குகைப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. குகைக்குள் வாகனங்கள் நுழையும்போது PUT ON YOUR HEDLIGHTS என்று அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மும்பைக்கு ரயிலில் நெருங்கையில் 8 இடங்களில் இதுபோன்ற குகைகளை காணலாம். இடையிடையே தலைவலியில் ('தல' / "தலக்கே" தலைவலி?!) உதிரிபாகத்திற்காக சிலமணிநேர காத்திருப்பு! உணவு உரிய நேரத்தை வழுகி கிடைத்தது போன்ற சிற்சில சங்கடங்களை தங்கள் பொக்கை வாய் புன்சிரிப்பால் போக்கடித்தது லிட்டில் ஸ்டார்ஸ் சனாவும், தஹ்ஸினாவும்தான். நமக்கு சிலமணி நேரங்களுக்கு முன்னாள் வெப்பம் இப்போதோ விடுதியில் குளிர். பால்கனியில் நிற்கமுடியாத அளவுக்கு இறைவனின் படைப்பின் நுட்பம் மறுநாள் காலையில் கழிவறை ஒன்றிரெண்டே உள்ளதால் பஜ்ர் தொழுகை நான்கு ஐந்து நான்கு என்று (நம்மூர் பெருநாள் தொழுகை மாதிரி) பல ஜமாத்துகளுடன் நடந்து முடிந்தது குளிர்ந்த நீரில் எப்படி குளிப்பது என்று யோசித்தவர்கள் வெப்பமும் குளிரும் கலந்த தண்ணீரில் இதமாகக்குளிக்க, பாத் ரூமின் உள்ளே இருப்பவரை பழி வாங்க வேண்டுமானால் வெளியிலிருக்கும் வாஷ்பேசினை திறந்தால் ஏய்.....ஏய்.....யாரது..... என்று வேண்ட நல்ல தமாஷ்!
சவூதி அரேபியாவின் மிக உயரமான இடமான இந்த இடத்திற்கு விடுமுறை நாட்களில் பல பாகத்திலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். உச்சியிலிருந்து பள்ளத்தாக்குகளையும் மற்ற மலைகளையும் காணும் வியூகம் அலாதியானது. இங்கிருந்து கேபிள் காரில் அடித்தளம் வரை 15 நிமிடத்திற்கு அழைத்து சென்று வருகின்றனர். இருமங்கும் அமைந்துள்ள மலைகளுக்கிடையே தான் இந்த கேபிள் கார் நகர்கிறது அச்சம், ஆச்சர்யம், பிரமிப்பை ஏற்படுத்தும் இன்னொரு கேபிள் அபஹாவிலிருந்து 50கி.மீ.ல் ஹப்லா எனும் இடத்தில் அமைந்துள்ளது. மேலே பூங்கா, பள்ளத்தாக்கில் பள்ளி, உணவு விடுதி. அந்த பள்ளத்தாக்கிலும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாலை இருமருங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. ஒரு மலையை முழுவதும் பச்சை விளக்குகளால் அழகூட்டப்பட்டிருந்தது கண்ணை கவர்ந்தது. அதில் ஏறிப்பார்க்க ஆசைப்பட்டு சுத்தோ சுத்துன்னு சுற்றி, பிறகுதான் அது 'அக்கரைப்பச்சை' மலை என உணர்தோம். மற்றொரு மலையோ சிப்பி சிப்பிகளாக சிற்பிக்கப்பட்டிருந்தது.
உள்ளூரில் வசிக்கும் நண்பர் திரு. பிச்சுமணி என்னும் அப்ஹா தமிழ் சங்க பொருளாளர் பல மணிநேரம் எங்களுடன் இருந்து ஒத்துழைப்பு தந்து வழிகாட்டியது நன்றிக்குரியது, மேலும் ஒரு மாலை நேரத்தில் மௌலவி இப்ராஹீம் மதனி அவர்கள் ஒரு இலங்கை டீமுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கும்பொழுது சந்தித்து மகிழ்ந்து, 'ஈந்திய டீமுடன் மெச் ஒண்டு போட ஏலுமா' என நாங்கள் அணுக முதல் பந்திலேயே அவர்கள் கேச் ஆக அத்தோடு மூச்?! ஜாலி சேஷ்டைகள் வரைமுறையோடு இருக்க வந்திருந்த மூத்த அங்கத்தினர்கள் ஹாஜி அபூ ஹனீப் மற்றும் ஹாஜி ஜக்கரியா பெரிதும் உதவினர். . ஒருவழியாக பூனை கொள்ளை விஜயம் (பெருநாள் முடிந்த மறுநாள் அல்லவா) முடிந்தது.
மறுதினம் மலையை சுற்றி சுற்றி இறங்க எங்களை சுற்றி சூடு ஏற வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரயாணிக்கு வாஜிப் இல்லைதானே என்று வாதாட வாகனமும் உண்டு சமய வசதியும் உண்டு என்று ஒரு சிற்றூரில் ஜும்ஆ கடமையை மன நிறைவோடு முடித்து வயிற்றை நிறைக்க உணவு விடுதி நாடினோம்.எமன் நாட்டுக்கார சாப்பாட்டு கடைக்காரரோ பீஃ பிரியாணி, பீஃ ருபியாணி பீஃ ஜீலானி பீஃ புஹாரி பீஃ மந்தி என்று கூறிக்கொண்டே போக கப் என்று பிடித்து முந்தியே உட்கார்ந்து விட்டோம். அரபு நட்டு இறைச்சி சாப்பாடு என்பதால் சற்று விலை கூடுதலாக இருந்தாலும் கடைக்காரர் எங்களிடம் நீங்கள் எந்த நாடு என்று கேட்க, கைலி உடுத்த எங்களுக்கு கற்று தந்தது நீங்கள் சோறு உன்ன உங்களுக்கு பழகி தந்தது நாங்கள் என்று சொன்னவுடன் அகமகிழ்ந்த கடைக்காரர் தள்ளுபடி விலையில் சாப்பாட்டை தள்ளினார். மீண்டும் எங்கள் பயணம் ஜித்தாவை நோக்கி துவங்கியது. இடையிடையே இளைப்பாற தேநீர் உபசரிப்பும் களைப்பாற ஓட்டுனர் மாற்றமும் செவ்வனே நடைபெற மகிழ்வோடு ஜித்தா வந்தடைந்தோம். ஆக மொத்தம் ஒருகாலத்தில் நம்மூரில் பெருநாள் அன்று பெண்களெல்லாம் பூனைக்கொல்லை என்று சொல்லி சென்று வருவார்களே அதுபோல் தான் இன்றைய நாகரிக உலகின் பூனைக்கொல்லையாக அப்ஹா சென்று வந்தோம்.
இப்பயணத்தால் யாருக்கும் கூதக்காச்சல் வந்ததா? எனத் தெரியவில்லை. இப்படியெல்லாம் விடுமுறைகாலங்களில் சுற்று (அ) சிற்றுலா சென்று வருவதால் நம் உள்ளத்தின் சுமைகளெல்லாம் பறந்து போய் புதுத்தெம்புடன் பணிக்குச் செல்ல உதவுகிறது.
இனிய சுற்றுலா நினைவுகளுடன். எழுதி வழங்கி மகிழும்,
எம். ரஃபியா
ஜித்தாவிலிருந்து.