video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

கொஞ்சம் நில்லுங்கள்

எது வாழ்கை?
நாம் வாழும் இப்பூவுலகம் இயல்பாகச் சுற்றிக்கொண்டிருக்க, தன்னுடைய படைப்பில் சுயமாக எந்தப் பங்கும் இல்லாத மனிதன், இறைவன் தந்த உடல் உறுப்புகளைக் கொண்டு இயந்திரமாய் உழைக்கிறான். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதாது என்று கருதும் அளவுக்கு நேரப் பற்றாக்குறை. வானமும், பூமியும், அண்ட கோளங்களும், கடலும், வின்மீன்களும் தனது இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்க, 6-வது அறிவு கொடுக்கப்பட்ட மனிதனோ பொருளாதாரத்தில் பேராசைக் கொண்டு, தன் வாழ்வாதாரத்தை பெருக்கத்தான் பேயாய் உழைக்கிறான். நான் எனும் அகந்தையில் சிக்கி நான் பணக்காரனாக வேண்டும், நான் ஆடம்பர உடைகள் அணிய வேண்டும், நான் அடுக்கு மாடிகள் கட்டி உல்லாச வாகனங்களில் வலம் வரவேண்டும் என்று ஓடி ஆடி பணத்தைத் தேடுகிறான். அது எவ்வகையில் சம்பாதித்தாலும் சரியே!
மற்ற மனிதரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் தம்மைவிட பணக்காரர் என்று இருமாப்புக் கொண்டு பேராசையில் இன்னும் ஓடுகிறான். பணம், பணம் என்று நடைபிணமாய் அலைகிறான். மறுமையை மறந்து இம்மையை நேசிக்கிறான்! பணத்தை யாசிக்கிறான்.
அல்லாஹ் தன் திருமறையில்செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை(அல்லாஹ்வை விட்டும்) பராமுகமாக்கிவிட்டது. நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை(102:1,2)
படைத்தவன் இவ்வாறு கூற படைப்பினமோ தன் மனோ இச்சைக்கு இறையாகி இறைவனின் கட்டளைக்கு பாராமுகம் காட்டுகிறான். ஒரு பொய் சொன்னால் உலக ஆதாயம் கிடைக்கும் என்றால் ஓராயிரம் பொய் சொல்லத் தயாராகின்றான். நபியிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று சிலாகித்துச் சொல்லப்பட்ட முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்கை எவ்வாறு இருந்தது?.
ஒரு முறை நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க நபித் தோழர்கள் சென்றார்கள். ஈச்சநார் கட்டிலிலிருந்து எழுந்தமர்ந்த நபி(ஸல்) அவர்களின் முதுகினில் ஈச்சநாரின் தடயங்கள் பதிந்திருந்தன. இதைக்கண்டு இதயத்தில் இரத்தம் கசிய தோழர்கள் - அல்லாஹ்வின் தூதரே, தாங்கள் விரும்பினால் பஞ்சு மெத்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து தருகிறோம் எனக்கூறும் போதும், "நான் ஓர் பிரயாணியைபோல (பிரயாணி இடையில் இளைப்பாற ஒரு மரத்தைத் தேர்ந்தெடுப்பது போல்) இவ்வுலகை இளைப்பாரும் இடமாகக் கருதுகிறேன்" எனக்கூறி மறுத்துவிட்டனர்.
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். யாராவது மிருதுவான ரொட்டித்துண்டு உண்பதை காணும்போது அழ நினைத்தால் அழுதுவிடுவேன். காரணம் நபி(ஸல்) அவர்கள் தனது இறுதி நாட்களில் தொடர்ந்து இருவேளை வார்க்கோதுமையால் செய்த ரொட்டியை உண்டதில்லை என சான்று பகர்கிறார்கள்.
மேலும் நபி(ஸல்) அவர்களின் "இப்லீஸ் உனக்கு முன்னால் இருக்கிறான், மனம் உனது வலப்பக்கம் இருக்கின்றது. மனோ இச்சை உனது இடப்பக்கம் இருக்கின்றது. மிகைத்தவன்(அல்லாஹ்) உன்னைக் கண்கானித்தவனாக இருக்கிறான். இப்லீஸ் உன்னை மார்க்கத்தை விட்டுவிடத் தூண்டுகிறான். மனம் உன்னைப் பாவத்தின் பக்கம் அழைக்கின்றது. மனோ இச்சை உன்னை சிற்றின்பத்தின் பக்கம் தூண்டுகின்றது. உலகம் மறுமையை மறந்து தன்னையே தேர்ந்தெடுத்துக் கொள்ள அழைக்கின்றது. உறுப்புக்கள் உன்னை துர் செயல்கள் செய்ய அழைக்கின்றது. இறைவனோ உன்னை சுவனம், மற்றும் பாவமன்னிப்பின் பக்கம் அழைக்கின்றான். இப்லீஸுக்கு பதிலளித்தால் உன் மார்க்கம் போய்விடும். மனம் உன்னை ஆட்சி செய்தால் ஆன்மா போய்விடும், மனோ இச்சைக்கு பதிலளித்தால் உன் அறிவு போய்விடும், உடலுறுப்புக்கு பதிலளித்தால் உன் சுவனம் பறிபோய் விடும். வல்ல இறைவனின் அழைப்புக்கு பதிலளித்தாலோ தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் என்று கூறிவிட்டு எது உனக்கு தேவையோ அதை நீ தேர்வு செய்துக்கொள்" என்பதை தெளிவுபடுத்தினார்கள்.
எனவே உலக மாயையில் வீழ்ந்து நம்மை மாய்த்துக்கொள்ள வேண்டாம்! உலகம் நெருப்புப் பிளம்பு. அழகும், வனப்பும் கவர அற்ப வாழ்வின் சொர்ப்ப ஆசைக்கு அடிபணிந்து விட்டில் பூச்சிகளாய் கருகி சாம்பலாக வேண்டாம். தாமரையில் நீராய் இருந்தால் மறுமையில் நமக்கு அணுகூலங்கள் அதிகம். உலகமே சதம் என நினைத்தால் பட்டோலைகள் இடக்கரத்தில் கொடுக்கப் பெறுவோம்.
ஆசையும், ஆடம்பரமும் நிறைந்த அலங்கார உலகமிது. மண்ணும், பொன்னும் நம் மரணத்தை ஒத்திப்போடாது. "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே தீரும்" என்று இறைமறை கூறுகிறது. மறுமை நாளில் நாம் இவ்வுலகில் தேடிவைத்த பணம், காசு, வீடு, வாகனங்கள் செல்லாது.
இவ்வுலகில் இறைவன் நமக்குக் கொடுத்த பணம், காசு, அதிகாரம், கெளரவம், பேச்சாற்றல், அறிவுத்திறன் இவையாகவும் ஓர் சோதனைதான். இதுவே நிரந்தம் என எண்ணி ஏமாந்துவிடக்கூடாது. இம்மையை வெல்ல மறுமையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். எப்போது மரணம் வரும் என்ற கேள்விக்கு நம் மனம் கூறும் பதில் - இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றது என்பது தான். படுக்கையிலிருந்து எழுந்தவர்கள் நெஞ்சில் கைவைத்து மஞ்சத்தில் உயிர்நீத்தவர்கள் எத்தனை பேர்? விடைபெற்று கையசைத்து விமானமேறிய எத்தனையோ பேர் விபத்தில் சிதறி சாம்பல் பைகளாய் வீடுதிரும்புவதையும் பார்க்கின்றோம்.
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். எவர் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கைகாகத் தன்னைத்தானே கேள்வி கேட்டு மரணத்திற்கு முன்னுள்ள வாழ்க்கையை தயார் செய்கின்றாறோ அவரே புத்திசாலி. உயிருடன் இருக்கும் போதே சுவனப்பாதைக்கு செல்லும் எளிய வழிகளை தேர்ந்தெடுத்து ஆயத்தம் செய்ய வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்.அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமேயானால் "என் இறைவனே! என்னை திரும்ப(பூமிக்கு)அனுப்புவாயாக" என்று கூறுவான். நான் விட்டு வந்தவற்றிலிருந்து நல்லமல்கள் செய்வதற்காக என்று. அவ்வாரல்ல, அவன் கூறுவது வெறும் போலி வார்த்தைகளே, அவர்கள் எழுப்பப்படும் நாள்வரை அவர்கள் முன் ஓர் திரை உண்டு! எனவே உலக வாழ்கை ஓர் சோதனைக் கூடம்.
இறைவன் திருமறையில் கூறுகிறான். உங்கள் செயல்களால் அழகானவர் யார் என்று சோதித்தறியும் பொருட்டு உலகத்தை நாம் அலங்காரமானதாக்கி இருக்கின்றோம்.
எனவே என்வீடு. என்மக்கள், என் கார் என்ற போலியான அகம்பாவம் கொள்ளும் மனிதனே! சிந்தனையை சீர்தூக்கிப் பார்!. யார் நீ? எங்கிருந்து வந்தாய்?
கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழும் வானம். பூமிக்கு மத்தியில் உருண்டு விளையாடி மகிழும் ஓர் அற்ப சதைப்பிண்டம் தான் மனிதன். பிறந்ததோ அற்ப இந்திரியத் துளியிலிருந்து, ஆயுள் முழுவதும் சுமந்து திரிவது மலமும், ஜலமும், சளியும்தான். மண்ணை உணவாகக் கொண்டு மண்ணுக்குள்ளேயே மக்கி மாசுபடப்போகும் சதை போர்த்திய எலும்புக்கூடு நீ! பின் எதற்காக இந்த போலி கெளரவமும், அகந்தையும். இறைவன் அன்றாடம் நமக்கு தந்த அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டு, நன்றி மறந்தவர்களாக வாழ்வது ஏன்? முழுமையான வழிகாட்டுதலை பெற்ற உத்தம மார்க்கத்திலிருந்து கொண்டு நரகத்தை நோக்கி நாம் தொடர்ந்து படையெடுக்கின்றோமே! ஏன்? பணம் கிடைத்தால் குதூகலிக்கிறோம்! இறைக்கட்டளையை மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கிறோமே ஏன்? எல்லா சுகமும் யாம் பெற வேண்டும் என்ற ஆசை உள்ள அவர்கள் என்னால் என்மார்க்கம் என்ன பெற்றது? மார்க்கத்திற்காக நான் என்ன சாதித்தேன் என்று என்றாவது எண்ணிப்பார்த்தது உண்டா? சுடுமணலில் கிடத்தப்பட்டு கரும்பாறை ஏற்றப்பட்டோமா? கழுமரம் ஏறினோமா? என்ன சாதித்தோம்?இஸ்லாத்தை ஏற்றதும் தன்னைத் திருத்தி உயிர் பிரியும் வேளையிலும் அஹத் அஹத் என்ற வீர முழக்கமிட்டார்களே அவர்கள் இஸ்லாத்தின் தூண்களா? மாற்றார் நகைக்க நாம் காரணமாக வாழ்கிறோமே நாம் இஸ்லாத்தின் தூண்களா?
இறைவனிட்ட கட்டளையை புறக்கணித்து கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என வாழ்கிறோமே! உலகை காதலித்து, மரணத்தையும், மறுமையையும் மறந்து வாழ்கிறோமே! இஸ்லாத்தில் இருந்துக்கொண்டு அதனை வேருடன் வெட்டிச் சாய்க்கும் கோடாரிக் காம்புகளாக அல்லவா நாம் திகழ்கிறோம்!உலக ஆசையை உதறித் தள்ளி மறுமை வாழ்வின் மீது மையல் கொள்வதே அறிவுடைமை. சுவர்க்கத்தை அடைய நல்லமல்கள் செய்து, செய்த பாவத்திற்காக வருந்தி மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ்வதுதான் சிறந்தது. உலகவாழ்க்கை நீர் குமிழி போன்றது என்பதை மனதில் கொண்டு இவ்வுலகமே சதம் என்று வாழாது மறுமைக்காக வாழ வல்ல இறைவன் அருள் புரிவானாக! ஆமீன்
அனுப்புதல்: அபு ஜுலைஹா.
----
( நேரம் கிடைக்காததால் மற்றவர்களின் ஆக்கத்தை எடுத்து அனுப்புகிறேன்.ஒரு சகோ.அரட்டையில் கேட்டதுக்கு என்னால் இதைத்தான் தரமுடிந்தது.அதிரைக்காரனின் வெட்டி பேச்சு போல் நையாண்டியாகவும்,ஊர் சுத்தி உமர்போல் கேலியுடன் கூடிய கருத்தையும் பதிவதற்கும்,கருத்து மேடை அபுஅசீலா போல் எழுதவும் நம்மிடம் சரக்கு இல்லை அதுவே நேரமில்லை யென்ற நழுவலும் இருந்தாலும் கூட உண்மையில் நேரம் பற்றாக்குறையும் நானே கிறுக்காததற்கு காரணம்.சின்ன காக்கா,peacetrain ,ஆட்டோ கிராப் நெனா வரை இருக்க அவங்க முன்னாடி நான் யெப்படி எழுத முடியும்?)
--- சகோ.தஸ்தகீர்.

Posted by crown on 10/08/2008 08:11:00 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for கொஞ்சம் நில்லுங்கள்

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery