வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா? பாகம் 2
வெளிநாடு சென்றால் வளம் பெறலாம் என்று பலர் நினைத்தனர். ஆனால் இங்கு நடக்கும் கதையே வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.
அதிகமான செல்வமும் வசதியான வாழ்வும் கிடைக்கிறது என்று நினைத்து வெளிநாட்டிற்கு வந்த நம் சமுதாய உள்ளங்கள், இப்போது 'எப்படி இங்கிருந்து போவது?' என்று வருத்தப்படுகிறார்கள் என்று சொல்வதைவிட மிகவும் வேதனைப் படுகிறார்கள் என்றே சொல்லலாம்.
வீட்டை விட்டும் தாய் நாட்டை விட்டும் பறந்து வந்த பறவைகள், பாசத்தைத் தாயக விமான நிலையத்திலேயே விட்டு விட்டு வருகிறார்கள்.ஊரில் இருப்பவர்கள், நம்மை பலமாக எண்ணுகின்றனர். அவர்கள் நலமாக இருப்பதற்காக வேண்டி நாம் இங்கு பலவீனமாகப் போய்க்கொண்டு இருக்கிறோம்.
வெளிநாட்டில் இருக்கும் போது நாம் பல நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாலும் நம்முடைய நினைவோ ஊரில் உள்ள கட்டிய மனைவி, நோய்வாய்ப்பட்ட தாய்-தந்தை, திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் அக்கா-தங்கைகள் ஆகியோருக்காக நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நினைப்புடன்தான் இருப்போம்.
நம்முடைய உடல் இங்கு இருக்கும் ஆனால் உள்ளமோ விமானப் பயணச்சீட்டு இல்லாமலே அடிக்கடி தாயகம் போய் வரும். இப்படியே நினைத்து நினைத்து பலர் நிம்மதி இழந்து, மன வேதனை, மனத் துயர் படுகிறார்கள். மன நிம்மதியற்ற வாழ்க்கையானது பல ஆண்டுகளாக நீளும் பட்சத்தில் நம்முடைய உடலில் பல நோய்கள் வர அதுவே காரணமாக இருக்கும்.
தம்முடைய உடலில் என்ன நோய் உள்ளது என்று தெரியாமலேயே வெளிநாட்டில் வாழ்நாளைக் கழிப்பவர்கள் பலர். விடுமுறைக்குத் தாயகம் சென்றால் சாதாரணமாகச் சளிப்பிடித்து இருக்கும். அங்குள்ள மருத்துவரிடம் போய் காட்டினால் அவர், "ஊருப்பட்ட நோய் உங்களுக்கு உள்ளது" என்று கூறி ஒரு நீண்ட மருந்து பட்டியலைத் தருவார்.
அங்கு இருக்கும் போது வழக்கமாக சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். மீண்டும் வெளிநாட்டிற்கு திரும்பிய பிறகு தாயகத்திற்குத் தொலைபேசி செய்து, "எனக்குத் தெரிந்த ஒரு ஆள் ஊருக்கு வரார் அவர் இங்குத் திரும்ப வரும்போது அந்த மருந்தினைக் கொடுத்து விடவும் இந்த மருந்தினைக் கொடுத்து விடவும்" என்று அடிக்கடி போனில் சொல்வார்கள்.
விடுமுறை காலம் முடிந்து வெளிநாட்டிற்கு வந்தால் அந்த மருந்து ஒரு சில பேர்களுக்கு இங்கு ஒத்து வராது. திரும்பவும் இங்குள்ள மருத்துவரிடம் காட்டுவார்கள். அவரும் மருந்துக்களை எழுதித் தருவார். அதனையும் சாப்பிடுவோம். இரண்டு மருந்தும் சேர்ந்து புதிய நோயினை நமக்குத் தரும்.
மன வேதனை மனக்கஷ்டம் ஏற்பட ஏற்பட சர்க்கரை வியாதியும் சேர்ந்தே வரும்.
வெளிநாட்டில் உள்ள நமது சகோதரர்கள் பற்பல நோய்களுக்கு அடிமைப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு இங்கு உள்ள உணவுப் பழக்க வழக்கங்களை முக்கியமாகக் காரணமாகக் கூறலாம். இங்கு எல்லாமே ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையாக மாறிவிட்டது. முன்பெல்லாம் இட்லி, வடை, தோசை, இடியாப்பம், புரோட்டா ஆகியவை இயற்கையான முறையில் நமக்குக் கிடைத்துக்கொண்டு இருந்தன. ஆனால் வெளிநாட்டில் இவையெல்லாம் தற்போது ரெடிமெட் உணவாகவும் ஃபாஸ்ட் ஃபுட்டாகவும் மாறி விட்டது. இவற்றினைச் சாப்பிடும்போது அந்த நேரத்திற்கு கொஞ்சம் ருசியாக இருக்கும். ஆனால் அதுவே பின்னர் நமக்கு நோய்கள் வரக் காரணமாக அமைந்து விடும்.
விடுமுறை நாட்களில், நண்பர்களைச் சந்திக்கச் சென்றால் தடாபுடலாக கோழி பிரியாணி வைப்பார்கள். எவ்வளவுதான் அவர்கள் மசாலாவைக் கணக்காகப் போட்டாலும் உணவு ருசியாக இருக்காது. "என்ன மாப்ளே, பிரியாணி நல்லவே இல்லை" என்று சாப்பிடும் நண்பர்கள் சொல்வார்கள். அதற்குக் காரணம், எப்போது அறுக்கப்பட்டது என்றே தெரியாத கோழியினை கடையில் வாங்கி பிரியாணி சமைப்பார்கள். தயாரிப்புத் தேதியும் முடியும் தேதியும் அழகாக அந்த கவரில் அச்சு அடித்து இருப்பார்கள். ஆனால் அதில் ருசி எங்குப் போனது என்பது யாருக்கும் தெரியாது.
பல காய்கறிகள் பல நாடுகளிலிருந்துதான் வருகின்றன என்பது நமக்குத் தெரிந்த உண்மைதான். அப்படியே இங்கு ஏதேனும் காய்கறிகள் விளைத்தாலும் அதற்கு அதிகமாக உரங்களை போட்டு பெருக்க அடித்து விடுவார்கள். உதாரணத்திற்கு இங்கு உள்ள கத்தரிக்காயினைப் பார்த்தாலோ மூட்டைகோஸைப் பார்த்தாலோ நம்ம ஊரில் உள்ள பலாப்பழம் தான் ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் அதிகப்படியான உரங்கள் போட்டதால் பெருத்து விடுகின்றன.
நாம் சமையல் செய்யும் போது அதிகமாக உப்பு போட வேண்டியதில்லை (வெளிநாடு வாழ் சகோதரர்கள் உப்பினை அதிகம் சாப்பிட மாட்டார்கள் என்பது தனி விஷயம்) எல்லாமே அதிலேயே இருக்கும். செயற்கை உரமிட்டுப் பருக்க வைத்தவற்றைச் சாப்பிடும் போது நம்முடைய உடல் நலம் என்ன ஆகும்? சில உடல் உபாதைகளைப் பெறத்தான் செய்யும்.
விடுமுறை நாட்களில் சந்தோஷமாகக் குடும்பத்தினருடன் பேச வேண்டும் என்று ஆவலோடு தொலைபேசினால் அங்கிருந்து வரும் பதில் "ஏன் இன்னும் பணம் அனுப்பவில்லை?" என்று தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் கட்டிய மனைவி ஒரு பக்கம் புலம்புவார்கள் அப்போது நம்முடைய மனம் எண்ணும் 'பள்ளிக்கூடம் போகும் வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும்போது வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம் நெஞ்சங்களில்.
படிக்க வேண்டிய வயதில் படிப்பைத் தவிர அனைத்திலும் ஆர்வம் கொண்டு அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால் பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை கத்தரி வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம். கண்காணாத் தொலைவில் இருப்பதால் நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள்.
வாழ்க்கைப் பயணத்தின் பாதியை பாலைவனங்களில் முடிந்துக்கொண்டோம். மூட்டைப்பூச்சிகளுடன் இங்கு வாழும் நாங்கள் ஊருக்கு செல்லும் போது மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் செல்கிறோம் - குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த. என்ன வாழ்க்கை இது?
அணையாமல் இருக்கும் அணையா விளக்கும் ஒருநாள் அணையும். ஆனால் நாங்கள் இந்த அக்கினியில் அணையாமல் காலைப் பட்டினியால் தினம் தினம் சாகின்றோம். ஏனெனில் வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசரம் காலையில் சாப்பிட்டால் வேலைக்குச் செல்வதற்குரிய பேருந்து போய் விடும். வண்டியின் ஓட்டுனர் நம்மைத் திட்டிக்கொண்டே ஒலியினை எழுப்புவான். உடனே செல்ல வேண்டும். இல்லையென்றால் சூப்பர்வைசர் திட்டுவான். அப்படி இல்லையென்றால் ஃபோர்மேன் திட்டுவான் இதே புலம்பல்தான் தினந்தோறும்.
குறிஞ்சி மலரானது பூக்கும்போது, அந்த இடமானது வசந்தமாக காட்சி தரும். அதுபோல் எங்களுக்கு ஒரு வசந்தம் பல வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்காகத் தாய் நாடு சென்றால் மட்டும். வாலிபங்கள் துள்ளும் வயதில் வசந்தத்தினைக் காணாமல் வானுயர்ந்த கட்டடங்களை காணுகிறோம். நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் கண்ணாடி மாளிகைகள் உடைந்து போன கண்ணாடி சில்களாய் கனவுகள் எங்கள் காலடியில்.
பாலைவனத்தில் மிக வேகமாக ஓடும் ஒட்டகம், அதிகச் சுமையின்றி நிதானமாக நிமிர்ந்து நடக்கிறது. சுமைகளை இறக்கி வைக்க முடியாமல் சுமந்துக்கொண்டு கூன் விழுந்து நடக்கிறோம் நாங்கள்.
கனவுகளும் கற்பனைகளும் சேர்ந்த கானல் நீர் வாழ்க்கைதான் எங்கள் வாழ்க்கை. உயர்ந்த கோபுரக் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு எந்நாளும் உழைக்கின்றோம் நடைப்பிணமாக வாழ்க்கைப்பயணம் வசந்தமாக மாறுமா! எண்ணங்கள் மட்டும் மனதில்.
என்ன கொடுமை? உறவுகளின் தூரம் அதிகமாகப் போய் விட்டதால் தொலைபேசியிலேயே பாதி வாழ்க்கையாகவும் பாதி சம்பளமுமாகவும் போய் கொண்டு இருக்கிறது எங்களுக்கு.
சாபமா வரமா தெரியாது. கேள்விகளும் ஆச்சரியங்களும் என்றும் முற்று பெறாது தொடரும்