தெரியாமத்தான் கேட்கிறேன் - www.ஊர்சுத்தி.உமர்
நமக்கு எதையும் மூடிமறைக்கிற பழக்கம் அறவே கிடையாது. கல்புலப் பட்டதைப் பட்டு பட்டுன்னு கேக்கிறதுனால,கடைசில நான் குத்தவாளி ஆயிடுறேன். பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தான். விசயத்துக்குப் போவலாம்.
1) போன வருஷம் மெயின் ரோடு அல்அமீன் பள்ளிக்கு இடையூறு செஞ்ச பெரிய மனுசங்களைப்பத்தி விலாவாரியா பலர் எழுதியிருந்தாங்க.நான்கூட ரெண்டு முணு விருந்தக் கட் பண்ணிட்டு மெனக்கெட்டு எழுதினேன். இப்போது யாருமே அதப்பத்தி வாயைத் திறக்கக் காணோம்!தெரியாமத்தான் கேட்கிறேன், அல் அமீன் பள்ளிவாசல் பிரச்சினை எல்லாம் ஓய்ஞ்சுடுச்சா?
2) நம்மூரு பேரூராட்சியின் ஊழல்கள்,அதிகார துஷ்பிரயோகம், பாரபட்சம், போன்றவற்றை ஆதாரத்துடன் சிலர் எழுதியிருந்தாங்க; பேரூராட்சி மன்ற பதவியில் இருந்துகிட்டே கூட்டுக் கொள்ளை மற்றும் மணல் கொள்ளை அடித்ததையும் எழுதி இருந்தாங்க. தெரியாமத்தான் கேட்கிறேன் தற்போது, ராஜாமடம் மற்றும் நசுவினி ஆறுகளில் மணல் கொள்ளைகள் முற்றிலும் ஓய்ஞ்சுடுச்சா?
3) அல்-அமீன் பள்ளியின் மெயின் ரோடு வாசலருகில் குப்பை வண்டிகளை நிறுத்தி வச்சு, அத சிலர் உணர்ச்சிவசப்பட்டு கவுத்திப் போட்டதைப் பெரிசு படுத்தி "நொறுக்கி விட்டார்களென்று பொய்வழக்குகள் போடப்பட்டன. அது கிடக்குது சனியன்.தெரியாமத்தான் கேட்கிறேன் அந்தக் குப்பை அள்ளும் வண்டிகளில் தற்போது அதிரை நகரக் குப்பைகள் அள்ளப்படுகின்றனவா?
4) அதிரை கிராம நிர்வாக அதிகாரி சட்டை போடாம, சிகரெட் பிடித்துக் கொண்டு பனியனுடன் பணியிலிருந்ததை வீடியோ ஆதாரத்துடன் சில புள்ளைகள் போட்டிருந்தாங்க. (நமக்குத்தான் அந்த மாதிரி செல்போனுக்குக் கொடுப்பினை இல்லாமப் போச்சு.நோக்கியா 3310 ஐத்தான் அஞ்சு வருசமா வச்சிருக்கிறேன்) தெரியாமத்தான் கேட்கிறேன்! "அந்த அதிகாரி இப்போது சட்டை போட்டுக்கிட்டு வேலைக்கி வர்ராரா?
5) தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், கிராணிக் கடைக்கு எதிர்புறம் அமோகமா விற்கப்படுவதை படத்துடன் போட்டிருந்தார்கள். தெரியாமத்தான் கேட்கிறேன் காவல் துறையினர் ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? அதிரையில் சுரண்டல் லாட்டரி ஒழிக்கப்பட்டு விட்டதா?
6) நடுத்தெருவுல சிஷ்தி-குஷ்தின்னு பலரும் பல்வேறுவிதமாக அலசி எழுதி வருத்தப்பட்டிருந்தார்கள். ஆடிக்கு ஒரக்க அமாவசைக்கு ஒரக்க நம்மூருப் பிரச்சினையைப் பேசுவதோடு நின்றுவிடுவதால் இதுபோன்ற சிஸ்திகள் குஷ்தி போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். உலமாக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்றும் சிலர் கேட்டிருந்தார்கள். சிஷ்திகளுடன் சேர்ந்து குஷ்தி போடாமல் இருப்பதே பெரிய ஒத்தாசை.
(உள்ளூரிலிருந்து கொண்டு ஆள்பலம், பணபலமில்லாத உலமாக்களால், சிஷ்திகள்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியுமென்று தெரியவில்லை. இருந்தாலும், குத்பா மற்றும் அனைத்து பயான்களிலும் மேற்படி போலிச் சாமியார்களை அடையாளம் காட்டுவதற்கு எக்காரணம் கொண்டும் தயங்கக் கூடாது. ஊர் ஊரா பிரயாணம் செய்து பலஊரு மக்களைத் திருத்திய சிறப்பு நம்ம உலமாக்களுக்கு ஈக்கிது (இருக்கிறது). நம்ம காலடியிலேயே ஒரு கரு(வ) முள்ளு இருப்பதையும் கவனிக்கனும்.அதுமாதிரி இண்டர்நெட், ஈமெயில், ப்ளாக் என்று எழுதிக்கிட்டே இருக்காம அந்தந்த முஹல்லாக்காரவங்க சட்டு புட்டுன்னு முடிவெடுக்கணும்.)
அமெரிக்காச் செல்லத்தான் நமக்குப் பொசுப்பு இல்லே. அமெரிக்காக்காரன் நம்ம நாட்டுக்கே வந்து அணுசக்தி ஒப்பந்தம் போடுறதாலே மத்திய அரசு கலைஞ்சு மறுதேர்தல் வரப்போகுதுன்னு பேசிக்கிடுறாங்க. காங்கிரஸின் கோட்டையாக இருந்த புதுக்கோட்டை தொகுதிக்கு ஹத்தம் ஓதப்பட்டு விட்டது.
இனிமேல் தஞ்சாவூர் தொகுதி அரசியல்வாதிகள் நம்மூருக்கு அடிக்கடி வரக்கூடும்.நாமல்லாம் ஒற்றுமையாக, ஒரே அணியில் இருந்தால் ஊரின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். குறைந்த பட்சம் அல் அமீன் பள்ளியின் பேரூந்து நிலைய வாசலுக்கான தடையை நீக்க முன்வரும் அரசியல் கட்சிக்கே எங்கள் ஓட்டு என்ற ஒற்றைக் கோரிக்கையை முன் வைத்து எதிர்வரும் நோன்புக்குள் நல்ல தீர்வு காணலாம்.
ஊதுர சங்கை என்னுடய பங்குக்கு ஊதிட்டேன். அப்புறம் என்னை யாரும் குத்தம் சொல்லககூடாது. எனக்கும் வேலைவெட்டி நிறையா இருக்கு. இப்ப கூட அவசரமா விருந்துக்குத்தான் கெளம்பிக்கிட்டிருக்கேன்.
www.ஊர்சுத்தி.உமர்
