இந்துத்துவா பயங்கரவாதம்!
அஸ்ஸாம் மாநிலம் இனக் கலவரங்களால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. இருவேறு இன ஆதிவாசி மக்களிடையே மோதல். இன்னொருபக்கம் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரம். அந்த மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதி எரிந்து கொண்டிருக்கிறது. சொந்த மண்ணிலேயே மக்கள் அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.என்ன காரணம்? நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, மாநில வட்டாரக் கட்சிகளுடன் பி.ஜே.பி. அணி அமைக்க முயற்சிக்கிறது. தவறில்லை. ஆனால், என்றோ மரித்து விட்ட இனப் பிரச்னைகளுக்கு இப்போது உயிர் கொடுக்க வேண்டுமா?
எப்போதெல்லாம் தேர்தல் கதவைத் தட்டுகிறதோ, அப்போதெல்லாம் இந்தப் பிரச்னையை பி.ஜே.பி. எரிய விடும். இப்போது அந்தத் திருப்பணியைத் தொடங்கியிருக்கிறது. பங்களாதேஷிலிருந்து குடியேறிய இஸ்லாமியர்களை அடையாளம் கண்டு அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று அந்தக் கட்சி கூறுகிறது. இதற்காகவே முன்னர் இயக்கம் நடத்தித் தேய்ந்து சிதறிப் போன மாநில வட்டாரக் கட்சிகளை அணி சேர்க்கிறது.
1947-ம் ஆண்டு நாடு விடுதலையடைந்த போது வங்கத்தில் ரத்த ஆறுகள் ஓடின. பங்களாதேஷ் என்று கிழக்கு வங்கம் பிரிந்து பாகிஸ்தானின் ஓர் அங்கமானது. இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு என்றனர். ஆனால் பிரிந்து சென்ற பங்களாதேஷில் வாழ விருப்பமின்றி ஆயிரக்கணக்கான வங்காளி இஸ்லாமியக் குடும்பங்கள் இந்தியப் பரப்பில் குடியேறின. அப்படிக் குடியேறிய மக்கள் அஸ்ஸாமில் கணிசமாக இருக்கின்றன.ஆனால், இவர்களை நாடு கடத்தியே தீர வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது எழுப்பி, இனக் கலவரங்களுக்கு வழி வகுக்கிறார்கள். படுகொலைப்படலங்கள் தொடங்கிவிட்டன.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மேற்கு வங்கத்திலும் மும்பையிலும் பி.ஜே.பி. இதே குரலை எழுப்பியது. பங்களாதேஷிகளை அடையாளம் கண்டு அவர்களை நாடு கடத்த வேண்டும் என்று பி.ஜே.பி. கோரியது. அந்தக் கோரிக்கையை செயல்படுத்த முடியாது என்று மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு அறிவித்தது. அங்கேயும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பங்களாதேஷிலிருந்து குடியேறிய மக்களின் மூன்றாவது தலைமுறையினர்தான் வாழ்கிறார்கள். இப்படிக் கோரிக்கை எழுப்பும் பி.ஜே.பி., மையத்தில் அமர்ந்து இந்தியாவை ஐந்து ஆண்டுகள் ஆண்டபோது செயல்படுத்தி இருக்கலாம்.
இன்னொரு பக்கம் அமர்நாத் ஆலயப் பிரச்னையை எழுப்பி காஷ்மீரையே கந்தக நெருப்பில் வாட்டிக் கொண்டிருக்கிறது.ஒரிஸாவை பி.ஜே.பி.யின் சங்பரிவார அமைப்புகள்தான் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாநிலத்தில் 95 சதவிகித மக்கள் இந்துக்கள்தான். இரண்டு சதவிகிதம் கூட இல்லாத கிறிஸ்துவ மக்களால் அந்த பூமிக்கு ஆபத்து வந்திருக்கிறதாம்.இப்போது அந்த மாநிலத்தின் கூட்டணி அரசில் பி.ஜே.பி. அங்கம் பெற்றிருக்கிறது. எனவே, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவா அமைப்புக்கள் முழுச் சுதந்திரத்தோடு செயல்படுகின்றன. எனவே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தேவாலயங்களைத் தகனம் செய்கிறார்கள். பாதிரிமார்களைப் படுகொலை செய்கிறார்கள். இயேசுவின் திருத்தொண்டை மேற்கொண்டிருக்கும் கன்னிப் பெண்களைக் கற்பழிக்கிறார்கள். இப்படி அவர்கள் இந்து சமயத்திற்குப் பாதுகாப்புத் தேடுகிறார்களாம். முதல்வர் நவீன் பட்நாயக்கால் இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. கானகங்களில் எரியும் நெருப்பில் பி.ஜே.பி. குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது.நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக முடி சூடிக் கொண்ட பின்னர், எப்படி கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்ட ஆதிவாசி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அதே போல் ஒரிஸாவிலும் உயிரோடு எரிக்கப்படுகிறார்கள்.
ஒரு விஸ்வ ஹிந்து சாமியார் வனங்களுக்கு நடுவே ஆஸ்ரமம் அமைத்து, கிறிஸ்துவ ஆதிவாசி மக்களை இந்து மதத்திற்குத் திருப்பும் வேலையைச் செய்து கொண்டிருந்தார். இப்படி இவர்களே கட்டாய மதமாற்றம் செய்வார்கள். ஆனால் தேவாலயங்கள் மதமாற்றம் செய்வதாகக் கூறி, லங்கா தகனம் செய்வார்கள்.அந்தச் சாமியாரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். அதனை அவர்களே பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். ஆனால் பி.ஜே.பி.யின் சங்பரிவாரங்களால் மாவோயிஸ்டுகளோடு மோதமுடியவில்லை. எனவே மீண்டும் தேவாலயங்களை எரிப்பது _ கிறிஸ்துவ மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது என்பன போன்ற வன்முறை வெறியாட்டங்களை நடத்துகிறார்கள். மாறுபட்ட மத உணர்வுள்ளவர்கள் என்பதற்காக மனிதர்களைக் கொலை செய்வது அவர்களுடைய குடும்பங்களையே தீயிட்டுக் கொளுத்துவது என்ன நியாயம்? கொலைச் செயல்தான்.அந்த அதர்மம், அக்கிரமம்தான் நியாயம் என்று எந்த இந்து சமுதாயக் கோட்பாடும் சொல்லவில்லை. இன்றைக்கு இன்னும் ஒரிஸாவில் நடைபெறுவது இந்துத்துவா பயங்கரவாதம்! அதனை இன்று வரை மாநில அரசால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பில்லை. காவல் துறையின் உதவியை நாடினால் அவர்கள் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.
இதேபோன்று 2002-ம் ஆண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக குஜராத்தில் அரசு ஆதரவுடன் பயங்கரவாதம் ஏவி விடப்பட்டது. அப்போதும் கண்ணீரும் கம்பலையுமாய் அடைக்கலம் தேடிய மக்களுக்குக் காவல் துறை பாதுகாப்புத் தரவில்லை. கொடூரத் தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் மீதே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இப்போது ஒரிஸாவில் அதன் மறுபதிப்பு அரங்கேற்றப்படுகிறது.
இவ்வளவு பெரிய கொடுமை நடைபெறுவது நமது பிரதமருக்கு எப்போது தெரியும்? அவர் அமெரிக்காவில் புஷ் நாமாவளியை முடித்து விட்டு பிரான்சிற்கு வந்தார். அங்குதான் நிருபர்களும் பொது நல அமைப்புக்களும் ஒரிஸா தகனம் செய்யப்படுவதை அவருடைய கவனத்திற்குக் கொண்டு வந்தனர். `அப்படியா? அது கொடுமைதான்' என்றார்.ஆனால், அவர் தாயகம் திரும்பிய பின்னர் என்ன நடவடிக்கை எடுத்தார்? ஒரிஸா அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி உலகமே குரல் கொடுத்து விட்டது. அதனைச் செய்தாரா? அதனைக் கூட மறந்து விடுவோம். மத்திய புலனாய்வுத் துறையினரை அனுப்பி அங்கு என்னதான் நடைபெறுகிறது என்பதனை அறிந்து அறிக்கை தரச் சொன்னாரா? இல்லை. `மத்திய படையினரும் மாநில காவல்துறையினரும் சேர்ந்து அங்கே அமைதியை நிலைநாட்டுவோம்' என்று சமரசம் பேசுகிறார்.என்ன காரணம்? சங்பரிவாரங்கள் முரட்டுத் தனமான, மூர்க்கத்தனமான இந்துத்துவாவைச் செயல்படுத்துகின்றன. பி.ஜே.பி. அதன் அரசியல் டார்பிடோ படையாகச் செயல்படுகிறது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசோ மென்மையான இந்துத்துவா கோட்பாட்டிற்குச் செயல்வடிவம் கொடுக்கிறது.ஆறுமுறை மத்திய அரசு எச்சரித்தும் ஒரிஸா அரசு கலவரத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
குஜராத் கலவரத்தின் போது எப்படி ஓர் இஸ்லாமியச் சகோதரியை பஜ்ரங்தள் பரிவாரங்கள் கூட்டாகக் கற்பழித்தனவோ, அதேபோல ஒரிஸா வனாந்தரங்களின் ஆதிவாசி மக்களுக்கு அரும் சேவை செய்து வந்த ஒரு கிறிஸ்துவ சகோதரியை அதே வானரசேனை கற்பழித்தது. இதனை விட வேறு தேசிய அவமானம் இருக்க முடியுமா?கர்நாடகாவில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் பரிவாரங்கள் தொடர்ந்து மாதாகோயில்களைத் தாக்கின. மதமாற்றம் நடைபெற்ற இடங்களில்தான் அத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றதாக முதல்வர் எடியூரப்பாவே பொய் சாட்சி சொன்னார். கடந்த பத்து ஆண்டுகளாக கர்நாடகாவில் எவரும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதில்லை என்று சிறுபான்மை இன ஆணையம் தெரிவித்திருக்கிறது.மதக்கலவரங்களை நடத்தித்தான் தாங்கள் வளர முடியும் என்பதில் நரேந்திர மோடியிலிருந்து எடியூரப்பா வரை உறுதியாக இருக்கிறார்கள். தம்மை மதச் சார்பற்ற சக்தி என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சிக்கு வகுப்புவாத சக்திகளைச் சந்திப்பதற்கான திட்டமும் இல்லை. துணிச்சலும் இல்லை. அதனால் காஷ்மீர், அஸ்ஸாம், ஒரிஸா, கர்நாடகா என்று நாடு எரிந்து கொண்டிருக்கிறது.
by solai
