கல்லை தெய்வமாக வணங்குகிறவன் காட்டுமிராண்டி
மக்களுக்கு தொண்டு செய்து, அதன் முலம் மக்களிடையே பிரபலமானவர்களுக்கு, அவர்கள் இறந்தபின், சிலருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களது உருவத்தை மாலையாக வடித்து, பல இடங்களில் நிறுத்தி மாலையிட்டு மரியாதை செய்து வருவதைப் பார்த்து வருகிறோம்.மாலை மரியாதை என்பது போய் கால ஓட்டத்தில் அக்கற்சிலைகள் தெய்வங்களாக உயர்வு பெற்று விடுகின்றன.
மனிதனின் கால் மிதிபடும் கல் அந்த மனிதனே தெய்வமாக வணங்கும் நிலைக்கு உயர்வதற்கு யார் காரணம்? மனிதனின் அறிவற்ற செயலே இதற்குக் காரணம். தங்களை பெரும் பகுத்தறிவாளர்கள் என கூறிக்கொள்வோரும் இதற்கு விதிவிலக்குப் பெற்றவர்களாக இல்லை.
மிதிக்கும் படியும் கல்லுதான்; வணங்கும் சிலையும் கல்லுதான். கல்லை தெய்வமாக வணங்குகிறவன் காட்டுமிராண்டி என வசை பாடியவர்கள், இன்று தாங்கள் மதிக்கும் தலைவர்களை அதே கல்லைக் கொண்டு சிலைகளாக வடித்து மாலை மரியாதை செய்து வருகிறார்கள். இந்த சிலைகளே சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தெய்வங்களாக மாறுகின்றன என்ற உண்மையை விளங்காதவர்களாக இருக்கிறார்கள்.
மனிதன், ஆரம்பத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கத்துடன் சமாதி, பின்னர் கற்சிலை வடித்தல் என்று ஆரம்பித்துப் பின்னர் அதுதான் சிலை வணக்கமாக மாறுகிறது என்பதை இறுதி மறை அல்குர்ஆன் 71:23 அம்பலப்படுத்துகிறது.
மனிதர்களாக வாழ்ந்து இறந்தவர்களுக்கு மரியாதை என்ற பெயரால் நிறுவப்படும் கற்சிலைகளே குட்டி, குட்டி தெய்வங்களாக உருவாகி மனிதர்களிடையே பல தெய்வ வழிபாட்டை உருவாக்குகின்றன. தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கின்றவர்கள் இந்த பொய்க் கடவுள்களை ஒழிப்பதற்கு பதிலாக, இவர்களே மேலும் பொய்க் கடவுள்கள் தோன்ற வழி வகுத்துக்கொண்டு அகில உலகங்களையும் படைத்து நிர்வகித்து வரும் அந்த ஒரேயொரு இறைவனை மறுக்கும் நாஸ்திகர்களாக ஆகிவிடுகிறார்கள்.
இவர்களும் மனிதனின் சீரழிவுக்கு புரோகிதரகளைப் போலவே ஒரு வகையில் காரணமாகிவிடுகிறார்கள்.இந்த சிலைகள் இறைவன் மன்னிக்காத, இறைவனுக்கு இணை வைக்கும் கொடும் செயலை மனித வர்க்கம் பக்தியுடன் செய்ய வைப்பது ஒருபுறம் அச்சிலைகளே மனிதர்களிடையே பெரும் கலவரங்கள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒரு சமூகத்தாருக்கு பெரும் தலைவராகத் தெரியும் ஒருவர், இன்னொரு சமூகத்தாரின் வெறுப்புக்குக் காரணமாக இருக்கிறார். எனவே ஒரு சமூகத்தாரின் சிலையை பிரிதொரு சமூகத்தார் அவமானப்படுத்தும் நிலையும் அரங்கேறி வருகிறது.அதனால் சிலைகளை பாதுகாக்க அதனைச் சுற்றி கம்பி வேலி போடுகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். தலைவர்களின் சிலைகள் சிறைக் கைதியாகவும் அவர்களின் தலைகள் பரவைகளின் மலக்கூடமாகவும் காட்சி அளிப்பதை பார்க்கிறோம். சிலைகளை சிறையிலிட்டு பாதுகாப்பு அளித்தும், அவற்றை உடைத்து அவமானப்படுத்தும் செயல்களும் நிற்பதாக இல்லை.உத்திர பிரதேசத்தில் அம்பேத்கார் சிலையை யாரோ உடைத்து அவமானப்படுத்தி விட்டார்கள். அதனால் மஹாராஷ்டிராவில் பெருங்கலவரம் ஏற்பட்டு தொடர்வண்டிகள், நூற்றுக்கணக்கான பேருந்துகள், வாகனங்கள் எரிப்பு, உயிர்ச் சேதம் என பல கோடிகள் நாசமாகின.பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.
தலைவர்களைக் கண்ணியப்படுத்தும் நோக்கத்துடன் மாவட்டங்களுக்கு அத்தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. அப்படி ஒரு மாவட்டத்துக்கு ஒரு தலைவரின் பெயர் வைக்கப்போய் அங்கு பெரும் கலவரங்கள் மூண்டன. அரசு அக்கலவரத்தை அடக்க முடியாமல் தவித்தன. இறுதியில் அந்த மாவட்டத்திற்கு அந்தத் தலைவரின் பெயர் வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதுடன், ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு, பழைய பெயர்களே மீண்டும் வைக்கப்பட்டன.இதே அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இன்னொரு அழகிய முடிவை எடுத்தால், அது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதாக அமையும். அதுவே நாட்டிலுள்ள தலைவர்களின் சிலைகளை அகற்றுவதாகும். அவர்களுக்கு சிலைவடித்து, சிறையிலிட்டு, அவர்களின் தலையை பறவைகளின் மலக்கூடமாக ஆக்குவது உண்மையில் அவர்களுக்கு மரியாதை செய்வதாக ஆகாது.எனவே நாட்டிலுள்ள சிலகளை அகற்றுவது பல தெய்வ வணக்க வழிபாடுகளை ஒழிக்க வழி வகுப்பதோடு, சமூகங்களில் ஏற்படும் சச்சரவுகளால் பெரும் கலவரங்கள் ஏற்பட்டு பல கோடி நஷ்டத்தோடு, பொன்னான மனித உயிர்களும் மாய்க்கப்படுவது தவிர்க்கப்பட வழி ஏற்படும்; சிலை விரும்பிகள் சிந்திப்பார்களா?
