பிரஞ்சு புரட்சிக்கு வித்திட்ட மைசூர் சிங்கம்!தீரர் திப்பு சுல்தான் அவர்களின் வாழ்கை வரலாறு பாகம் 4
திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.
ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.
துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். ""திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்'' என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.
பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ""அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது'' என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.
பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று,"குடிமகன் திப்பு' என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
தகவல் உதவி அபு ஜுலைஹா
