இந்துத்துவாவாதிகள் கக்கும் நஞ்சு. கொடிகட்டும் குண்டாயிசம்!
இந்துத்துவாவாதிகள் கக்கும் நஞ்சு இப்பொழுது புரையேறும் ஒரு கட்டத்தை அடைந்துவிட்டது. உத்தரப்பிர தேசத்தில் இப்பொழுது அது ஒரு புதுத் திருப்பத்தோடு முறுக்கேறி மீசையை முறுக்கிக் கொண்டு திமிருகிறது.
வழக்கறிஞர்களை வகுப்புவாதம் என்கிற கோடரியால் பிளந்து கொண்டு இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் வன்முறையாளர்கள் என்று முத்திரை பொறிக்கப்பட்ட முசுலிம்களுக்கு ஆதரவாக எந்த வழக்குரைஞரும் வாதிடக்கூடாது; மீறி வாதிட முன்வந்தால் அவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்படுவார்கள் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது.
பயங்கரவாதி என்று தவறாகக் குற்றம்சாற்றப்பட்ட ஒரு முசுலிமுக்காக வாதாடி வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வருவதற்குக் காரணமாக இருந்த வழக்குரைஞர் முகமது ஷோயாப் என்பவர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட வழக்குரைஞர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார்; என்ன கொடுமை! அந்தப் புகாரைப் பதிவு செய்ய காவல் நிலையம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில், லக்னோவில் உள்ள காவல்துறை மூத்த அதிகாரியிடமும், மாவட்ட நீதிபதியிடமும் எழுத்து மூலமாகப் புகார் கொடுத்துள்ளார் என்ற செய்தியைத் தெரிந்து கொண்டதும் அந்தப் பாசிசக் கும்பல் மீண்டும் அந்த வழக்கறிஞரை நையப் புடைத்தது;
ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தி நீதிமன்றக் கட்டடத்தைச் சுற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றனராம் (வெட்கம்! மகாவெட்கம்!! ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமோ?)
இவ்வளவுக்கும் மாயாவதி தலைமையிலான ஆட்சியின் காவல்துறை இந்த அருவருப்பான செயல்களுக்கு வெறும் பார்வையாளராகவே இருந்திருக்கின்றது.
மாவட்ட நீதிபதி ஒருவர், நடுநிலை பிறழாத தன்மை யோடு, இந்தச் சட்ட விரோத, நியாய விரோத அராஜகம்பற்றி உயர்நீதிமன்றத்துக்கு எழுத்து மூலமாகவே புகார் கொடுத்துள்ளார் என்பது ஒரு ஆறுதலான தகவலாகும்.
மற்றொரு வழக்கறிஞர் ஏ.எம். பஃரிடி என்பவர் பயங்கர வாதி என்று முத்திரை குத்தப்பட்ட இன்னொரு இசுலாமியருக்காக வாதாடி,
அவர் பக்கம் உள்ள நியாயத்தால் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் தீர்ப்புப் பெற்றுத் தந்தவர் என்பதற்காக அவரும் அந்த இந்துத்துவா கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இவர் கொடுத்த புகார் மனுவையும் காவல்துறை பதிவு செய்ய மறுத்து விட்டது.
முசுலிம் பர்சனல் லா போர்டு சட்ட ஆலோசகரான சஃரிபாப் ஷிலானியும், வேறு சிலரும் லக்னோ உயர்நீதி மன்றத்துக்கு முறையீடு செய்யச் சென்றபோது, அவர்களும் வழிமறித்துத் தாக்கப்பட்டுள்ளனர்.
வழக்குரைஞர் ஏ.எம். பஃரிடி தங்கியிருந்த அறைக்குத் தீ மூட்டி அவரைக் கொலை செய்ய முயற்சித்தனர்; அவர் எப்படியோ தப்பிப் பிழைத்திருக்கிறார்.
இதற்குமேல் நினைத்தே பார்க்க முடியாத ஒரு செயலில் காவல்துறை இறங்கியது.
லக்னோ வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக உள்ள வெறிபிடித்த ஒரு இந்துத்துவாவாதி கொடுத்த புகாரின் அடிப்படையில், அடி உதைப்பட்ட ஷிலானி, பஃரிடி, ஷோயாப் ஆகியோர்மீது குற்றம் சுமத்தப் பட்டு முதல் தகவல் அறிக்கை (எஃப்.அய்.ஆர்.) தயார் செய்யப்பட்டு விட்டது.
இப்படிக் கூட நடக்குமா என்றுதான் எவரும் நினைப்பார்கள்; என்ன செய்வது! அப்படியேதான் நடந்திருக்கிறது.
இந்து வெறிக் கூட்டத்தின் நடத்தை ஒரு பக்கம் எப்படியோ இருந்தாலும், உ.பி.யை ஆளும் மாயாவதி ஆட்சி - அதன் காவல்துறை காக்கி உடையில் துள்ளித் திரியும் கா(லி)வி களாக இருப்பது சகிக்க முடியாத அவமானகரமானதாகும்.
உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லை. இந்த நிலையிலேயே இவ்வளவுக் கொடூரம் என்றால், இவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், சந்தேகம் ஏதும் வேண்டாம் - பச்சையான பார்ப்பனிய மனுதர்மக் கொடிதான் பயங்கர வேகத்தில் பறக்கும் குண்டாயிசம் தான் அவர்களின் அணுகுமுறையாகவும் இருக்கும். எச்சரிக்கை! எச்சரிக்கை!!
