கண்கலங்க வைத்த கதை
ஒருவன் தன் உழைப்பால் வரும் வருமானத்திலிருந்து சிறுக,சிறுக சேர்த்து வாங்கிய தன் புதிய காரை புதுப்பொழிவுடன் என்றும் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதை மிகவும் பாதுகாப்பாக ஏதோ வைரக்கல்லை மெருகூட்டுவது போல் மெல்ல, மெல்ல துடைத்துக் கொண்டிருந்தான்.
அச்சமயம் அங்கு வந்த அவனுடைய நான்கு வயதே நிரம்பிய மகன் காரின் மறுபுறம் சிறுபிள்ளைக்கே உரிய விளையாட்டுத்தனத்தில் ஒரு கல்லை எடுத்து காரில் கிறுக்கி விட்டான்.
அதைக் கண்ட காரின் முதலாளியான அவன் தந்தை என்ன செய்திருக்க வேண்டும்? தன் பிள்ளையை செல்லமாக கண்டித்து (இது மனிதர்களின் மனோபாவத்திற்கேற்ப (சாந்தமான குணம்) வேறுபடும்) அல்லது அதற்கு ஒரு படி மேல் போய் கடின சொல் மூலம் லேசாக அவனைத்தட்டி அனுப்பி இருக்க வேண்டும். தன் மகனின் கையைப் பிடித்து கதறக்கதற தன் கையில் வாகனத்தின் பாகங்களை கழற்ற பயன் படுத்தப்படும் ஆயுதம் இருக்கின்றது என்று கூடத்தெரியாமல் ரத்தம் சொட்ட, சொட்ட தண்டித்து விட்டான் அந்தப் பாலகனை "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பதை நிரூபிப்பவனாக.
பிறகென்ன 'அழுதாலும் குழந்தை அவள் தானேப் பெற வேண்டும்" என்பது போல் அவன் பெற்றப் பிள்ளையல்லவா அந்த பாலகன்?. அச்சிறுவனை ரத்தம் சொட்ட, சொட்ட தன் காரிலேயே அள்ளி போட்டுக் கொண்டு மருத்துவமனை விரைகிறான்.
மருத்துவமனையில் தன் மகனின் கை நரம்புகள் மிருகத்தனமான அடியால் துண்டிக்கப்பட்டு கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுகின்றனர் பாவம் அந்த பச்சிளம் பாலகன். பிறகு அறுவை சிகிச்சை செய்த கையில் முறையே கட்டுகள் கட்டப்பட்டு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்ட அச்சிறுவன் ஒன்றுமறியாத பிஞ்சு உள்ளத்துடன் தன் தந்தையை நோக்கி கேட்கிறான் "அப்பா (எப்பப்பா) எப்பொழுது என் கை விரல்கள் வளரும்"? (பாவம் ஏதோ வெட்டப்பட்ட செடி பிறகு முளைத்து வருவது போல் துண்டிக்கப்பட்ட தன் கையும் வளரும் என்று நினைத்துக் கொண்டான் போலும்.)
அதைக்கேட்ட தந்தை வாழ்க்கையில் வெறுப்புற்றவனாக, கைசேதத்தை உணர்ந்தவனாக ( ஆம் உண்மையான கை சேதம் தான் இது), தன் மகனின் ஒரு வார்த்தையின் மூலம் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைப்போல் சிதறடிக்கப்பட்ட தன் உள்ளத்தின் வேதனையுடன், இதற்கெல்லாம் காரணம் தன் அறிவற்ற செயல் தான் என உணராதவனாய் தன் புதிய காரை நோக்கி விரைகிறான் பிறகு அதை திட்டி, அடித்து துவசம் செய்கிறான்.
பிறகு சோர்வுற்றவனாக தன் மகன் கல்லால் கிறுக்கிய இடத்தை சற்று உற்று நோக்கிப் பார்த்து அதில் எழுதப்பட்ட வாசகம் மூலம் அவன் தன்னை உயிருடன் புதைக்கப்பட்டது போன்ற கடும் வேதனையை உணர்கிறான் அவ்விடத்தில். அதில் அப்படி என்ன அவன் மகன் கிறுக்கி இருப்பான்? ஒன்று மில்லை சிறிய வார்த்தை தான். " LOVE YOU DAD - அன்புள்ள அப்பா" மட்டுமே எழுதப்பட்டிருந்தது.
இனி தான் இவ்வுலகில் வாழ (லாயக்கு) அருகதை இல்லாதவன் என அவனே முடிவு செய்தவனாக, தான் செய்த அச்செயலுக்கு இனி இவ்வுலகில் பரிகாரமில்லை என்ற மன வேதனையுடன் அதற்கு அடுத்த நாள் இவை எல்லாவற்றிற்கும் தீர்வு தற்கொலையே என்று எண்ணி அதையும் செய்து முடிக்கிறான். மேலும் அவசரப்பட்டவானாக.
இதன் மூலம் இங்கு நமக்கு புகட்டப்பட்ட பாடம்/தத்துவம் என்னவெனில் "உலகில் இறைவன் பொருட்களைப் படைத்தது, அதைப் படைக்க மனிதனுக்கு ஆற்றலைக் கொடுத்தது யாவும் அதை மனித குலம் முறையே பயன் படுத்தவே; மனிதர்கள் யாவரும் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவே அன்றி வேறில்லை." "ஆனால் இன்றைய நாகரிக உலகில் பொருட்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்பட்டு மாறாக மனிதர்கள் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள்" என்பதை இக்கதை நமக்கு வெளிப்படையாக பாடம் புகட்டுகிறது.
எனவே மனிதர்களை நேசிப்போம்; உண்மையான மனித நேயம் காப்போம் இறுதியில் நம்முடன் எடுத்துச் செல்ல என்ன இருக்கிறது? என்ற உயர்ந்த சிந்தனையுடன். ஒரு நண்பர் மூலம் எனக்கு வந்த ஆங்கில மின்னஞ்சலின் தமிழ் மொழியாக்கம் தான் இது.
இதை நம் யாவருக்காகவும் தமிழ் மொழியாக்கம் செய்து மகிழும் உங்களின்,
எம்.ஐ. நெய்னா முகம்மது
சவுதியிலிருந்து.
