வியக்க வைக்கும் இஸ்லாம்!
இஸ்லாத்தை இகழ்ந்துரைக்க மேற்கத்திய ஊடகங்களால் அவ்வப்போது கையாளப்படும் சொற்பிரயோகம் "பழமைவாதம்"! அதாவது இஸ்லாம் தற்காலத்திற்கு ஒவ்வாத கடுமையானச் சட்டங்களையும் பழக்கங்களையும் கொண்டுள்ளதாகச் சொல்லியதோடு, இஸ்லாத்தை அடிப்படை மாறாமல் அப்படியே பின்பற்றுபவர்களை அடிப்படைவாதிகள், பழமைவாதிகள் என்றும் எழுதி,பேசி, ஊடகப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர்-26 ஆம் நாள்முதல் இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக மத்திய அமைச்சகம் 'குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் - 2006 ஐ அமல் படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் பல அம்சங்கள் இஸ்லாம் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே வகுத்துள்ள பெண்ணிய உரிமைகளை அச்சுப்பிசகாமல் காப்பியடிக்கப்பட்டுள்ளது வியக்க வைக்கிறது!
என்னதான் பழமைவாதம், பழமைவாதிகள் என்று சொல்லி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இகழ்ந்தபோதிலும் இஸ்லாம் வகுத்துள்ளவற்றைவிடச் சிறந்த எதையும் எவரும் என்றுமே வழங்க முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதன் நிகழ்காலச் சான்றே இச்சட்டம்!
இந்தியக் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இலிருந்த பல குறைபாடுகள், ஓட்டைகளையும் சரிசெய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முழுபாதுகாப்பை உறுதி செய்கிறது. இச்சட்டத்தின்படி துன்புறுத்தும் கணவன் மட்டுமல்லாது சகோதரி, விதவை, ஆதரவற்ற பெண் / கொடுமைப் படுத்துபவர்களுடன் ஒரேவீட்டில் வசிக்கும் பெண் ஆகிய எவரும் பாதுகாப்பு பெறமுடியும்.
குடும்ப வன்முறை என்பது உடல்ரீதியான, மனோரீதியான,வார்த்தை ரீதியிலான, உணர்வு ரீதியிலான, பொருளாதார ரீதியிலான துன்புறத்தல் அல்லது அவ்வாறு அச்சுறுத்துவது ஆகியவை அடங்கும். வரதட்சினைக் கொடுமையும் இவற்றுள் அடங்கும். மணப்பெண்ணுக்கு மஹர் கொடுக்கச் சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!
உறவுமுறை ஆண்களின் துன்புறுத்தலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் இச்சட்டத்தின் மூலம் வரதட்சினைக் கொடுமை,பொருளிழப்பு, மன உளைச்சல் போன்ற கொடுமைகளிலிருந்து சட்டரீதியிலான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால் குறைந்தது ரூ.20,000 வரை அபராதமும் ஒருவருடம் சிறையும் குற்றவாளிக்குக் கிடைக்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி இந்தியாவில் திருமணமான பெண்களில் 70% பேர் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது.பல்வேறு காரணங்களுக்காக துன்பறுத்தலுக்காளாகும் பெண்கள் விகிதாச்சாரம் இந்தியத் துணைக் கண்டத்தில்தான் அதிகம் என்று நினைக்கிறேன்.
பெண்களுக்கு சமஉரிமை வழங்கி விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் அமெரிக்காவில்தான் பெண்களுக்கு எதிரான பலாத்காரங்கள் தலைவிரித்து ஆடுகின்றன என்கிறது ஒரு புள்ளிவிபரம்! (http://www.endabuse.org/resources/facts/)
உலகில் பெண்கள் மேம்பாட்டிற்காக எத்தனையோ சித்தாந்தங்களும் இஸங்களும் இருப்பதாகச் சொல்லி கொண்டாலும் அவை நோக்கத்தை இன்றுவரை அடைந்தனவா என்பது வகுத்தவர்களுக்கே வெளிச்சம்! பெண்களுக்குச் சுதந்திரம் வழங்கியுள்ளோம் என்று சொல்லிக் கொண்டு அவர்களின் ஆடைக்குச் சுதந்திரம் கொடுத்ததும் பெண்ணுயர்வாக ஆடையின் உயர்வையுமே இவர்களால் சொல்ல முடிகிறது.பெண்களின் நிலையை இயற்கையாக உணர்ந்து கொண்ட ஒரே கொள்கை இஸ்லாம் மட்டுமே!ஆணும்-பெண்ணும் சமம்; ஆனால் ஒன்றல்ல! என்ற இயற்கைக் கண்ணோட்டத்திலேயே எல்லா விசயங்களிலும் அணுகுகிறது.
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உறையுள் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குர்ஆன் வசனங்கள் 2:240-241 வசனங்கள் ஏற்கனவே இதைத்தெளிவு படுத்தியுள்ளது! வழக்கு நடந்து கொண்டிருக்கும் காலத்தில் பாதுகாப்பு அதிகாரியை நீதிமன்றம் நியமிக்க வலியுறுத்துகிறது. (குர்ஆன் 04:035).
இவையன்றி குடும்பப் பெண்கள்மீது பாலியல் குற்றச்சாட்டுகள்/ அவதூறு கூறுபவர்களைச்சாடும் வசனங்கள் (24:004, 24:013), வரதட்சினைக்கு எதிரான வசனம் (004:004) போன்ற எண்ணற்ற பாதுகாப்பை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. பெண்களுக்குச் சட்டம் மற்றும் மார்க்க ரீதியில் பாதுகாப்பு அளித்துள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!
இவற்றையெல்லாம் மறைத்து அதன் வழிகாட்டல்களையும் சட்டங்களையும் வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டு, இஸ்லாத்தை இன்னமும் பழமைவாதக் கோட்பாடென்பது வேடிக்கை!
<<<அபூஅஸீலா-துபாய்>>>