video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

சுதந்திர தின சிறப்புக் கட்டுரை இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர் களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)

ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந் தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர் கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்த வர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர் களுக்கு வழங்குகிறோம்.

குஞ்சாலி மரைக்காயர்கள்

போர்ச்சுகீசியர்கள்தான் முதன் முதலில் இந்தியாவை நோக்கி படை யெடுத்தவர்கள். அவர்கள் கேரளாவின் கடலோரப் பகுதிகளை கடற்படையுடன் முற்றுகையிட்ட போது, கேரளாவின் பகுதிகளை ஆட்சி செய்து வந்த குஞ்சாலி மரைக்காயர்கள்தான் அவர்களை படு தோல்வி அடையச் செய்தனர். முதலாம் குஞ்சாலி மரைக்காயர், இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என தலைமுறை யாக தொடர்ந்த முதல் விடுதலைப் போரில் அனைவரும் தங்கள் இன்னுயிர் களை நீத்தனர். 16ஆம் நூற்றாண்டி லேயே விடுதலை தீபத்தை ஏற்றிவைத்து முதலில் உயிர்த்தியாகத்தை அர்ப்பணம் செய்தவர்கள் இவர்களே.


சிராஜுத் தௌலா

17ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிளாசி என்ற இடத்தில் கடும் போர் நடத்தி ஆங்கிலேயர்களை திணறடித்தவர் சிராஜுத் தௌலா. சூழ்ச்சிகள் மூலம் துரோகிகளின் துணையுடன் சிராஜுத் தௌலா கைது செய்யப்பட்டார். அவரைப் பணியவைக்க ஆங்கிலேயர் கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அந்த மாவீரனை கல்கத்தா துறைமுகத் தில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.

மருதநாயகம்

பிரெஞ்சுக்காரர்கள் படையில் சாதாரண வீரனாக இருந்து தம் திறமைகளால் படைத் தளபதியானவர் மருதநாயகம். இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட யூசுப்கான் என்ற அடையாளத் துடன் பின்னாளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார். நவீன ஆயுதங்களுடன் கூடிய ஆங்கிலப் படை மருதநாயகத்தின் வீரத்தின் முன் பலமுறை மண்டியிட்டது. அந்த மாவீரன் பிராமணன் ஒருவனின் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சியால் ஆங்கிலேயர் களால் கைது செய்யப்பட்டு 15.10.1764ல் தூக்கிலிடப்பட்டார். அவரது உடலை பல பாகங்களாக வெட்டி ஆங்கிலேயர்கள் பல்வேறு இடங்களில் புதைத்தனர். இறந்த பிறகும் அவரது உடலைக் கண்டு ஆங்கிலேய தளபதிகள் குலைநடுங்கிய தையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

ஹைதர் அலி


17ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் விடுதலை அதிர்வுகளை முதலில் தொடங்கியவர் ஹைதர் அலி அவர்கள்தான். அவர் நடத்திய விடுதலைப் போர் 'முதலாம் கர்நாடகப் போர்' என வர்ணிக்கப் படுகிறது. ஆங்கிலேயர்களை நாலா புறமும் திணறடித்த ஹைதர் அலி இறுதியில் கொல்லப்படுகிறார். அவர் வழியிலேயே அவர் மகன் திப்பு சுல்தான் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தினார்.

திப்பு சுல்தான்

'பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்' என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான். ஸ்ரீரங்கப் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா என தென்னிந்தி யாவின் சரிபாதி பகுதிகளை தன் சாம்ராஜ்யத்தில் இணைத்தார். இவர்தான் இந்தியாவில் மதுவிலக்கு கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தியவர். உலக ஏவுகணை தொழில்நுட்பத்தின் முன்னோடி என அப்துல் கலாம் போன்றவர்களே வியந்து போற்றும் விஞ்ஞானி. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தனது அரண் மனையில் பிரம்மாண்ட நூலகத்தை வைத்திருந்த ஒரே மன்னனும் திப்பு சுல்தான் தான்.

ஆங்கிலேயர்களை வீழ்த்த அவர் களின் படைகளை ஐரோப்பாவில் குலைநடுங்கச் செய்த பிரெஞ்ச் மன்னர் நெப்போலியனுடனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்த ராஜதந்திரியும் கூட. இந்துக்களின் உரிமைகளைப் பெரிதும் மதித்த பண்பாளர். இவரது வீர வாள் சுழலும் போதெல்லாம் ஆங்கி லேயர்களின் துப்பாக்கிகள் வீழ்ந்தன. இவரது குதிரைப் படைகள் முன்னேறும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் பின்வாங்கின. இறுதியில் காட்டிக் கொடுக்கும் துரோகிகளால் திப்பு கொல்லப்பட்டார். ஆனால் வரலாற்றில் இன்றும் எழுந்து நிற்கிறார் தியாகியாக! அவர் 4.5.1799 அன்று கொல்லப்பட்டார்.

திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட னர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806லிஆம் ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார் கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.

இரண்டாம் பகதூர்ஷா

1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கி லேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கி ணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்த னர். இறுதியில் புரட்சி ஒடுக்கப்பட்டு மன்னர் பகதூர்ஷா நாடு கடத்தப்பட்டார். பர்மாவின் ரங்கூன் சிறையில் மனைவி ஜீனத் மஹலுடன் அடைக்கப்பட்டு உயிர் துறந்தார். நேதாஜி அவர்கள் பர்மா வந்ததும், பேரரசர் பகதூர்ஷாவின் கல்லறைக்குச் சென்று தன் அன்பை வெளிப்படுத்தினார். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் பர்மா சென்றபோது இவரது கல்லறைக்கு சென்று தன் மரியாதையை வெளிப்படுத்தினார். பாபரில் தொடங்கிய முகலாய பேரரசு இரண்டாம் பகதூர்ஷாவுடன் நிறைவுற்றது.

ஜான்சி ராணி லெட்சுமிபாய்

ஜான்சி ராணி லெட்சுமிபாய் விடுதலைப் போரில் பங்கெடுத்தார். இன்றைய உ.பி. மற்றும் ம.பி. மாநிலங் களின் சில பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது. இவரது படைத் தளபதி காஸாகான் என்பவர்தான் ஆங்கிலேயர்களை வீழ்த்தி கோட்டை யைக் கைப்பற்றி னார். ஜான்சி ராணியை ஆங்கிலேய தளபதி கேப்டன் கென் என்பவன் கொல்ல முயன்றபோது, அவனை வீழ்த்தி ஜான்சி ராணியைக் காப்பாற்றியவர் பக்ஷீஸ் அலி என்பவரா வார். ஜான்சி ராணியை ஆங்கிலேயர்கள் தாக்கியபோது, அவர்களுக்கு கடும் தோல்வியைக் கொடுத்து தன்னுயிரை ஈத்தவர் குலாம் கவுஸ்கான் என்பவ ராவார்.

முதல் இந்திய இடைக்கால அரசு

1915ல் ஆப்கானிஸ்தானில் ஆங்கி லேயப் படையை முஸ்லிம்கள் தோற் கடித்தனர். ஆப்கானிஸ்தானில் இந்தியா வுக்கு வெளியே இந்தியாவுக்கான முதல் இந்திய சுதந்திர அரசை தற்காலிகமாக அமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான். முதல் பிரதமராக இருந்தவர் பரக்கத்துல் லாஹ், உள்துறை அமைச்ச ராக இருந்தவர் உபைதுல்லாஹ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்ருதீன் தையாப்ஜி

இந்தியாவின் இன்றைய மூவர்ணக் கொடியை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம். அவர் பெயர் பத்ருதீன் தையாப்ஜி. இவர் 1902ல் பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர்தான் ஆர்எஸ்எஸ்காரர்கள் மதிக்கும் பால கங்காதர திலகரை விடுதலை செய்தவர். இவரது மனைவி பீபி ரஹ்மத்லிஉன்லிநபா என்பவர் இந்திய தேசிய மகளிர் சங்கத்தை உருவாக்கினார். இதுதான் இந்தியாவில் உருவான முதல் மகளிர் மேம்பாட்டுக்கான அமைப்பாகும். பத்ருதீன் தயாப்ஜியை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஒரு தெருக் கோடிக்கு கூட அவர் பெயர் சூட்டப்பட வில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

காங்கிரஸில் முஸ்லிம்கள்

காங்கிரஸின் முதல் தலைவராக சைமன் என்ற ஆங்கிலேயர் இருந்தார். ஆங்கிலேயர்களில் சில நல்லவர்கள் தான் காங்கிரஸ் கட்சியைத் துவக்கினார். இரண்டாவது தலைவராக ரஹ்மத்துல் லாஹ் சயானி என்பவரும், மூன்றாவது தலைவராக பத்ருதீன் தையாப்ஜியும் பணியாற்றினார்கள். அப்போது காந்தி இந்தியாவுக்கே வரவில்லை, அவர் அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி 1915லில்தான் இந்தியாவுக்கு வருகை தந்தார். 1915ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மௌலானா முகம்மது அலி தேர்ந் தெடுக்கப்பட்டார். 1930ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் அவர்தான் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.

1935ல் காங்கிரஸின் தலைவராக அபுல்கலாம் ஆசாத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தனது 'அல்லிஹிலால்' என்ற இதழ் மூலம் முஸ்லிம்களிடம் விடுதலைத் தீயை மூட்டினார். முஹம்மது அலி ஜின்னாவும் ஒருமுறை காங்கிரஸ் தலைவராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் பெண்கள்

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரண்டாம் பகதூர்ஷா ஜாபரின் மனைவி ஜீனத் மஹல், திப்பு வின் குடும்பப் பெண்கள். பேகம் ஹஜ்ரத் மஹல், அலி சகோதரர்களின் தாயார் பீபியம்மாள் எனப்படும் ஸாஹிபா பானு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.





அலி சகோதரர்கள்

கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழை யாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஸாஸியா பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர். என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர் களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலை யானால், அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபியம்மாள்! அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கி களாக வீரத்தோடு களமாடினார்கள். இந்த வீரத்தாய் பீபியம்மாள்தான் காந்திஜிக்கு கதர் ஆடையைப் போர்த்தி கண்ணியப் படுத்தினார். (கதர் என்ற அரபுச் சொல்லுக்கு கண்ணியம் என்று அர்த்தம்). பின்னர் காந்தியால் கதர் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்றுவரை நீடிக்கிறது.

பகத்சிங்

மாவீரன் பகத்சிங்கிற்கு, காந்தி போன்றோர் 'தண்டனை தரவேண்டும்' என போலிக் கொள்கை பேசியபோது, பகத்சிங்கின் தூக்குத் தண்ட னையை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர் கள் வாதாடினர். அதில் முக்கியமானவர் வழக்கறிஞர் ஆசிப் அலி என்பவராவார். இவரை ஆங்கில அரசு பல்வேறு காலக்கட்டங்களில் 13 ஆண்டுகள் சிறையில் அடைத்தது.

மதரஸாக்களின் சுதந்திர வேட்கை

சுதேசி இயக்கம் நடந்தபோது அந்நியப் பொருட்களை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். கதர் ஆடைகளையே அணிந்தனர். கதர் ஆடை உடுத்திய மணமக்களின் திருமணங்களுக்கு மட்டுமே முஸ்லிம் தலைவர்கள் வருகை தந்தனர். முஸ்லிம்கள் ஆங்கிலேய தயாரிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி னர். வேலூரில் மவ்லவி கலீலுர் ரஹ்மான் தலைமையில் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸா வளாகத்தில் அந்நிய துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மதரஸாக் களிலும் சுதந்திர வேட்கை வீறிட்டு பரவியது.

முஸ்லிம் வள்ளல்கள்

இதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.2 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார். கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர். வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912ல் வறுமையில் வாடியபோது அவருக்கு உதவிகளை செய்து மகிழ்ந்த வர் அகமது மீரான் என்பவராவார். வ.உ.சி.யின் விடுதலைக்காக வாதாடிய ஒருவரும் முஸ்லிம் வழக்கறிஞர்.

ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லிம்கள்

காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோது நாடெங்கும் முஸ்லிம்கள் களத்தில் குதித்தனர். 1920ல் காயிதே மில்லத் போன்றோர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தனர். ஆங்கிலக் கல்விக்கூடங்களுக்கு தங்கள் பிள்ளை களை அனுப்பாமல் ''ஆங்கிலம் படிப்பது ஹராம்'' என அறிஞர்கள் ஃபத்வா வழங்கினர்.

ஜாலியன் வாலாபாக்

இன்றைய தடா, பொடா சட்டத்திற்கு முன்னோடியான ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. அப்போது பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. அந்த மைதானத்தில் ஒருவழிப் பாதை மட்டுமே உண்டு. அங்கே நுழைந்த ஜெனரல் டயர் என்ற ஆங்கி லேய தளபதியின் தலைமையிலான படை சுற்றி வளைத்து 1650 தோட்டாக் களை சரமாரியாகப் பாய்ச்சியது. அதில் சுமார் 1000 பேர் இறந்ததாக விசாரணைக் கமிஷன் கூறியது. அதில் சரிபாதிக்கும் மேலானோர் முஸ்லிம்கள் என்பதை அங்கிருக்கும் கல்லறைகள் சாட்சியாக கூறிக் கொண்டிருக்கின்றன.

வள்ளல் ஜமால் முஹம்மது

காந்தி அவர்கள் தமிழகம் வருகை தந்து விடுதலைப் போராட்டத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரத் திற்கும் நிதி சேர்க்க முயன்றார். அப்போது வெற்றுக் காசோலையை காந்தியிடம் கொடுத்து நீங்கள் விரும்பும் தொகையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என காந்திக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தவர் ஜமால் முஹம்மது. அவரது பெயரால் தான் இன்று திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி விளங்குகிறது.

காந்தியின் கதர் துணி பிரச்சாரத்திற்கு வலுவூட்ட காஜா மியான் ராவுத்தர் 50 ஆயிரம் ரூபாயில் கதர் நெசவு ஆலையை நிறுவினார். அவரது பெயர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்குள் இருக்கும் விடுதிக்கு சூட்டப்பட்டிருக்கிறது.

கேரள மாப்பிள்ளைமார்கள்

1921ல் கேரளாவில் மாப்பிள்ளை மார்கள் நடத்திய போராட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல். அந்தப் புரட்சியால் ஆங்கிலேயப் படைகள் சிதறி தெறித்து புறமுதுகிட்டனர். அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டு மாப்பிள்ளைமார்களில் பலர் கைது செய்யப்பட்டனர். ஏராளமானோர் சன்னல்கள் இல்லாத கூட்ஸ் ரயிலில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப் பட்டனர். கோவை ரயில் நிலையம் வந்ததும், கூட்ஸ் வண்டி திறக்கப்பட்டது. அதில் மூச்சுத் திணறி 65 முஸ்லிம் வீரர்கள் தம் இன்னுயிர் நீத்தனர். அவர்களது ஜனாஸாக்கள் கோவை ரயில் நிலையம் அருகில் புதைக்கப்பட்டன. இப்போதும் கோவை ரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தால் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கும். அங்கிருக்கும் அம்மண்ணறைகள் ஒன்றும் அவர்களின் தியாகத்தை சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றன.

தொகுப்பு: எம். தமிமுன் அன்சாரி, ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ்

Posted by இப்னு அப்துல் ரஜாக் on 8/15/2008 11:53:00 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for சுதந்திர தின சிறப்புக் கட்டுரை இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery