என் மகன் கபூர் குற்றவாளி அல்ல - கபூரின் தந்தை பேட்டி
தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க முயன்ற தீவிரவாதி அப்துல் கபூர் நெல்லை பேட்டையில் கைது செய்யப்பட்டதாக காலை நாளிதழ்கள் கடந்த ஜூலை 28ம் தேதி காலை முழுக்கமிட்டபோது தமிழகமே ஏன் இந்தியாவே அதிர்ச்சி அடைந்தது என கூறலாம்.
ஜூலை 27ம் தேதி நள்ளிரவு நேரத்தில் நெல்லை களக்காடு காவல் நிலையத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.மஞ்சுநாதா சேக் அப்துல் கபூர் (39) I.E.D.(Improvised Explosive Devices) செய்வதில் கைதேர்ந்தவர். மேலும், நெல்லை டவுணைச் சேர்ந்த ஹீரா காவல்துறையிடம் தெரிவித்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டதாக கூறியதுடன் கபூர் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக சில பேட்டரி மற்றும் வயர்கள் போன்றவற்றை காண்பித்தனர்.
நாம் மக்கள் உரிமைக்காக கபூர் தந்தை சேக் முகம்மதுவுடன் சந்தித்ததில் அவர் கூறியதாவது. 'என் மகனின் மைத்துனர் திருமணம் மற்றும் மறுவீடு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்த கபூரை மதியம் சுமார் 3.30 மணிக்கு என் வீட்டுக்கு வந்த இருவர், 'நாங்கள் R.D.O அலுவலகத்திலிருந்து விசாரணைக்காக கபூர் வர வேண்டும் என கூறினார். அப்போது எனது வீட்டை அடையாளம் காட்ட வந்த தவ்ஹீத் ஜமாத்தைச் சார்ந்த செய்யது அலியிடம் நான் எனது மகன் அவனது மாமனார் வீட்டில் இருப்பதாக கூறி அனுப்பிவிட்டேன். பின்பு அவன் வந்தவர்களால் அழைத்து செல்லப்பட்டு வெகு நேரமாகியும் வராததால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தேன். மறுநாள் காலையில் செய்தித்தாள்களை பார்த்த பின்னே அவன் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டதை அறிந்து கொண்டேன். அவன் தவ்ஹீத் ஜமாத்தில் பரங்கிமலை கிளை பொருளாளராக செயல்பட்டு வந்த நிலையில் எங்கள் ஜமாத்தில் பிரச்சினை செய்து பேட்டை தவ்ஹீத் ஜமாத்தினரை கண்டித்தான். அவர்கள்தான் போலீசில் போட்டு கொடுத்து அப்பாவியான என் மகனை குற்றவாளி போல ஆக்கிவிட்டனர் என கூறினார்.
கபூரின் மனைவி ஜீனத் நஜ்மா நம்மிடம், 'அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். என் கணவர் சமீபத்தில் ஆலந்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பாலியல் முறைகேடு நடந்தபோது அதை வெளிகொணர்ந்து நடவடிக்கை மேற்கொண்டார். அப்படிப்பட்டவரை தீவிரவாதியாக சித்தரிப்பது மிகுந்த மன உளைச்சலாக உள்ளது'. த.மு.மு.க.தலைமை இதில் தலையிட்டு என் கணவரை காப்பாற்ற வேண்டும் என கண்ணீருடன் கூறினார்.
கடந்த 28ம் தேதி காலையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹீரா பிடிபட்டு அவர் கொடுத்த தகவலின் பேரில் கபூர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், ஹீராவின் தந்தை, கபூர் செய்யப்பட்டு சுமார் 4 மணி நேரம் கழித்து தன் மகனிடம் போனில் பேசியுள்ளார். முதலில் வெளி மாநிலங்களுடன் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. பின்பு, காவல்துறையினர் விசாரணையில் அவ்வாறு இல்லை என்பது தெளிவானது. I.E.D. வெடி மருந்துகள் செய்வதில் வெறும் 7வது வகுப்பே படித்த கபூர் தேர்ச்சி பெற்றவர் எனக் கூறப்பட்டதற்கும், அவர் வீட்டில கைப்பற்றப்பட்ட பொருள்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. அவருடைய வீட்டில் பொருள்கள் கைப்பற்றப்பட்டபோது யாரிடமும் கையெழுத்து பெறப்படவுமில்லை.
மேலும், மதுரை பாண்டி கோவில் பகுதியில் கைப்பற்றப்பட்டதாக கிடைத்த வெடி பொருட்கள் எதுவும் பத்திரிக்கையாளர்களுக்கு காட்டப்படவில்லை. இது அல்லாமல் கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் பகுதியில் பெருமளவில் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு 3 பேர் (முஸ்லிம் அல்லாதோர்) கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் பெங்களுர் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மைசூரை சேர்ந்த வெடிஉப்பு வியாபாரிகள் சந்துரு, சிக்க கவுடா ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் சிவகாசியை சேர்ந்த பன்னீர் செல்வம், தாமஸ், ராஜ்பால் ஆகியோரை மைசூர் மேட்டுகாளி போலீசார் தேடி வருகின்றனர்.
இவையெல்லாம் ஊடகங்களில் முறையாக வெளிக்கொணரப்படவில்லை. ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தை தகர்க்கப் போவதாக நெல்லையிலிருந்து இ-மெயிலில் அனுப்பியதாக நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியர் கைது செய்யப்பட்டு அதில் உண்மை இல்லை என பின்பு விடுவிக்கப்பட்டார். அவ்வழக்கு பின்பு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாமலேயே போய் விட்டது.
செய்தி : நெல்லை உஸ்மான்.