பாவங்களும் அதைப்போக்கும் பரிகாரங்களும்.
பொதுவாக மனித சமூகத்தில் பெரும்பாலும் தனக்கு அல்லது பிறருக்குச் செய்யும் செயல்களில் பாவங்கள் கலந்து காணப்படுகின்றன. பாவங்களைச் செய்யும் மனிதன் தன் பாவங்களை உணரும் போது தன்னைப் படைத்தவன் அப்பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். சில வேளையில் பரிகாரங்கள் செய்து தனது பாவங்களைப் போக்கி படைத்தவனின் மன்னிப்பைப் பெற எண்ணுகின்றான். பரிகாரங்கள் என்ற பெயரிலும் பாவங்களைத்தான் செய்கின்றான்.
பாவங்களைப் போக்கி மன்னிப்பு வழங்கும் விசயத்தில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு பல நற்செயல்களைக் கற்றுத்தந்துள்ளது. அந்நற்செயல்களை முறைப்படி செய்தால் பாவங்கள் அழிக்கப்பட்டு மன்னிக்கப்படுகின்றன.
இஸ்லாமில் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் போக்கப்படுவதற்கும் ஒரே இறைவனை அவனுக்கு இணை, துணையற்ற நிலையில் நம்பிக்கை கொள்வது முக்கிய அடிப்படையாகும். இக்கொள்கை விசயத்தில் மாறுசெய்தால் ஒரு முஸ்லிமின் எந்தப் பாவமும் மன்னிக்கப்படமாட்டாது. எனவே பாவமன்னிப்பின் முதல் நற்செயலாக கலப்பற்ற (ஈமான்) இறைநம்பிக்கைதான் இடம் பிடித்துள்ளது.
அல்லாஹ் எச்சரித்து வாக்களிக்கிறான்:
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்) தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (4:48)
மேலும், அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் நல்லறங்கள் அழிந்து நட்டமடைந்தவர் பட்டியலில் சேர்ப்பேன் என்றும் கூறுகிறான்.
அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்துவிட்டிருக்கும். (6:88)
(நபியே) நீர் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்தாலும் உமது நல்லறம் அழிந்து, நீர் நட்டமடைந்தவராவீர். (39:85)
நல்லறங்களும் பாவமன்னிப்பும்:
உண்மையான முஸ்லிமைப் பொறுத்தவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த முறைப்படி நல்லறங்கள் செய்து கொண்டிருந்தால் அவர்கள் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்படும். அத்துடன் அந்நல்லறங்கள் தொடரும் போது அவர்களிடம் இருக்கின்ற பாவங்கள் பெரும்பாலும் அழிந்துவிடும். பெரும் பாவங்களான இணைவைத்தல், மூமினைக் கொலை செய்தல், வட்டி போன்ற பெரும் பாவங்களை விட்டொழித்து நல்லறங்கள் அதிக அதிகமாகச் செய்யும்போது அவர்களிடம் உள்ள சிறு சிறு பாவங்களும் தவறுகளும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். அத்துடன் நல்லறங்களுக்கான கூலியும் வழங்கப்படும்.(சில நாட்கள் நம்பிடையே இருந்த பலர் நம்மிடை இல்லை.சகோ.அபூபக்கரும் நேற்று இறந்துவிடார். ஆனால் அபூபக்கர் ஹஜ் காலங்களில்,நமதூர் மக்களுக்கு மட்டுமின்றி தமிழகத்திலிருந்து வரும் அனைத்து ஹாஜிமார்களுக்கும் அவர்கள் பணிவிடை செய்து,அவர்களின் அன்பையும்,துவாவையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் அவர் அளவிடாத நன்மை பெற்று மறைந்துவிட்டார்,இதுபோல் பல நல்லவர்களும் நன்மை சம்பாத்தித்து மரணமுற்றவர்கள்.ஆனால் நாம்?வல்ல அல்லாஹ் நம்மையும் நல்லவர்கள் கூட்டத்தில் சேர்த்து நற்காரியம் செய்யவும், நல்ல மொவுத்தை தர அருள்பாலிப்பானாக.ஆமீன்).
-முஹம்மது தஸ்தகீர்.