நாம் கொடுப்பது ரூ 52 . என்னதான் நடக்கிறது ?
இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மையான விலை ரூ 22 தான் . நாம் கொடுப்பது ரூ 52 . என்னதான் நடக்கிறது ?
காலம் காலமாக நம்மை ஆண்ட அரசுகள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றி வந்துள்ளன என்பது , பெட்ரோலிய பொருட்களின் விற்பனையில் நடக்கும் திரைமறைவு உண்மைகளை அலசிப் பார்க்கும் போதுதான் தெரிய வருகிறது.
உண்மை என்னவென்றால் பெட்ரோலின் உண்மையான விலையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான விலையைக் கொடுத்துதான் நாமெல்லாம் இத்தனை நாட்களாகப் பெட்ரோலை வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் .
உணவு, உடை,உறைவிடம் ஆகியவை மக்களின் அடிப்படைத் தேவைகளாக இருந்த காலமெல்லாம் மாறி இன்று மின்சாரம் , பெட்ரோல், சமையல் எரிவாயு போன்றவையும் மக்களின் அடிப்படைத் தேவைகளாகி விட்டன.
பெட்ரோல், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்ற இந்தப் பொருட்களின்
விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஒட்டுமொத்த மக்களையுமே பாதிக்கக் கூடியதாக உள்ளது.
அதிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் ஒட்டு மொத்த விலைவாசியையுமே பாதித்து , மேல்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், ஏழைகள் என எல்லோருடைய வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம் செய்யப்பட்ட போது அதைப் பற்றி பரபரப்பாக பேசிய மக்கள் இன்று பெரும்பாலும் அதை மறந்துவிட்டனர் .
ஆனால் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் விலைவாசி உயர்வுக்கு மிக முக்கிய காரணங்களில் இந்த பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றமும் ஒன்றாகும்.
இந்தியாவில் ஒவ்வொரு முறையும் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றப்படும் போதும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதைக் காரணம் காட்டுகிறது நமது அரசு.
இந்தியா தனது பெட்ரோலிய தேவையில் 75 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதியையே சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் அது சுத்திகரிக்கப் படும் பொது பெட்ரோல், டீசல் , மண்ணெண்ணெய் , தார் போன்ற பல பொருட்களாக பிரிக்கப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.
75 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நிலையில் , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது உள்நாட்டிலும் விலை உயர்வு என்பது இயற்கைதானே என்று நமக்கு தோன்றும் , ஆனால் இந்த விவகாரத்தில் காலம் காலமாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதே உண்மை.
இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களை விநியோகம் செய்யும் மூன்று எண்ணெய் நிறுவனங்களும் ஒரு நாளுக்கு 600 கோடி ரூபாய் அளவுக்கு தினந்தோறும் இழப்பை சந்தித்து வருவதாகக் கூறுகின்றன, அதாவது தங்களுக்கு ஆகும் உற்பத்தி செலவை விட குறைவான விலையில் பெட்ரோலியப் பொருட்களை விற்று இழப்பை சந்திப்பதாக கூறுகின்றன .
பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும் இழப்பை சந்திக்கின்றன , மக்களும் பெட்ரோலியப் பொருட்களை இரண்டு மடங்கு விலை கொடுத்துதான் வாங்குகின்றனர் , பின்னர் யார்தான் இதில் லாபம் சம்பாதிப்பது என குழப்பமாக உள்ளது அல்லவா?
கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப் படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை வெறும் 22 ரூபாய்தான் என எண்ணும் போது அதிர்ச்சியாக உள்ளது அல்லவா?
22ரூபாய் விலை உள்ள ஒரு லிட்டர் பெட்ரோல் எப்படி 52 ரூபாயாக மாறுகிறது என்று பார்த்தால் ,
கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 130 டாலராக இருந்த போது அதிலிருந்து சுத்திகரிக்கப் படும் பெட்ரோலின்
அடிப்படை விலை =ரூ21.93
எக்சைஸ் வரி =ரூ14.35
கல்வி வரி =ரூ00.43
முகவர் லாபம் =ரூ01.05
வாட் வரி =ரூ05.50
கஸ்டம்ஸ் வரி =ரூ01.10
(கச்சா எண்ணெய்)
கஸ்டம்ஸ் வரி =ரூ01.54
(பெட்ரோல்)
போக்குவரத்து செலவுகள் =ரூ06.00
மொத்த விலை =ரூ51.40
இதில் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு கிடைக்கும் வரிப் பணம் மட்டுமே கிட்டத்தட்ட ரூ 22 ஆகும் ,அதாவது பெட்ரோலின் அடக்க விலையை விட அதிகமாக வரியாக வசூலிக்கப் படுகிறது .
மத்திய அரசுக்கு பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரியில் இருந்து மட்டும் 1,22,000 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைக்கிறது ,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் அரசு நினைத்தால் தன்னுடைய வரியைக் குறைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் , ஆனால் எப்போதுமே விலை உயர்வு என்னும் சுமையை மக்களின் தலையில் சுமத்துவதைதான் அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது .
ஒரு பொருளின் விலையைப் போல நூறு சதவீத அளவில் வரியை வசூலித்துக் கொண்டு , விலை ஏற்றங்கள் ஏற்படும் போது கூட அந்த வரியில் சிறிதளவும் குறைத்துக் கொள்ளாமல் மக்களை இந்த அரசுகள் ஏமாற்றி வந்துள்ளன .
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வினால் நாட்டில் இன்று எல்லாவிதமான பொருட்களின் விலையும் தாறு மாறாக உயர்ந்து மக்களின் அன்றாட வாழ்கையை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதைக் கண்ட பிறகும் கூட அரசு எந்த வகையிலும் மக்களுக்கு உதவ முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையாகத்தான் உள்ளது....
நான் கொடுத்துள்ள கணக்கீடுகள் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 130 டாலராக இருந்த போது கணக்கிடப்பட்டது , ஆனால் இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 70 டாலராக குறைந்து விட்டது, இன்னமும் கூட மத்திய அரசுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்ண்டுமென எண்ணாமல் இருப்பதுதான் வேதனையிலும் வேதனை...................
சரபுதீன்
ஜித்தாவிலிருந்து