அல்லாஹ் நாடினால் நிச்சயம் நடக்கும்!
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்குர்ஆன் 3:103
குர்ஆன் வசனங்களையும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியினையும் சமுதாய மக்கள் இன்று சிந்தித்து செயல்பட முன்வரவேண்டும். இன்றைய இஸ்லாமிய சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து பல தலைவர்களின் பின்னால் அணி அணியாக நிற்பதை காணமுடிகிறது. அந்த தலைவர்கள் எதைச் சொன்னாலும் அது சரி என முடிவெடுக்கின்ற நிலையில்தான் இருக்கின்றனர். அது சரியா? தவறா? என்றெல்லாம் சிந்தித்தும் பார்ப்பதில்லை.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நிச்சயமாக உங்களிடையே சில தலைவர்கள் தோன்றுவார்கள்; அவர்களிடம் நல்லவற்றையும் காண்பீர்கள், தீயவற்றையும் காண்பீர்கள். யார் அவர்களின் தவறுகளை கண்டிக்கிறாரோ, அவர் தமது பொறுப்பிலிருந்து நீங்கிவிட்டார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் பாதுகாப்பு பெற்றார். யார் அவர்களது தீய செயல்களைப் பொருந்தி துணை செய்கிறாரோ அவர் நாசமடைந்தார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடன் சஹாபாக்கள் அவர்களிடம் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் போர் செய்யலாமா? என்று கேட்கப்பட்டதற்கு "அதற்கு அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை போர் செய்யக்கூடாது" என்று கூறினார்கள். அறிவிப்பாவர்: உம்முஸமா(ரழி) நூல்: திர்மிதி, அஹ்மத்
வழி கெடுக்கும் தலைவர்களைப் பற்றியே என் சமுதாயம் குறித்து நான் அஞ்சுகிறேன். என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் தான் சத்தியத்தில் உறுதியுடன் இருப்பார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான்(ரழி) நூல்: திர்மிதி
நபி(ஸல்) அறிவிப்புப்படி "ஒரு கூட்டத்தினர் தான் சத்தியத்தில் உறுதியுடன் இருப்பார்கள் என அறிய முடிகிறது. அந்த சத்தியத்தை நாம் மக்களிடம் எடுத்து வைக்கவேண்டிய கடமை முஸ்லிம்கள் அனைவருக்கும் உண்டு. ஆனால் அல்லாஹ் கூறியபடி, நபி(ஸல்) அவர்கள் அறிவித்த சத்தியத்தை எடுத்து வைப்பதில் ஒற்றுமையாகவோ, உறுதியாகவோ இருப்பதற்கு முன்வருவதும் இல்லை.
ஏன் இந்த நிலை என்பதை சிந்த்திக்கவேண்டும். நம்மிடம் ஒற்றுமை இல்லாததால் பிற சமுதாயத்தினர் நம்மை எளிதில் வென்றுவிட முடிகிறது.
நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். அல்குர்ஆன் 2:143
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிாிவை உண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்குர்ஆன் 3:105
இத்தைகைய வசனங்கள் பிரிவை ஏற்படுத்திக்கொள்ளாமல் ஒன்று பட்ட சமுதாயமாகவே இருக்க வேண்டும் என்பதையே தான் வலியுறுத்துகின்றன. ஆதலால்தான் அல்லாஹ் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. 3:103 என்று தனது திருமறையை பற்றிப்பிடிக்க கூறுகிறான். இங்கு அல்குர்ஆனை அல்லாஹ் கயிற்றுக்கு உவமானமாகக் கூறுவதின் நோக்கம் பல தனித்தனி நார்களாக இருந்ததைத்தான் ஒன்றினைத்து கயிறாக உருமாற்றுகிறோம் என்பதை நமக்கு எளிதான உரை நடையில் உணார்த்துகிறான்.
"ஜமாஅத்தை பற்றிக்கொள்ளுங்கள்; பிரிந்து செல்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்; எவர் சொர்க்கத்தின் நறுமணத்தை நுகர விரும்புகிறாரோ அவர் ஜமாஅத்தை அவசியமாக்கிக்கொள்ளட்டும்" இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உமர்(ரழி) அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி
ஜமாஅத்தின் (கூட்டமைப்பின்) அவசியத்தை நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதை மேற்காணும் ஹதீஸ்கள் மூலம் அறியமுடிகிறது. மேலும் கூட்டமைப்புகள் செயல்படும் முறைக்கு உதாரணமாக பல ஊர்களில் ஜமாஅத் கட்டுப்பாடு என்று அமைத்து பல காரியங்களை ஒற்றுமையுடன் செயல்படுத்தி வருகிறார்கள். இதுபோ, நாடு முழுவதும் ஒரே ஜமாஅத்தை முன்னிலைப்படுத்தி ஒரே கருத்தான குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படுத்திட முன்வரலாம். பிரிந்து இருக்கும் பல அமைப்புகளை ஒன்றுபட அழைக்க முயற்சிக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் ஒரே அமைப்பாக செயல்பட முடியும், ஒரே அமீரின் கீழ் செயல்பட முடியும் என்று கூறுவது சரியல்ல.
ஒன்றுபட்டால் ஆட்சி அதிகாரம் நம்மைத்தேடி நிச்சயம் வரும் என்று நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அல்லாஹ் நாடினால் நிச்சயம் நடக்கும். இதை விடுத்து பல குழுக்களாக செயல்படலாம் என முடிவெடுத்து செயல்பட நினைப்பவர்கள் திருமறையின் 3:103, 3:105 வசனங்களுக்கு அவர்களே பதில் கூறட்டும்!
மண்டபம் M.அப்துல் காதிர்