அதிரை பைத்துல்மால் குறித்த கேள்விக்கான பதில்கள்
அதிரை எக்ஸ்ப்ரஸில் நமதூர் குறித்த பல்வேறு விசயங்களுடன் பொது விசயங்களும் மனம்விட்டுப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பரபரப்புக்காக எதையும் எழுதாமல் உள்ளூர் நடப்புகளை உரிமையுடன் எழுதி உள்ளக் குமுறல்களுக்கு வடிகாலாக அதிரை எக்ஸ்ப்ரஸ் கட்டுரைகளும் அதனுடன் தொடர்புடைய பின்னூட்டங்களும் இருப்பதைக் காண்கிறோம்.
டைரி என்ற பெயரில் ஒரு சகோதரர் அதிரை பைத்துல்மால் குறித்து சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு நானறிந்த விளக்கத்தைப் பதிலாக முன்வைக்கிறேன்:
கேள்வி: #1: ஆஸ்பத்திரி தெருவில் இந்த நிர்வனத்திற்கு சொந்தமான போதிய இடவசதியுள்ள அலுவலகம் இருந்தும் நடுத்தெருவில் மீண்டும் எந்தவொரு வருவாயும் இல்லாத மற்றுமொரு அலுவலகம் அமைக்க அவசியமென்ன?
பதில்: அதிரை பைத்துல்மால் போன்ற பொது அமைப்புகள் எலோரும் எளிதில் அணுகும் வகையில் ஊரின் மையப்பகுதியில் அமைவது அவசியம் என்பதால் பைத்துல்மாலுக்காக குறைந்த விலையில் நிலம் வாங்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. கீழ்தளத்தில் அலுவலகமும் மேல்தளத்தில் கணினிப் பயிற்சி மையத்திற்காகவும் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
கணினிப் பயிற்சி மையம் மூலம் கிடைக்கும் வருவாய், பைத்துல்மாலின் திட்டங்களுக்குப் பயனாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் கணினி பயிற்சி மையத்தையும் அதிரை பைத்துல்மால் ஏற்று நடத்த முன்வந்தது. மேலும்,கண்சிகிச்சை முகாம், வேலைக்கான நேர்காணல் ஆகியவற்றுக்காக வாடகைக்கும் விடப்படுகிறது.
ஆஸ்பத்திரித் ரோட்டிலுள்ள சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வரும் தற்போதைய இடத்திற்கான குத்தகைக்காலம் முடிந்து விட்டதால் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நமதூரில் அரசு அலுவலகத்திற்கு மக்கள் புழங்கும் இடத்தில் நிரந்தர இடம் கிடைக்காத காரணத்தால் அருகிலுள்ள கிராமத்தினர் இடம்தர முன்வந்தனர்.
அதிரைப் பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு அலுவலகம் இடம்பெயர்வதால் நமக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு நேர,பொருள் விரயத்தைத் தவிர்க்க வேண்டியும் சார்பதிவாளர் அலுவலகத்தை நமதூரில் தக்க வைக்க அதிரை பைத்துல்மாலின் முயற்சியாகவே ஆஸ்பத்திரித் தெரு மிகுந்த சிரமத்திற்கிடையில் கட்டிடம் கட்டப்பட்டது.
பெரும்பாலோரின் சொத்துக்கள் பெண்கள் பெயரிலேயே இருக்கின்றன.பலர் வெளிநாட்டில் பிழைப்புக்காக அதிக காலம் தங்கி விடுவதால், சொத்துக்கள் வாங்கல்/விற்றல் தொடர்பாக பெண்கள் நேரடியாக ஆஜராக வேண்டியுள்ள அதிரை பத்திரப்பதிவு அலுவலகம் இடம் பெயர்வதால் மிகுந்த சிரமமும் பாதுகாப்பின்மையும் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, வாடகைக்கு பத்திரப்பதிவு அலுவலகமும வருமானத்திற்கு வணிக வளாகமும் கட்டப் பட்டுள்ளது.
மட்டுமின்றி, வட்டியில்லாக் கடன் உதவிக்கு நன்கொடைகள் தவிர கடன் வழங்கும் செல்வந்தர்களுக்கு உத்திரவாதமாக அதிரை பைத்துல்மால் நிலையானச் சொத்துக்களைக் காட்ட வேண்டியது அவசியம் என்பதால் பல்லாவரம் மற்றும் நடுத்தெரு, ஆஸ்பத்திரித் கட்டிடங்கள் நிலையான சொத்துக்களாக இருப்பதன் மூலம் கடன் கொடுப்பவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுகிறது.
கேள்வி # 2: புதிதாக இஸ்லாத்தை தழுவி நமது ஊருக்கு வரும் சகோதரர்களுக்கு சிறு வியாபாரம் தொடங்குவதற்கு கூட எந்தவொரு நிதியுதவி செய்வதற்கு எந்தவொரு தொண்டு நிர்வனமும் முன் வருவதில்லை என மரைக்கா பள்ளியில் கூடும் இளம் உலமாக்களின் கேள்விகளுக்கு நிர்வனத்தாரின் பதில் என்ன?
பதில்: பைத்துல்மாலுக்குக் கிடைக்கும் நிதியுதவிகளை மார்க்கம் அனுமதித்த வகையில் பங்கிடப்பட்டு, ஆண்டு முழுமைக்கும் திட்டமிடப்பட்டு சேவைகள் அமைந்துள்ளன. அவ்வாறே அந்தந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகைகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதனால் புதிய மற்றும் திடீர் திட்டங்களுக்கு உடனடியாகக் கடன் வழங்க முடிவதில்லை என்பதே நிஜம்.
மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட வட்டியில்லாக் கடன்களும் தாமதமாக திருப்பிச் செலுத்தப்படுவதால் வரிசைப்படியும், தேவையின் தன்மையைப் பொருத்தும் மீண்டும் கடனாகவே வழங்கப்பட்டு விடுகிறது. அவற்றில் அதிரைவாசிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பிற ஊர் மக்களுக்கு உதவுவதில் சிரமம் ஏற்படுகிறது. இருந்தாலும், நிர்வாகிகளின் சிறப்பு வசூல் மூலம் அவசியத் தேவையுள்ளவர்களுக்கு அவ்வப்போது கடனாக அல்லது நன்கொடையாக உதவிகள் செய்யப்பட்டு வருவதை மாதாந்திர அறிக்கை மூலம் அறியலாம்.
கேள்வி # 3: வட்டியில்லா கடன் மூலம் நகை அல்லது சொத்துக்களின் மீது கடன் வழங்கும் அதிரை பத்துல்மால் எந்தவொரு வசதியில்லாத ஏழைகளுக்கு பரம்பரை பரம்பரையாக நமதூர் மண்ணில் வாழ்ந்து வரும் குடும்பத்தாருக்கு கடன்கொடுக்க மறுப்பது ஏன்?
முந்தைய கேள்விக்கான பதில் இதற்கும் பொருந்துகிறது. கடனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையோ அல்லது திரும்ப வசூலிக்கப்பட்ட கடன்களோ இருப்பிலிருந்தால் உடனடியாக மீண்டும் கடனாகவே வழங்கப் படுகிறது.
முன்பு வட்டியில்லாக் கடனுக்கு எதையும் அடமானமாகப் பெறாமலேயே வழங்கப்பட்டு வந்தன. கடன் பெற்றவர்கள் பொறுப்பாகத் திரும்பச் செலுத்த வேண்டும் என்ற நோக்கில், குறைந்தபட்சம் நகையை அடமானப் பெற்று வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது. பாதுகாப்புப் பெட்டக வசதிக்காக உபரிச் செலவு ஏற்பட்டாலும் கடனாளிகள் ஒப்புக் கொண்ட காலத்திற்குள் திருப்பி அடைக்க வேண்டும் என்பதால் நகை அடமானத்தின் பேரில் கடன் கொடுக்கப்படுகிறது.
பைத்துல்மாலின் முஹல்லாவாரியான பொறுப்பாளர்களின் சிபாரிசுகளின் பேரிலேயே வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படுகின்றன. கடனாளிகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டாலும் வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.
கேள்வி # 4: வட்டியை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்நிர்வனம் இருந்தும் புதுக்கோட்டையிருந்து வரும் ஃபைனான்சியர்கள் சுவற்றின்மீது ஏறி நமது சகோதிரிகளிடம் வட்டியை வசூல் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டக் காரணம் என்ன?இதைப்பற்றிய உங்களுடைய ஆய்வு அல்லது சொலூஷன்/ கன்குலூஷன் தான் என்ன?
பதில்: மார்க்கம் தடுத்திருக்கும் வட்டியின் தீங்குகளை அறியாமல், வட்டிக்கு பிற வழிகளைக் சம்பந்தப்பட்ட மக்கள் கையால்வதால் ஏற்படும் விளைவை பைத்துல்மால்மீது சுமத்துவதில் நியாயமில்லை. வசதியுள்ளவர்கள் பைத்துல் மாலின் நற்பெயரையும் சேவைகளையும் கருத்தில் கொண்டு தங்கள் இருப்புகள்/சேமிப்புகளைக் கொடுத்துதவினால் இத்தகைய அவலங்களைத் தவிர்க்கலாம்.
அதிரை பைத்துல்மாலின் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வட்டியில்லாக் கடன் திட்டத்திற்கு நமதூர்வாசிகளில் வசதி உள்ளவர்கள் தலா ஆயிரம் ரூபாய் வீதம் சந்தாவாக ஒரேயொரு முறைச் செலுத்தினாலே போதும் இன்ஷா அல்லாஹ் தேவையுள்ள அதிரைவாசிகள் அனைவருக்குமே வட்டியில்லாக் கடன் கொடுத்து உதவலாம்.வெளிநாடுவாழ் அதிரைவாசிகள் முன்வந்தால் இத்திட்டம் இன்ஷா அல்லாஹ் விரைவில் சாத்தியப்படும்.
கேள்வி #5:அதிரை பைத்துல்மாலின் ஆண்டு வரவு சிலவு அறிக்கை, நீங்கள் செய்துவரும் நற்காரியங்கள் என்ன, அடுத்தக்கட்ட திட்டங்கள் என்ன போன்ற விபரங்கள் எந்த இணையதலத்தில் பதியப்பட்டுள்ளது அல்லது ஆண்டு அறிக்கை புத்தகமாக வெளியிடப்படுகிறதா என்பதை தெரியப் படுத்தினால் என்னை போன்று கேள்வி எழுப்புவோர்களுக்கு உங்களுடன் சேர்ந்து நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
பதில்: பைத்துல்மாலின் சாதனைகளைப் பட்டியலிட்டு சென்ற வருடம் சுற்றறிக்கையாக துபையில் வெளியிடப்பட்டது. மேலும் மாதாந்திர அறிக்கைகள் ஈமெயில் மூலமும் இணைய தளம் வாயிலாகவும் வெளியிடப்படுகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் அதிரை பைத்துல்மாலின் சாதனைகளைப் புத்தகமாக வெளியிட்டார்கள்.
அதிரை பைத்துல்மால் உள்ளூர் அலுவலகத்திற்கு நிலையான, முழுநேர அலுவலர் கிடைக்காதக் காரணத்தால் அறிக்கை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் அடுத்தடுத்த மாதங்களில் ஈமெயில் மூலம் அந்தந்தக் கிளை நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் முதல் அல்லது இரண்டாவது வெள்ளிக்கிழமை துபை டேரா கோட்டைப் பள்ளியில் நடைபெறுகிறது. கிளை பொறுப்பாளர்களை அணுகி அவ்வப்போதைய செயல்பாடுகளையும் திட்டங்களையும் அறிந்து கொள்ளலாம். பொறுப்பாளர்களின் செல்பேசிகள் பைத்துல்மால் இணைய தளத்தில் கிடைக்கின்றன.
மேலும்,அதிரை பைத்துல்மாலுக்கு நேரடியாக,தொலைபேசி,ஈமெயில் மூலம் அணுகினாலும் தேவையான விளக்கங்கள் கொடுக்கப்படும்.
அன்புடன்,
அதிரை பைத்துல்மால் துபை கிளை சார்பில்
<<<அபூஅஸீலா-துபாய்>>>
