புதியதோர் வல்லரசு செய்வோம் வாரீர்
மதக்கலவரங்களாலும், துவேசங்களாலும் மாசு படிந்துள்ள நம் பாரதத் தாய்திருநாட்டை கள்ளம் கபடமில்லா மனித நேயம் எனும் வெள்ளைத் துணி கொண்டு துடைப்போம் வாரீர்.
எம்மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் யாவரும் நம் தாய்த்திருநாட்டின் தவப்புதல்வர்கள் தான் எனும் எண்ணம் நம் யாவரின் உள்ளங்களிலும் தளைத்திடல் வேண்டும். நம் உண்மையான தேசப்பற்றிற்கு யாருடைய சான்றிதழும், ஐ.எஸ்.ஐ (ISI) முத்திரைகளெல்லாம் தேவையில்லை. அதையும் தன் பணபலம் கொண்டு எளிதாக வாங்கும் உலகம் இது.
மேல் சாதி என்பவன் வானிலிருந்து குதித்தவனும் அல்ல. கீழ் சாதி என்பவன் பூமியிலிருந்து முளைத்தவனும் அல்ல. நம் எல்லோரின் தேகத்திலும் தடையின்றி ஓடும் குருதியின் நிறம் சிகப்பு அன்றி வேறில்லை.
நம் தாய் நாட்டின் உண்மையான பற்று என்பது நாட்டின் குடியரசு, சுதந்திர தினங்களில் தன் (இதயத்தின் மேல்) சட்டையில் அணியும் மூவர்ணக் கொடி மூலம் மட்டும் தான் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்பதில்லை.
தேசப்பற்று என்று சொல்லி வெறும் வாயில் ஊரறிய "வந்தே மாதரம்" கூறிவிட்டு, பிறகு யாரும் அறியாமல் தன் மறைமுக வேலைகள் மூலம் நம் நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் செயல்களில் ஈடுபடுவோர் தான் உண்மையில் "அக்மார்க்" முத்திரை குத்தப்படாத சுத்தமான தீவிரவாதிகள்.
ஒரு வேளை உணவிற்கே அல்லோலப்படும் ஏழை, எளியோர் வாழும் நம் தாய் நாட்டில் பதுக்கல், கலப்படம், கடத்தல், கொள்ளைகள், சுயநலத்திற்காக ஈவு இரக்கமின்றி கொலைகள் மூலம் கோடி கோடி சம்பாதித்து அதை அரசுக்கு முறையே கணக்குகாட்டாமல் அதன் மூலம் நம் நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் அனைவருமே அரசால் அறிவிக்கப்படாத தீவிரவாதிகள் தான்.
"திரைக் கடல் ஓடியும், ரியாலைத் (நாட்டிற்கேற்ப வேறுபடும்) தேடு" என்ற புது மொழிக் கேற்ப சம்பாத்தியத்திற்காக அயலநாடுகள் சென்று விடுமுறையில் நம் தாய்த்திரு நாட்டிற்கு திரும்பும் பொழுது இங்கு பல நிலை/சீர்க்கேட்டை கண்டு நம் நெஞ்சு பொறுக்குதில்லையே!
பணக்கார வர்க்கங்கள் மேலும், மேலும் வானுயர பறக்க, நடுத்தர ஏழை, எளியோரின் நிலை மட்டும் நிலத்தடி நீர் போல் நாளாக, நாளாக அடி பாதாளத்திற்கு இறங்கிப் போய்க்கொண்டே இருப்பது ஏனோ?
இன்றைய சூழ்நிலையில் நம் தாய்த்திருநாட்டில் பரவலாக நடக்கும் மதக்கலவரங்கள் ஒடுக்கப்பட்டு, மாசடைந்த நம் எல்லோரின் (எல்லா மதத்தவரின்) உள்ளங்களின் தூசுகளும் மனிதநேயத்தால் துடைக்கப்பட்டு, எல்லா சமூகக்கேடுகளும் களையப்பட்டு "பிறக்கும் பொழுது எதைக் கொண்டு வந்தோம் கடைசியில் நம்முடன் எடுத்துச் செல்ல" என்ற உயரிய எண்ணத்தால் நாம் யாவரும் பிணைக்கப்பட்டு, நம் தாய்த்திருநாட்டின் வல்லமைகளை உலகறியச் செய்து, இன்றைய வல்லரசுகளின் தலைவனாக்கி அதன் உன்னத ஆசனத்தில் அமரச்செய்து அழுகு பார்ப்போம். வாரீர்! புறப்படுவோம் ஓரணியில். இதற்குத் தலைவர்கள் தேவையில்லை, கட்சிக் கொடிகளும் அவசியமில்லை. கலவரங்கள் இல்லை. நம் உள்ளத்தூய்மையே இதன் தாரக மந்திரமாக இருக்கட்டும் வாரீர். ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடிப்போம் வாரீர்.
இஸ்லாத்தின் உயரிய கொள்கையாம் "உம்மதம் உனக்கு; எம்மதம் எனக்கு" என்ற கொள்கையை நாமெல்லாம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் கடைபிடித்தால் நம் பாரத்திருநாடு என்றோ வல்லரசுக் கனவை எட்டி இருக்கும் என்பது வருத்தம் கலந்த உண்மை.
மதக்கலவரங்களாலும், பல்வேறு சண்டைகளாலும் நம் மண்டைகள் தான் உடைக்கப்பட்டனவே தவிர நம் தாய்நாட்டிற்காக, மக்களுக்காக சாதித்தது தான் என்ன? ஒழியட்டும் ஆணவப் பேய். அழியட்டும் அநியாய அடக்குமுறைகளும், அநீதிகளும். ஓங்கட்டும் நம் தூய மாசற்ற தேசப்பற்று. நம் வல்லரசுக் கனவுகள் நனவாகட்டும். புதியதோர் வல்லரசு செய்வோம் வாரீர்.
சகோ. ரஃபியாவின் ஆழமான சிந்தனைகளிலிருந்து எடுக்கப்பட்ட முத்துக்களின் சாரம் தான் இவை. அதை இங்கு நம் யாவருடைய பார்வைக்காகவும் தொகுத்து வழங்கி மகிழும்.
எம்.எஸ்.எம். நெய்னா முகம்மது.
