video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

நேரம் பொன்னைவிட மேலானது.

காலண்டரில் ஒரு தாளைக்கிழித்தால் ஒரு தாளை மட்டும் கிழிக்கவில்லை, உனது ஆயுளில் ஒரு நாளையும் கிழித்து விடுகிறாய். உனது வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து விட்டது என்று பொருள். உனது மரணம் நெருங்கி வந்துவிட்டது என்று விளங்க வேண்டும்.
ஒரேயொரு நொடி நேரத்தில் உலகில் எத்தனையோ பல லட்சம் சம்பவங்கள் நிகழ்கின்றன. பல்லாயிரக்காணக்கான குழந்தைகள் பிறக்கின்றன, பல்லாயிரக்காணக்கானோர் மரணமடைகின்றனர். ஒரு நொடி நேரத்தின் முக்கியத்துவம் பற்றி நீங்கள் அறிய வேண்டுமா? நீங்கள் ரயிலையோ, பேருந்தையோ, விமானத்தையோ தவறவிட்டு அரை நிமிடத்திற்கு பின்னர் அந்த இடத்தில் நீங்கள் போய்ச்சேர்ந்தால் அப்போது புரியும், அந்த ஒரு நிமிட நேரத்தின் முக்கியத்துவம்.ஒரு நொடி தான், இல்லையெனில் நான் அந்த விபத்தில் சிக்கியிருப்பேன் என்று விபத்தில் தப்பிப் பிழைத்தவர் அந்த நொடியின் மகத்துவத்தைச் சொல்வார்.நேரம் யாருக்காகவும் காத்திருக்காது, பறந்து போய்விடும். பின்னர் அது வரவே வராது.‘Time is Gold’ ‘நேரம் பொன் போன்றது’ என்று சொல்கின்றார்களே தவிர அதை வீணாக கழிக்கின்றனர் பெரும்பாலான மக்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் என்னென்ன வேலைகளைச் செய்தோம் என்பதனை மிகத் துல்லியமாக மிகச் சரியாக பத்து நாட்களுக்கு எழுதி வைத்துப்பார்த்தால் நாம் எவ்வளவு நேரங்களை வீணாகக் கழித்தோம். எவ்வளவு நேரம் அரட்டை அடித்தோம் எவ்வளவு நேரம் டிவி பார்ப்பதில் கழிந்தது எனக் தெரியவரும். நேரம் பொன் போன்றது என்றால் அதை பாதுகாக்க வேண்டுமல்லவா? அதை வீணாகக் கழிக்கக் கூடாதல்லவா?தங்கம், பணம், காசுகள் போன்ற கண்ணிற்குத் தெரியும் செல்வத்துக்கு கணக்குப் பார்க்கும் பலர் கண்ணுக்குத் தெரியாத இறை அருட்கொடையாகிய நேரத்துக்கு கணக்குப் பார்ப்பதே இல்லை. வீணாக கழித்து விடுகின்றனர்.
நேரம் என்பது நமது வாழ்க்கை ஆகும். வாழ்க்கை தான் நேரம் ஆகும். நேரம் சென்று விட்டால் நமது வாழ்க்கை சென்று விடுகிறது எனப் பொருள் என்பதை பலர் உணர்வதேயில்லை. அதனால் தான் வீணாக நேரத்தை கழிக்கின்றனர்
குறிப்பாக ஒரு முஸ்லிம் நேரத்தை மிகப் மிகப் பேணுதலாகச் செலவழிக்க வேண்டும். நேரத்தின் முக்கியத்துவத்தை அல்லாஹ் குறிப்பிடும் பல வசனங்களை அல்குர்ஆனில் காணலாம். நேரத்தின் பல பகுதிகளைக் குறிப்பிட்டு அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறி நேரத்தின் அருமையைப் புரிய வைக்கின்றான். காலத்தின் மீது சத்தியமாக என்று ஆரம்பமாகும்
103 வது அத்தியாயம். முற்பகல் மீது சத்தியமாக! இருண்ட இரவின் மீதும் சத்தியமாக (அல்குர்ஆன் 93:1-2)இரவின் மீதும் சத்தியமாக! பகலின் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 92:1-2)

விடியற்காலையின் மீது சத்தியமா! பத்து இரவுகளின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 89:1-2)
மறுமை நாளைக் கொண்டு நான் சத்தியம் செய்கின்றேன் (அல்குர்ஆன் 75:1)
நேரம் அல்லாஹ் தந்த அருட்கொடை அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் அதற்கு நன்றி செலுத்துதல் என்பது அதை நல்வழிகளில் பயன்படுத்துவதாகும்.
அல்லாஹ்-வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், மறுமை நாளில் நான்கு கேள்விகளுக்கு பதில் கூறாமல் ஒரு அடியானின் கால் பாதங்கள் (ஓரடி கூட) நகர முடியாது
1. அவன் தனது ஆயுளை எப்படிக் கழித்தான்?
2. அவன் கற்ற கல்வியினால் என்ன செய்தான்?
3. அவன் செல்வத்தை எப்படிச் சேர்த்தான்?
4. அவனது உடலை எப்படி பயன் படுத்தினான்?
ஆகியவை அந்த நான்கு கேள்விகள் ஆகும். (திர்மிதி ஹ. எண். 2417)

இந்த நபிமொழியை நன்கு சிந்தித்துப் பாருங்கள். அவன் தனக்கு வழங்கப்பட்ட ஆயுளை எப்படிக் கழித்தான்? என்று பதில் சொல்ல வேண்டும். பயனுள்ள வழியில் கழித்தாயா? அல்லது வீணாக டிவி விளையாட்டு, கேளிக்கை போன்றவற்றிலும் தீய வழிகளிலும் கழித்தாயா? என்று நேரம், காலத்திற்க்குக் கூட பதில் சொல்லியாக வேண்டும் என்றால் நாம் நமது நேரத்தை எப்படிப் பயனுள்ள வழிகளில் கழிக்க வேண்டுமென்று இன்றே இப்போதே திட்டமிட வேண்டும்.

நபி (ஸல்) கூறினார்கள், ‘மனிதர்களில் அதிமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் ஏமாற்றப்பட்டு இழப்புக்குள்ளாகி விடுகின்றனர் 1. ஆரோக்கியம் 2. ஓய்வு (புஹாரி)

ஓய்வு நேரத்தையும் பயனுள்ள வழிகளில் பயன்படுத்த வேண்டும். ஓய்வு என்று கூறிக்கொண்ட இரவில் அதிக நேரம் கண் விழிப்பதும் தொலைக்காட்சியில் மூழ்குதலும் உடலுக்கு மிக் பெரும் தீங்காகும்.

மேலும் உங்களுக்கு உறக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம், மேலும் இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 78:9-10)

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்கு முன்பு தூங்குவதையும் இஷா தொழுத பின்பு (வீணாகப்) பேசிக் கொண்டிருப்பதையும் வெறுத்திருக்கிறார்கள் (புஹாரி, முஸ்லிம்)

இந்த நபி மொழியிலிருந்து இஷாவுக்குப் பின் அவசியமின்றி வீணான பேச்சுக்களில் ஈடுபடுதல் நல்லதல்ல என்று விளங்குகிறது. ஆனால் கல்வி, ஆராய்ச்சியில் ஈடுபடுதல், மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுதல், விருந்தினர்களுடன் அளவளாவுதல் போன்ற அவசியமான காரியங்களில் ஈடுபடுவது தவறில்லை என்ற விபரம் வேறு பல நபிமொழிகளில் இருந்து அறியப்படுகிறது.

ஒரு மனிதன் ஓய்வு நேரத்தை வீணாகக் கழித்து விட்டு இரவில் தூங்காமல் ஓய்வெடுக்காமல் இருந்தால் மறுநாள் பணிகளில் ஈடுபட முடியாது. கண் எரிச்சல் ஏற்படும், உடல் சமநிலையில் இருக்காது, உடல் சூடாகக் காணப்படும், எந்த வேலையும் செய்ய முடியாது.

சிலர் நேரத்தை திட்டுகின்றனர். எனக்கு காலம் சரியில்லை, என் நேரம் சரியில்லை என்றெல்லாம் கூறுகின்றன். ஸஃபர் பீடை மாதம் என்று கூறுகின்றனர். ஆடி மாதம் என்றால் மாற்றுமதத்தவர் எந்த நல்ல காரியத்திலும் ஈடுபடுவதில்லை. ஆனால் சில முஸ்லிம் நண்பர்கள் மாற்று மத சகோதரர்களை விடவும் மோசமானவர்கள். மாற்று மத சகோதரர்கள் ஆடி மாதத்தில் மட்டும் தான் எந்த நல்ல காரியமும் செய்வதில்லை. சில முஸ்லிம் நண்பர்களோ அவர்கள் நம்பிக்கைபடி ஆடி மாதத்திலும் நல்ல காரியம் செய்வதில்லை. ஸஃபர், முஹ்ரம் போன்ற மாதங்களிலும் நல்ல காரியத்தில் ஈடுபடுவதில்லை. ஆக இவர்கள் அவர்களை விடவும் மோசமானவர்கள் தானே?

மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள், ‘நமது இந்த வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை) கிடையாது, நாம் இறக்கிறோம், ஜீவிக்கிறோம். ”காலம் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பத்தில்லை” என்று கூறினார்கள். அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது. (அவர்கள்) இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதை தவிர வேறில்லை.’ (அல்குர்ஆன்: 45:24)

”காலத்தை திட்டுவதன் மூலமாக ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கிறான். நான் காலமாக இருக்கின்றேன். இரவு பகலை நானே மாறி மாறி வரச் செய்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: அபூதாவூத், நஸயீ, புஹாரி ஹதீஸ் எண் 7491)

அறியாமைக்கால அரபுகள் தமக்குத் தீமை நேர்ந்து விடும்போது காலத்தை ஏசினார்கள். அதைக்கண்டித்தே அல்லாஹ் மேற்கண்ட 45:24 வது வசனத்தில் குறிப்பிடுகிறான். இதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வையே ஏசுகின்றனர். அல்லாஹ் தான் நன்மை தீமைகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துபவன். காலம் அல்ல என்பதனை பல்வேறு வசனங்கள் உணர்த்துகின்றன (பார்க்க 7:168, 21:35)

எனவே காலத்தை ஏசாமல் அல்லாஹ்-விடம் பணிந்து தொழுது முறையிட்டால் அல்லாஹ் நமது கவலைகளை, கஷ்டங்களைப் போக்க வல்லவன்.

நமது நேரங்களை எப்படி பயனுள்ள வழிகளில் கழிக்கலாம்?

1. தனது செயல்பாடுகள் குறித்த கணக்கீடு செய்தல்:

ஒவ்வொரு மனிதனும் தான் என்னென்ன செயல்களைச் செய்திருக்கிறோம். அவை நமக்கு சமுதாயத்திற்கு, நமது மறுமை வாழ்வுக்கு நன்மை பயக்கும் செயலா? தீமை பயப்பதா என்று சிந்தனை செய்து தன்னைத்தானே மதிப்பீடு செய்ய வேண்டும்.

அவ்வாறு தினமும் தனது செயல்பாடுகளை மதிப்பிட்டு தீமைகளில், அல்லது பயனற்ற வழிகளில் வீணாக நேரத்தைக் கழித்திருந்தால் திருந்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

2. யார் நமது நேரங்களை பயனுள்ள வழிகளில் கழிக்கின்றார்களோ அவர்களுடன் நட்பு கொள்வது:

தமது நேரங்களைத் திட்டமிட்டு பயனுள்ள வழிகளில் கழிப்பவருடன் மட்டும் நட்புக் கொள்ள வேண்டும். தீமைகளில் ஈடுபடுவோரும், பயனற்ற வழிகளில் நேரத்தை கழிப்போருடன் நாம் சேரக்கூடாது. (பார்க்க: புஹாரி ஹதீஸ் எண்: 5534)

3. மரணத்தை நினைவு கூறல்:

காலம் கடந்து செல்லச் செல்ல நமது மரணம் நெருங்கி வருகிறது என்பது பொருள். மரணம் எப்போது வரும் என்பதை யாரும் அறியோம். எனவே நாம் நல்லறங்களை முற்படுத்தி மரணத்தை நினைவு கூறல் வேண்டும்.

4. பயனுள்ள கல்வி கற்பதில் ஈடுபடுதல்:

‘உங்களில் மிகச் சிறந்தவர் தானும் குர்ஆனைக் கற்று பிறருக்கும் குர்ஆனை கற்றுக்கொடுப்பவர் தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)

மனிதன் இறந்த பின்பும் பயன் தரும் சில நல்லறங்களை இஸ்லாம் கூறியுள்ளது.

மனிதன் இறந்து விட்டால் அவனது மூன்று செயல்கள் தவிர மற்றவை துண்டிக்கப்பட்டு விடும். அவையாவன:
i). நிலையான தர்மங்கள்
ii). பயன் தரும் கல்வி
iii). அவனுக்காகப் பிரார்த்தனை புரியும் நல்ல பிள்ளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் 1631, அபூதாவூத் 2880, திர்மிதி 1376 மற்றும் புஹாரி 6514)

5. இறை நினைவில் ஈடுபடுதல்:

இறைவன் அதிகமாகச் செய்யும்படிக் கூறும் காரியம் இறைநினைவு (திக்ர்) மட்டுமே.

இறைவிசுவாசிகளே! இறைவனை அதிகமதிகம் நினைவு கூறுங்கள் (அல்குர்ஆன்: 33:41)

இறைநினைவில் மிக முக்கியமானது தொழுகையாகும். அதை உரிய நேரத்தில் கூட்டமாக (ஜமா அத்தோடு) நிறைவேற்ற வேண்டும்.

6. உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல்:

கடமையான தொழுகைகள், நோன்புகள், ஜகாத் போன்ற கடமையான வழிபாடுகள் போக மேல் மிச்சமான உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் நேரத்தைப்ப பயனுள்ள வழிகளில் செலவிடலாம். (பார்க்க புஹாரி, ஹதீஸ் எண் 7405)

7. எந்த ஒரு நல்லறத்தையும் தள்ளிப்போடலாகாது:

நாளை பார்த்து கொள்ளலாம் நாளை செய்து கொள்ளலாம் என்ற எந்த ஒரு நல்ல காரியத்தையும் தள்ளிப்போடக்கூடாது. காரணம் மனிதனது முடிவு எப்போது என்பது யாருக்கும் தெரியாது (பார்க்க புஹாரி ஹதீஸ் எண்: 6416)

சில காரியங்களை அப்போதைக்கு அப்போதே செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் பின் தள்ளிப்போட்டால் பின்னர் பல வேலைகள் வந்து அந்த முக்கியமான காரியத்தை செய்ய முடியாது போய்விடும். பின்னர் நேரமில்லை என வருந்த வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு கார் உரிமையாளர் காரில் ஏதோ சப்தம் வருகிறது என்றால் உடனே அதைக் கவனிக்க வேண்டும். கார் தான் ஓடுகிறதே என்று அலட்சியமாக இருந்தால் 100 ரூபாய் செலவு செய்து பழுது நீங்கயிருந்த அந்த கோளாறு ஆயிரம் ரூபாய் செலவு வைத்து விடும்! பள்ளி மாணவன் அன்றாடம் படிக்க வேண்டிய பாடங்களை படிக்காமல் தேர்வுக்குத்தான் இன்னும் நாலைந்து மாதங்கள் உள்ளதே அப்போது படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டால் தேர்வு நெருங்கிவிட்ட போது எதைப் படிக்க இதைப் படிக்கவா அதைப்படிக்கவா என்று தவிக்க நேரிடும். வீட்டை அன்றாடம் கூட்டிப் பெருக்காமல் விட்டு விட்டால் வீடே குப்பைத் தொட்டியாகிவிடும்.

A Stitch in time saves nine. ஓட்டை சிறிதாக இருக்கும் போதே தைத்துவிட வேண்டும் இல்லையெனில் ஒன்பது தையல்கள் போட வேண்டி வரும் என்றொரு பழமொழி உண்டு. தக்க நேரத்தில் போட வேண்டிய தையல் பல தையல் போடுவதை விட்டும் பாதுகாக்கும் என்பது இதன் கருத்து. எனவே நாட்களை தள்ளிப்போடாமல் உடனடியாக காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும். ஏனெனில் வருங்காலம் தற்காலத்தை விட மோசமானதாக அமையும் என்பது கண்கூடு (பார்க்க புஹாரி ஹதீஸ் எண் 7068)

சிலர் எப்போது பார்த்தாலும் நான் ரொம்ப பிஸி என்றே கூறிக்கொண்டிருப்பார்கள். நன்றாக பார்த்தோமானால் ஒன்றுமே இருக்காது. உலகில் படைக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும், ஒரு வாரத்திற்கு 7 நாட்களும், மாதத்திற்கு 30 நாட்களும், வருடத்திற்கு 365 நாட்களும் சமமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறிருக்க நேரமே இல்லை என்று எப்படிச் சொல்கிறார்கள்? அதே நேரத்தில் மற்றவர்கள் நமது நேரத்தை பயன்படுத்தி எப்படி வெற்றி பெறுகிறார்கள் என இவர்கள் சிந்திப்பதில்லை.

சூரியன் சந்திரன் போன்ற கோள்கள் மிகச்சரியாக உதிக்கின்றன. மிகச் சரியாக மறைகின்றன. மனிதனுக்கு நேரம் மற்றும் காலம் காட்டும் கருவி அடுத்த வருடத்திற்கான அல்லது பல்லாண்டுகள் கழித்து குறிப்பிட்ட நாளில் சூரியன் எந்த நேரத்தில் உதிக்கும் சந்திரன் எந்த நாளில் எந்த நேரத்தில் தோன்றும், மறையும் முற்கூட்டியே கணித்து காலண்டர் போட்டு விடுகிறான். அவை தாமதமாகத் தோன்றினால் முன்பே எப்படி காலண்டர் தயாரிக்க முடியும். அவை நேர காலங்களை மிகச்சரியாக பயன்படுத்தி தமக்கு இடப்பட்ட கட்டளைப்படி சுழல்கின்றன. மனிதன் தான் கால நேரத்தில் பணிகளைச் செய்யாமல் காலம் கடத்தி பின்னர் கைசேதப்படுகிறான்.

நமது நேர காலங்களை பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதுடன் உரிய நேரத்தில் காரியங்களைச் செய்ய வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான், ”அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும் போது அவன் என் இறைவனே என்னை திரும்ப (உலகுக்கு) திருப்பி அனுப்புவாயாக என்று கூறுவான். நான் விட்டு வந்ததில் நல்ல கரியங்களை வெய்வதற்காக! அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே அன்றி வேறு இல்லை” அல்குர்ஆன் 23:99-100)

இந்த வசனங்களில் மனிதன் வாழ்நாளெல்லாம் நல்லறங்கள் செய்யாது கழித்துவிட்டு மரணம் நெருங்கும் வேளையில் நல்லறம் செய்ய முற்பட்டால் எந்தப்பயனும் அவனுக்குக் கிடைக்காது என்பதை தெளிவுபடுத்துகிறான். எனவே பொன் போன்ற நமது காலங்களை பயனுள்ள காரியங்களில் பயன்படுத்தி ஈருலகிலும் வெற்றி பெறுங்கள்.

”நீண்ட ஆயுள் கொடுக்கப்பட்டு, அவரது செயல்பாடுகளையும், நல்லவையாக அமைத்தவர் தான் மனிதர்களிலேயே மிகச் சிறந்தவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மிதி ஹதீஸ் எண் 2330).
(படித்து ஒவ்வொறு நொடிகளையும் அர்தமுள்ள பயனுளவையாக ஆக்கி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெருவோமாக ஆமின்.வரும் ரமலானை இவ்வாறு நல்லவை விதைத்து மேலும் , நன்மையை அறுவடை செய்வோமாக!)-
தகவல் தந்த உள்ளங்களுக்கு அல்லாஹ்வின் கிருபை உண்டாகட்டும்.
சகோ.முஹம்மது தஸ்தகீர்

Posted by crown on 8/25/2008 12:35:00 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for நேரம் பொன்னைவிட மேலானது.

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery