சட்ட அங்கீகாரம் பெறும் குற்றங்கள்!
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததால் ஏற்படும் விளைவுகளைக் காரணமாகச் சொல்லி, கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.அதைவிட பலதலைமுறைகளை சீரழிக்கும் மோசமான திட்டங்களை மத்திய அரசு கைவசம் வைத்திருக்கிறது.
ஆபாசச் சினிமாக்களை நள்ளிரவு 11:00 மணிக்குமேல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம் என்பதை ஆளும் மத்திய அரசாங்கம் கொள்கையளவில் (!!!)ஒப்புக் கொண்டு, அனுமதிக்கும் மசோதாவும் பரிசீலனையில் உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாலியல் கல்வியைப் போதிக்கும் திட்டமும் கிட்டத்தட்ட செயல்படுத்தப்படும் நிலையில் உள்ளது.
இவற்றுடன் ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் எயிட்ஸ் ஒழிப்புப் பிரச்சாரம் என்று வாய்கிழியப்பேசிக் கொண்டு, இன்னொரு பக்கம் எயிட்ஸுக்கான அத்தனை வழிகளையும் திறந்து விடும் மத்திய அரசின் பொறுப்பற்றபோக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குஜராத் இனப்படுகொலைகள், மும்பைக் கலவரம், பாபரி மஸ்ஜித் வழக்கு, இட ஒதுக்கீடு, சேதுக்கால்வாய் திட்டம், நதிநீர் இணைப்பு என எத்தனையோ திட்டங்களும் வழக்குகளுக்கானத் தீர்ப்புகளும் கேட்பாரின்றி முடங்கிக் கிடக்கும் நிலையில், ஓரினச் சேர்க்கைக்கும், ஆபாச சினிமாவுக்கும் என்ன அவசரம் வந்துவிட்டது என்று தெரியவில்லை!
மது நாட்டுக்கு,வீட்டுக்கு,உடல் நலத்துக்குக் கேடு என்று விளம்பரம் செய்து கொண்டே, மதுக்கடைகளை அரசே நடத்துகிறது.கேட்டால் வருமானம் கிடைக்கிறது என்று சப்பைக் கட்டுகிறார்கள். நாட்டு மக்களின் நலனிலும் ஒழுக்கத்திலும் அக்கரையின்றி, அரசுக்கு வருவாய்தான் முக்கியம் என்றால் திருட்டு, வழிப்பறி, கொள்ளை,கஞ்சா, போதைமருந்து ஆகியவற்றையும் அரசு சட்ட ரீதியில் ஆங்கீகரிக்கலாமே! கூட்டனியைத் தக்கவைத்துக் கொள்ள எத்தகைய கொள்கை சமரசத்திற்கும் தயாராக இருப்பதால் திருட்டுத்துறை அமைச்சர், வழிப்பறி மேம்பாட்டுக் கழகம், கஞ்சா, போதைமருந்து ஏற்றுமதி இயக்குனரகம் போன்றவற்றையும் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கலாம்!
<<<அபூஅஸீலா-துபாய்>>>
