திணருகிறது மீனம்பாக்கம் பன்னாட்டு முனையம்!
இந்த வருடத்திற்கான புனித ஹஜ் பயணம் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் துவங்கிய நிலையில் ஹஜ்ஜாலிகளை வழியனுப்ப அதிகளவு நம் சகோதர சகோதரிகள் விமான நிலையத்திற்கு சென்று அவர்களை நன்றாக வழியனுப்பிவிட்டு வருகிறார்கள், இதனால் விமான நிலையம் நிரம்பி வழிகிறது.
எனது குடும்ப உறவினர் ஒருவரையும், நண்பரின் உறவினர் ஒருவரையும் வழியனுப்ப விமான நிலையத்திற்கு நானும் சென்றிருந்தேன், அங்கே கண்ட சில சுவையான அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மிக அழகான சூழலை அங்கே காண முடிந்தது. ஒரு புறம் லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்று தல்பிய்யா சொல்லி கொண்டே இருந்தார்கள், மறுபுறம் ஆனந்த கண்ணீருடன் தனது உறவினர்களுக்கு பிரியாவிடை கொடுத்த வண்ணமும், ஹஜ்ஜாலிகளை முஸாபா செய்து கட்டி தழுவுதல், துஆ கேட்டல், காலை சாப்பாடு போன்ற பல நிகழ்வுகளையும் அங்கே காண முடிந்தது. தற்போது சென்னையில் காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது, கடும் குளிரையும் பொருட்படுத்தாது தனது உறவினர்களை வழியனுப்ப பல முதியோர்கள் வந்திருந்ததையும் அங்கே காண முடிந்தது. இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற பல நம்மூர் சகோதரர்கள் வந்திருந்ததை காண முடிந்தது. விமான நிலைய வளாகத்தில் போதுமான அளவுக்கு இருக்கை வசதியும், கழிவரை வசதிகளும் இல்லை என்று பல பேர் முனுமுனுத்துக் கொண்டிருந்ததையும் கேட்க முடிந்தது. குறிப்பாக அதிகளவு பெண்கள் ஹஜ் கடமைய நிறைவேற்ற வந்திருந்தார்கள்.
விமான நிலைய வளாகத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்பட பதிவுகள்:
யா அல்லாஹ்! யாராரெல்லாம் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகிறார்களோ அவர்களுடைய ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வாயாக!
யா அல்லாஹ்! யாராரெல்லாம் ஹஜ் செய்ய நிய்யத் செய்திருக்கிறார்களோ அவர்களும் இப்புனிதமான ஹஜ் கடமையை நிறைவேற்ற தவ்பீக் செய்வாயாக!
யா அல்லாஹ்! ஹாஜி மார்களின் துஆக்களின் பொருட்டால் எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக! முமினான உலக முஸ்லிம்களின் பாவங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்! யாவருக்கும் நீயே பாதுகாப்பளிப்பவன், அசம்பாவிதங்களும், விபரீதங்களும், விபத்துக்களும் ஏற்படாமல் அவர்களின் புனித கடமையை இனிதே நிறைவேற்றி தாயகம் திரும்ப நீயே உதவி செய்வாயாக!
யா அல்லாஹ்! முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க யாராரெல்லாம் திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறார்களோ அவர்களுடைய திட்டங்களை நாசப்படுத்திவிடுவாயாக!
யா அல்லாஹ்! எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!
எக்ஸ்பிரஸ் செய்திக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து, அப்துல் பரக்கத்.
