காலை உணவின் அவசியம்
காலை வேளையில் பணக்காரனைப் போலவும், மதியம் ஏழையை போலவும், இரவு பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிட வேண்டும் என்பார்கள். இன்றய அவசர உலகினில் நமது உணவு பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டுவிட்டன எனக் கூறினால் அது மிகை இல்லை.
காலையில் வேலைக்குத் தாமதமாக எழுபவன் காலைப் பசியாறலைத் தவறவிடுகிறான். மதியம் மூக்கு பிடிக்க சாப்பிடுகிறான். மதியம் தேனீரைப் பருகி இரண்டொரு பலகாரங்களைத் தினித்துக் கொள்கிறான். இரவில் மட்டுமே உணவை மனதார ருசி பார்க்கும் தருணம் கிடைக்கிறது. இதன் காரணமாக இரவு வேளைகளில் அளவிற்கு அதிகமாகவே சாப்பிட்டுவிட்டு தூங்கிப் போகிறான்.
உணவு உட்கொண்டப் பிறகு உறக்கம் கொள்வது மிகவும் தகாத பழக்கம் என்பார்கள். உணவு செரிமானம் ஆகாது. வயிற்றில் இருந்தபடி பாழ்பட்டுப் போகும். சிலர் காலையில் எழுந்தவுடன் அவர்களின் வாய் துர்நாற்றம் வீசுவதற்கு இது தான் காரணம். செரிமானம் ஆகாத உணவினால் மலச்சிக்கலும் உண்டாகிறது.
சீனர்களிடையே ஒரு பழக்கம் உண்டு. மாலை ஆறு அல்லது ஆறரை மணி வாக்கில் உணவை உட்கொள்வார்கள். பிறகு பிள்ளைகளை விளையாட விடுவார்கள். பெரியவர்கள் நடை போடுவார்கள். இது உணவு செரிமானத்திற்குச் சிறந்த வழி. இரவு பசியெடுத்தால் கனமில்லா உணவு வகைகளை கொஞ்சமாய் சாப்பிடுவார்கள். இது அவர்களின் காலாச்சாரத்தில் உண்டு. இன்றைய நாட்களில் சீனர்களும் இவ்வுணவு முறையைப் பின்பற்றுகிறார்களா என்பதும் கேள்வியே.
மனித வாழ்க்கைக்குக் காலை உணவு அத்தியாவசிமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை உணவை உட்கொண்ட பிறகே அன்றய நாட்களுக்கான வேலைகளில் முழு மூச்சாக ஈடுபட வழி செய்கிறது. நேரம் தவறி எடுத்துக் கொள்ளப்படும் காலை உணவு உடற் சோர்வையும் சோம்பலையும் ஏற்படுத்தும்.
குழந்தைகள் சரியான உணவு முறையை பேன சிறு வயது முதல் கற்பித்துக் கொடுத்தல் நலம். பெற்றோர்களும் முறையான உணவு வழக்கத்தை பின்பற்றுவாராயின், குழந்தைகளுக்கு அப்பழக்கம் இயல்பாக அமைந்துவிடும். நாம் உண்ணும் உணவானது உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அறிவாற்றலின் வளர்ச்சிக்கும் வித்தாக அமைய வேண்டியது அவசியம். வாயோடு மணக்க குடலோடு கடுக்கவும் இருப்பின் அது சரியான உணவாகாது.
காலம் தவறாமலும், நினைத்த நேரங்களில் கண்டதை சாப்பிடாமலும், செரிவான உணவு வழக்கைத்தை அமல்படுத்துவோர் மிகவும் சொற்பமே. இதற்கு பெருமளவில் நாம் சொல்லும் பதில் தான் என்ன? கால ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மனித வாழ்க்கையே ஆகும்.
காலை உணவு மூளைக்கு சாப்பாடு என்பது அறிவியல் அறிஞர்கள் கூற்று. உதாரணமாக ரொட்டி வகைகளில் இருக்கும் ஊட்டச்சத்து மூலையில் துரித செயல்பாட்டுக்கும் உடல் உற்சாகத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன.
ஒரு ஆய்வின்படி காலை பாசியாறையை சாப்பிடமல் பள்ளி வரும் மாணவர்களை விட சாப்பிட்டு வரும் மாணவர்களே படிப்பில் சிறந்து விளங்குவதாகக் குறிபிட்டுள்ளார்கள். இவ்வாய்வின் மற்றுமோர் தகவலின்படி காலை உணவு அத்தியாவசியம் இல்லாதது எனும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறதாம். இது மிக வேதனையளிக்கக் கூடிய விடயமாய் அமைகிறது. ஏன் இப்படி? காலையில் உட்கொள்வதைவிட ஒரே வேலையாக மதியம் சாப்பிட்டுவிட்டால் போதும் என நினைக்கிறார்கள்.
பள்ளிச் செல்லும் மாணவர்களில் பெருவாரியானவர்கள் காலை பசியாறுவது இல்லை. 10 மணி வாக்கில் பள்ளியில் கொடுக்கப்படும் ஓய்வு நேரத்தில் உணவு எடுத்துக் கொள்கிறார்கள். அப்படித் தேர்வு செய்யும் உணவு வகைகளில் ருசி மிகுந்தவற்றை தேர்வு செய்கிறார்களே தவிர அவை ஆரோக்கியமான உணவு வகைகள் தானா என்பதில் கவனம் செலுத்துவதில்லை.
இதனால் மாணவர்களின் அறிவாற்றல் பாதிப்பிற்குள்ளாகிறது. பால் மற்றும் பழச்சாறு வகைகளில் காலை உணவாக உட்கொள்ளுதல் நலம். ஆனால் சிலருக்கு பால் குடித்தால் வாந்தி வரும் என்பார்கள். காலை உணவு ஒவ்வாது எனவும் சொல்வார்கள். தொட்டில் பழக்கம் இடுகாடு மட்டும் என்பதை போல் கடைசி காலம் வரை இப்படிபட்ட பழக்கங்களோடு இருப்பவர்களும் உண்டு.
அதை விடக் கொடுமையாக எந்நேரமும் சோறு மட்டுமே உணவாக கொள்ளும் ஆட்களும் உண்டு. சோறு சாப்பிட்டால் மட்டுமே இவர்களுக்கு வயிறு நிறையும்.
Food Facts Asia நடத்திய ஆய்வின்படி, காலம் தவறி காலை உணவை எடுப்பவர்களின் உடல் எடை அதிகரிப்பதாகவும். நேரப்படிக் காலை உணவைக் கொள்பவர்களின் எடை சீரான முறையில் இருப்பதாகவும் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனையடுத்து காலை உணவை தவிர்த்து நேரடியாக மதிய உணவை உட்கொள்ளும் பிறிவினர் உடல் எடையால் மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். காலை உணவை தவிர்த்தவர்கள் மதிய உணவு வேலைக்குக் காத்திருப்பார்கள். பசியும் அதிகபடியாக இருக்கும். இதனால் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் எண்ணம் எழும். அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடையும் கண்மண் தெரியாமல் எகிறிவிடுகிறது. அதை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் அவஸ்தைக்குள்ளாகிறது.
உணவு மனிதனின் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்று. மனித வாழ்க்கையின் அச்சாணியாக விளங்குகிறது. சரியான உணவு முறையைத் தேர்ந்தெடுத்து சிறப்பான முறையில் வாழ்வது நம் கையில்.
சரபுதீன்
ஜித்தாவிலிருந்து
