எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே......
பிள்ளைப்பேறு தான் பெரும் பேறு என்பதும், மக்கட்ச் செல்வமே மகத்தான செல்வம் என்பதும் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத மிகப்பெரிய உண்மை.அதனினும் பெரிது யாதெனின், பெற்ற மக்களை பேணி வளர்ப்பதாகும்.
பேணுதல் என்றால் என்ன?
பெற்ற குழந்தைக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் மீதும் கடமை தான். அதை விட பெரிய கடமை ஒன்று உள்ளது. அஃதாவது, நல்ல ஒழுக்கத்தையும், பெரியோரைப் பேணும் பண்பையும் போதிப்பது ஒவ்வொரு பெற்றொரின் மீதும் கடமையாகும்.
பொருளாதாரத்தால் மிகுந்த சில பெற்றொர்கள், தன் குழந்தைகளைச் செல்வச் செழுமையில் வளர்க்க வேண்டும் என எண்ணுவது தவறென சொல்வதற்கில்லை. ஆனால், உங்கள் செல்வமே உங்களது குழந்தைச் செல்வத்தை கொன்று விடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை தானன்றி வேறில்லை. தன் தந்தை பணக்காரன் என்னும் எண்ணம் ஒரு குழந்தைக்கு வந்துவிட்டால், அந்த எண்ணம் ஒன்றே அக்குழந்தையின் அழிவிற்குக் காரணம் ஆகி விடக்கூடும். நீங்கள் பணக்காரர் என்பதை குழந்தைகளிடம் காட்டுவதை விட, அந்த பணம் சம்பாதிக்க நீங்கள் பட்ட இன்னல்களையும், சிந்திய வியர்வைத் துளிகளையும் உங்கள்
குழந்தைச் செல்வங்களுக்கு எடுத்துக் கூறுங்கள். பணம் மரத்தில் இருந்து பறிக்கப் படுவதில்லை, வியர்வையில் பூத்த விருட்சமே பணம் என்பதை ஒரு குழந்தை விளங்கும் படி செய்துவிட்டால், உங்கள் குழந்தை உங்களது கட்டுப்பாட்டில் இருக்கும்.
குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமாக கவனிக்கப் படவேண்டியவை:
1) சிறிய பருவத்திலேயே இஸ்லாமிய மார்க்க அடிப்படை அறிவையேனும் (குறைந்தபட்சம்)குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.
2)நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழக்கை வரலாற்றையும், அவர்கள் வழி வந்த நல்லோர்களின் வரலாற்றையும் சொல்லிக் கொடுங்கள்.
3) குழந்தைகள் பெற்றொர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றி எடுத்து சொல்லி, அதை அவர்களை கடைப்பிடிக்க செய்யுங்கள். நீங்களும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை உரிய முறையில் செய்யுங்கள்.
4)வயதிற்கு மூத்தோருக்கு, வயதால் சிறியவர்கள் தர வேண்டிய மரியாதை பற்றியும், செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் எடுத்து உரையுங்கள்.
5)குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள். அதில் நீங்கள் வித்தியாசம் உணர்ந்தால், அது பற்றி உங்கள் மகன்/மகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். தவறுகள் நீங்கள் கண்டால், அதன் விளைவுகளைச் சொல்லி எச்சரியுங்கள். திட்டாதீர்கள், மாறாக, திருத்தம் உண்டாக்கப் பாருங்கள். நீங்கள் திட்டுவீர்களானால், உங்கள் மீதான பயத்தினால்,உங்களுக்குத் தெரியாமல் அவர்கள் தப்பு செய்ய நேரிடலாம். உங்கள் மீது பயம் ஏற்படுவதை விட, நிகழப் போகும் தவறினால் அவர்களுக்கு ஏற்படும் தீமையை எண்ணி பயப்படுவது சிறந்த்ததாகும்.
6) குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதில் தவறில்லை. அவர்களது கை நிறைய செல்வம் கொடுப்பது, அவர்கள் வழிகெட்டுப் போக வழி வகுக்கும். முடிந்த வரை, அவர்களுக்கு வேண்டிய பொருட்களை நீங்களே நேரடியாக வாங்கிக்கொடுப்பது சிறந்தது. அவ்வாறு வாங்கிக் கொடுத்த பொருட்களை அவர்கள் உபயோகிக்கும் முறையையும் நீங்கள் கண்காணிப்பது நல்லது.
உதாரணத்திற்கு, அவர்களுக்கு நீங்கள் வாங்கிக்கொடுத்த கணினியை அவர்கள் உபயோகித்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அருகில் வந்தால், அவர்களது கணினி திரை மாற்றப்பட்டால், அதில் கூட தவறுகள் நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். எனவே, புலனாய்வு துறை போல் இல்லாமல், ஒரு நண்பனாய் அவர்களைக் கண்காணிப்பது அவசியம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இறை அச்சத்தை ஊட்டி உங்கள் குழந்தைகளை வளர்த்தீர்களேயானால், அக்குழந்தைச்செல்வம் உங்களுக்கும் பலன் தந்து, உலகத்திற்கும் பயன் தரும் நன்மக்களாக இன்ஷா அல்லாஹ் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.!!
---உங்கள் அன்பு எழுத்தாளன்,
அதிரை அருட்புதல்வன்

