வெள்ளை மாளிகையில் குடிபுக இருக்கும் கருப்பு நிலாவே!!!
அம்மாவாசை போன்று இருள் சூழ்ந்திருந்த நிறவெறி பிடித்திருந்த அமெரிக்க மக்களின் மத்தியில் ஒரு கருப்பு நிலாவைப்போன்று அமெரிக்க சரித்திரத்தை புரட்டிப்போட்டு வெற்றி வாகை சூடிய "பராக் ஹுசைன் ஒபாமாவே" உம் வருகை அகிலத்தின் அமைதிக்கு நல்வரவாகட்டுமாக.
உம்மிடத்தில் நாம் ஒன்றும் பெரும் பரிசை எதிர்பார்க்க வில்லை. அமைதிப் புறாக்கள் பறக்கும் இப்பரந்த வானில் அணுகுண்டை சுமந்த ஏவுகணைகள் பறப்பதை நாம் விரும்பவில்லை. அது மழைபோல் தூவிச்செல்லும் குண்டுகளால் எத்தனை, எத்தனை பச்சிளம் பாலகர்கள் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட கொடூரம்.. இனி ஒருபோதும் வேண்டாமைய்யா....அதைக் கனவிலும் நினைத்திடல் கொடுமையைய்யா....
எங்களுக்கு நீ பரிசு மழை பொழியாவிட்டாலும் பரவாயில்லை. அதை எதிர்பார்க்கவும் இல்லை. எம்மேனிகளை உருக்குலைய வைக்கும் குண்டு மழை பொழியாமல் இருந்தாலே எங்களுக்கு சந்தோஷம் தான்.
சுறாக்களை வேட்டையாடுகிறோம் என்று சொல்லி, ஒன்றுமறியா பச்சிளம் குட்டி மீன்களையும் உம் படைகள் வேட்டையாடி விடுகின்றனர். விடியலை தேடி காலமெல்லாம் காத்திருந்த கருப்பின மக்களுக்கு விடி வெள்ளி போன்று வந்தாயே!
நாம் காலை விடியலில் குருவிகளின் இனிமையான கூக்குரலைத் தான் கேட்க விரும்புகிறோம். குண்டு மழை பொழியும் போர் விமானங்களின் இரைச்சலையல்ல.
எங்கள் நாட்டில் பாலாறு ஓடாவிட்டாலும் பரவாயில்லை. ரத்த ஆறு ஓடாமல் இருந்தாலே பெரு மகிழ்ச்சி தான் எங்களுக்கு.
உம் ஆட்சி தராசின் தட்டில் உள்ள முள் போல் சரிசமமாக நீதி வழங்கட்டும். ஆதிக்க சக்திகளின் அழுத்தத்தால் உம் நீதித்தட்டு நிலை குலைந்து, தாழ்ந்து விட வேண்டாம்.
உன் நாட்டு நலனில் அதிகம் கவனம் கொள். பிறநாட்டு விவகாரங்களில் அழையா விருந்தாளியாய் ஒரு போதும் போக வேண்டாம். நேர்மை தவறாமல் இரு உன்னை செல்வங்கள் தானே தேடி வரும்.
வேட்டைக்கார இஸ்ரேல் ராணுவத்திடம் குருவி போல் சுட்டுக்கொல்லப்படும் பாலஸ்தீனிய மக்களுக்கு உம் வருகை ஒரு வசந்த கால தென்றலாய், தேனமுதமாய் திகழட்டும். இதுவே எம் எதிர்பார்ப்புடன் கூடிய ஏக்கம்.
கல்நெஞ்சம் கொண்ட கயவர்களின் மத்தியில் மிருதுவான பஞ்சு போன்ற உள்ளம் கொண்ட மனிதனாய் நீ விளங்கிடல் வேண்டும். அமைதிப் புறா என்றும் உன் உள்ளத்தில் குடிகொண்டிருக்க வேண்டும். கழுகுகள் பல பயமுறுத்தினாலும் அதற்காக பயந்து பறந்துவிடாதே.
உன் வருகையால் உலகில் ஆயுதக்கலாச்சாரம் எனும் களைகள் பிடுங்கப்பட்டு அமைதி எனும் பயிர் செழிப்புடன் வளரட்டுமாக.
இவ்வுலகில் தொலைந்து போன மனிதாபிமானத்தை தூர்வாற்றி, செப்பனிட்டு சீர்படுத்த உம் பயணம் இனிதே தொடங்கட்டுமாக. அதற்கு நாமெல்லாம் கருத்து வேறுபாடுகளை களைந்து உம் பயணத்தினூடே வரும் தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி நடை போட நிபந்தனை ஏதுமின்றி உதவுவோம்.
எண்ணெய் வளத்தை தன் வசப்படுத்த ஆதிக்க சக்திகளின் ஆதரவில் காரணமின்றி செய்து முடித்தப் போர்களும், அதனால் இம்மானுடம் சிந்திய குருதிகளும் போதுமய்யா...போதும்.
இருள் சூழ்ந்த வானில் இடி முழக்கமா? அல்லது வெடிச்சத்தமா? என அமைதியற்ற இவ்வுலகில் சாந்தியைத் தான் எதிர்பார்கிறோம். சமாதானத்தைத் தான் விரும்புகிறோம்.
புதியதோர் உலகு செய்ய வேண்டியதில்லை. இறைவனால் முன்பே வடிவமைக்கப்பட்டு மானுடம் அமைதியுடன் வாழ இலவசமாக வழங்கப்பட்ட இவ்வுலகில் வாழும் காலம் சிறிதே என்றாலும், உன் வரவால் மக்களின் எதிர்பார்ப்புக்கள் பெரிதே.
உலகமே உன் வருகைக்காக காத்துக் கிடக்கும் இவ்வேளையில், ஆணவம் எனும் அழுக்கான உடைகளை களைந்து, அமைதி எனும் புத்தாடை அணிந்து, நீதி எனும் மிடுக்கான நடையில், மனித நேயம் எனும் தெளிவான பார்வையில் வெற்றி நடைபோட நாமெல்லாம் வாழ்த்தி உம்மை வரவேற்கிறோம்.
அதிரை எக்ஸ்பிரஸிற்காக,
வழங்கி மகிழும்.
அபு_ஹசன்.

